Sunday, April 28, 2024
Home » இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது

by mahesh
February 28, 2024 8:45 am 0 comment

பாத்ஃபைண்டர் அறக்கட்டளை மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாடு இன்று (28) காலை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இம்மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இந்துசமுத்திரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டும், உலகப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் செயற்பாடு ஆகியவற்றில் பிராந்தியத்தின் தாக்கத்தை வலியுறுத்தும் வகையில்,இம்மாநாடு நடைபெறுகிறது.

இரு தினங்கள் நடைபெறும் இம்மாநாட்டில், பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாக பாத்ஃபைண்டர் அறக்கட்டளை மன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் தூதரகங்கள் மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜப்பானின் தென்கிழக்கு, தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி அமைச்சர் ஹயாஷி மகோடோ ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்துசமுத்திரத்தின் பாதுகாப்பு உச்சி மாநாடு பாத்ஃபைண்டர் அறக்கட்டளை மன்றத் தலைவர் பெர்னார்ட் குணதிலக மற்றும் முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் ஆகியோரால் இணைந்து நடத்தப்படும். இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் மூலோபாயம் உட்பட இந்திய பெருங்கடல் சமூகத்தை பாதிக்கும் முக்கியமான தொனிப்பொருள்கள் குறித்து ஆழமாக ஆராயப்படும். மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் பிராந்திய முக்கியத்துவம். பாதுகாப்பு, பொருளாதார பரிமாணங்கள்,

காலநிலை மாற்றம், கடல் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதார ஊக்குவிப்பின் போது எழும் சிக்கல்கள் குறித்தும் கவனம்

செலுத்தப்படும். இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாடு, இணைய ஒளிபரப்பாகவும் வெளியிடப்படவுள்ளதால், அதில் பங்கேற்க விரும்புவோர் அல்லது ஒன்லைனில் தொடர்பு கொள்ள விரும்புவோர் அலுவலக நேரத்தில் 0114529952 என்ற தொலைபேசி எண்ணில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT