Sunday, April 28, 2024
Home » காசாவில் நிலைமை மேலும் மோசமடையும் சூழலில் பேச்சைத் தொடர்வது குறித்து இஸ்ரேல் ஆலோசனை

காசாவில் நிலைமை மேலும் மோசமடையும் சூழலில் பேச்சைத் தொடர்வது குறித்து இஸ்ரேல் ஆலோசனை

வடக்கு காசாவில் பசியால் இரண்டு மாத குழந்தை மரணம்

by damith
February 26, 2024 8:04 am 0 comment

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைக்கான அடுத்த கட்டம் குறித்து இஸ்ரேலிய போர் அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளது.

பாரிஸ் சென்று பணயக்கைதிகள் உடன்படிக்கை ஒன்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய தூதுக்குழு இஸ்ரேல் திரும்பி போர் அமைச்சரவைக்கு கடந்த சனிக்கிழமை (24) விளக்கமளித்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ட்சச்சி ஹனக்பி, ‘பாரிஸில் இருந்து தூதுக் குழு திரும்பியுள்ளது, உடன்பாடு ஒன்றை நோக்கிச் செல்ல சாத்தியமுள்ளது’ என்றார்.

இந்த சந்திப்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து பேசியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிவில் தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அடுத்து வரும் நாட்களில் தூதுக்குழு ஒன்றை கட்டாருக்கு அனுப்ப இணக்கம் எட்டப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் காசாவில் தனது திட்டம் தொடர்பில் பாரிஸ் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தெளிவற்ற நிலையில் இருந்ததாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘எந்த ஒரு உடன்படிக்கையும் கைதிகள் பரிமாற்ற உடன்பாடு ஒன்றுக்கான முயற்சியாகவே இஸ்ரேல் அவதானம் செலுத்தும் அதே நேரம், ஹமாஸ் எந்த ஒரு உடன்படிக்கையும் பேரை முடிவுக்குக் கொண்டுவந்து காசாவில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ என்று அந்த அதிகாரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். முன்னதான கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கையின்போது 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்போது கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

காசாவில் தொடர்ந்து பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டிருப்பது இஸ்ரேலுக்குள்ளும் நெதன்யாகு அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை (24) இரவும் டெல் அவிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணயக்கைதிகளை விடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

‘எப்படியாவது அவர்களை எம்மிடம் கொண்டுவரும்படி நாம் தொடர்ந்து கூறி வருகிறோம்’ என்று கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தனது சகோதரி ஹனான் கடத்தப்பட்ட நிலையில் 45 வயது அவிவிட் யப்லொங்கா தெரிவித்தார்.

டெல் அவிவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றதோடு அவர்கள் வீதிகளை மறித்து, நெதன்யாகு அரசை பதவி விலகும்படி கோசம் எழுப்பினர். அவர்களை கலைப்பதற்காக பெரும் எண்ணிக்கையான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

‘பொருளாதாரம் அல்லது அண்டை நாடுகளுடனான அமைதியில் அவர்கள் எம்மை சரியான பாதையில் வழிநடத்தவில்லை’ என்று 54 வயது மென்பொருள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மோட்டி குஷர் குறிப்பிட்டார். அவர்கள் ஒருபோதும் போரை முடிக்கப் போவதில்லை என்று தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் நெருக்கடி

முற்றுகையில் உள்ள காசாவில் நான்கு மாதங்களுக்கு மேலாக உணவு பற்றாக்குறை நீடிக்கும் சூழலில், முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. காசா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக எச்சரித்திருந்தது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உணவுகள் தீர்ந்துள்ளன. இங்கு தொடர்ந்து குண்டுகள் விழுவதால் உணவு வாகனங்கள் வர முடியாது இருப்பதோடு அப்படி வந்தாலும் இஸ்ரேலிய தரைப்படையின் தாக்குதல் அல்லது திருட்டுக்கு முகம்கொடுத்து வருகின்றன. குறிப்பாக சிறுவர்கள் பெரும் வேதனையை சந்தித்து வருகின்றனர்.

‘நாம் வளர்ந்தவர்கள் இன்னும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் இந்த சிறுவர்களுக்கு நான்கு ஐந்து வயது தான் ஆகிறது, பசியுடன் தூங்குவதற்கும், பசியுடன் எழுவதற்கும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?’ என்று கோபத்தில் ஆடவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இங்கு தங்கியுள்ள மக்கள் அழுகிய சோள குப்பைகள், மனிதன் உண்பதற்கு தகுதியற்ற விலங்குணவுகள் மற்றும் இலைகளைக் கூட உண்டு வருகின்றனர்.

காசா நகரில் மஹ்மூத் பத்தூ என்ற இரு மாதக் குழந்தை ஒன்று ஊட்டச்சத்தின்மையால் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு சனிக்கிழமை கூறியது.

‘காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேலிய அரசு தடுக்கும் வரை பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிக்கும்’ என்று சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு எச்சரித்துள்ளது.

காசா நகரில் இருக்கும் அல் ஷிபா மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் குழந்தை இறந்துள்ளது. இந்தக் குழந்தை மருத்துவமனை படுக்கையில் மூச்சுத்திணறியபடி இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

போர் வெடித்த ஆரம்பத்தில் காசாவுக்கான உணவு, நீர் மற்றும் எரிபொருள் என அனைத்து விநியோகங்களையும் இஸ்ரேல் துண்டித்ததோடு, கடந்த டிசம்பரில் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு ஒரே ஒரு எல்லையை திறந்தது. எனினும் அந்த கரம் அபூ ஷலேம் எல்லைக் நீடிக்கும் கடவையில் கடுமையான சோதனைகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் உணவு லொறிகள் செல்வதை தடுத்து வருவதாக உதவி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

காசாவுக்குள் உதவி விநியோகங்கள் சென்றாலும் போதிய பாதுகாப்பு இன்மை மற்றும் உதவிகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காசா பொலிஸார் மீது இஸ்ரேலிய படை தாக்குதல் நடத்துவதால் அதனை பகிர்வதில் இடையூறு நீடித்து வருகிறது.

இதில் வடக்கு காசா கடந்த ஒக்டோபர் தொடக்கம் உதவி விநியோகங்களில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல்

காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் காசா நகரில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் சேப்ரா பகுதியில் காலி குடும்பத்திற்குச் சொந்தமான குடியிருப்பின் மீதே வான் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிசின் மேற்குப் பகுதில் நேற்று இடம்பெற்ற புதிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் 94இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,700ஐ தாண்டியுள்ளது.

இதில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மீது சனிக்கிழமை இரவு பல வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கிருப்பவர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த நகரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் நிரம்பி வழிகின்றனர். இஸ்ரேலிய தரைப்படை நுழையாத ஒரே நகராக ரபா உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT