Monday, April 29, 2024
Home » லடாக் எல்லையில் 21 ஆவது தடவையாக இடம்பெற்ற சமரசப் பேச்சுவார்த்தை!

லடாக் எல்லையில் 21 ஆவது தடவையாக இடம்பெற்ற சமரசப் பேச்சுவார்த்தை!

இந்திய-சீன இராணுவ உயரதிகாரிகள் நேரில் சந்திப்பு!

by gayan
February 24, 2024 6:00 am 0 comment

நிரந்தர அமைதிக்கான அறிகுறி இல்லை; இருதரப்புப் படையினருக்கிடையில் அவ்வப்போது மோதல்கள்!

இந்தியா-_ சீனாவின் எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதி செய்ய இரு நாடுகளும் முயன்று வருகின்றன. இது தொடர்பாக கடந்த வாரம் இரு நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய இராணுவ தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பிலும் இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 3,488 கி.மீ உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) முழுவதும் பதுங்குகுழிகள், ஏவுகணை நிலைகள், வீதிகள் மற்றும் பாலங்கள் போன்ற புதிய இராணுவ உள்கட்டமைப்பை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஏற்கெனவே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனாவின் நடவடிக்கை இந்தியாவை சீற்றமூட்டியது. இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தை இவ்வாறே நீடித்து வந்த நிலையில் 12 மற்றும் 16 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஓரளவு ஒத்த கருத்துக்களை முன்வைத்தன. அதாவது, 12 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் இருதரப்புப் படைகளும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து பின்வாங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி படைகள் பின்வாங்கப்பட்டன.

13 இலிருந்து 15 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை வரையில், ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருக்கும் மீதமுள்ள படைகளையும் பின்வாங்குவதுதான் பதற்றத்தை நிலையாக தவிர்க்கும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் சீனா அந்த யோசனைக்கு ஒத்துழைக்காததால், இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இறுதியாக 16 ஆவது கட்டப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்தன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தைத் தணிக்க மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் உண்மை.

இதற்காக கடந்த 19 ஆம் திகதி 21ஆவது சுற்று இராணுவ உயரதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது. இதில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் நிரந்தர அமைதிக்கான வழிமுறைகள் குறித்து இரு நாடுகளும் தங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால் இதில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. எனவே 22 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று இராணுவத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதுஇவ்விதமிருக்க கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லைப் பகுதியில் நிலைமை சீராக இல்லை என்றும், அங்கு பதற்றம் நீடிப்பதாகவும் வடக்கு இராணுவ படைப்பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் வந்திருந்த வடக்கு இராணுவ படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இதனைத் தெரிவித்தார்.

“கிழக்கு லடாக்கின் வடக்கு எல்லைப் பகுதியின் நிலைமை ஸ்திரமாக இருப்பதாகத் தோன்றினாலும், நிலைமை சீராக இல்லை.அங்கு ஒருவித பதற்றம் நிலவுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

“பூஞ்ச்-ரஜோரி பிராந்தியத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் பிடிக்காததால் அண்டை நாடு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்று பாகிஸ்தானை குறிப்பிட்டு அவர் பேசினார்.

லடாக் (Ladakh) என்பது ஒன்றியப் பகுதியாக இந்தியாவால் நிர்வகிக்கப்படும் ஒரு பிராந்தியமாகும். இது அகன்ற காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். மேலும் 1947 முதல் இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையே சர்ச்சைக்கு ஆளான பகுதியாகும்.

லடாக்கின் கிழக்கே திபெத் தன்னாட்சிப் பகுதி, தெற்கே இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசம் மற்றும் இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியான ஜம்மு காஷ்மீர், மேற்கில் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் வடக்கு நிலங்கள், வடக்கே காரகோரம் கணவாய்க்கு குறுக்கே சிஞ்சியாங் தென்மேற்கு மூலை போன்றவை எல்லைகளாக உள்ளன.

இது வடக்கே காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனியாறிலிருந்து தெற்கே பிரதான பெரிய இமயமலை வரை நீண்டுள்ளது. மக்கள் வசிக்காத அக்சாய் சின் சமவெளிகளைக் கொண்ட கிழக்கு முனை, லடாக்கின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தால் உரிமை கோரப்பட்டு, 1962 முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த காலத்தில் லடாக் முக்கியமான வணிகப் பாதைகளின் நடுவில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.ஆனால் 1960 களில் சீன அதிகாரிகள் திபெத் தன்னாட்சி பிராந்தியத்திற்கும் லடாக்கிற்கும் இடையிலான எல்லைகளை மூடியதால், சர்வதேச வர்த்தகம் குறைந்தது. 1974 முதல் இந்திய அரசு லடாக்கில் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. லடாக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால், இந்திய இராணுவம் இப்பகுதியில் வலுவாக காலூன்றி உள்ளது.

லடாக்கின் மிகப்பெரிய நகரம் லே ஆகும். அதற்கடுத்து பெரிய நகரம் கார்கில் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு மாவட்டத்துக்கு தலைமையிடமாக உள்ளன.

லே மாவட்டத்தில் சிந்து, சியோக், நுப்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கார்கில் மாவட்டத்தில் சுரு, திராஸ், ஜான்ஸ்கர் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மக்கள்தொகை கொண்ட பகுதிகளாக உள்ளன. மலைச்சரிவுகளில் மேய்ச்சல் தொழில் செய்யும் சாங்பா நாடோடிகள் வாழும் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள முக்கிய மதங்களை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் (முக்கியமாக சியா _46%), பௌத்தர்கள் (முக்கியமாக திபெத்திய பௌத்தர்கள்_40%), இந்துக்கள் (12%), பிறர் (2%) உள்ளனர்.

லடாக் இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இதன் கலாசாரம் மற்றும் வரலாறு திபெத்தின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 31 ஒக்டோபர் 2019 அன்று லடாக் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக நிறுவப்பட்டது. அதற்கு முன்னர், இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. லடாக் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒன்றிய ஆட்சிப் பகுதி ஆகும்.

லடாக்கின் பல பகுதிகளில் காணப்படும் பாறைச் சிற்பங்கள் புதிய கற்காலத்திலிருந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக உள்ளன. லடாக்கின் ஆரம்பகால மக்கள் கம்பா என அழைக்கப்படும் நாடோடிகளாவர். குலுவைச் சேர்ந்த மோன்ஸ் மற்றும் கில்கித்தில் தோன்றிய பிரோக்பாஸ் ஆகியோரால் பின்னர் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.

முதல் நூற்றாண்டில் லடாக் குசானப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 2ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் இருந்து மேற்கு லடாக்கிற்கு பௌத்தம் பரவியது. 7 ஆம் நூற்றாண்டின் பௌத்த பயணியான சுவான்சாங் தனது குறிப்புகளில் இப்பகுதியை விபரித்துள்ளார்.

முதல் ஆயிரமாண்டின் பெரும்பகுதியில், மேற்கு திபெத்தின் போன் பௌத்த சமயத்தை கடைப்பிடித்த சாங்சூங் இராச்சியங்கள் இப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. காஷ்மீர் மற்றும் சாங்சூங்கிற்கு இடையில் உள்ள லடாக் இந்த இரு சக்திகளில் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது.

எட்டாம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து உருவான திபெத்திய விரிவாக்கத்திற்கும், மத்திய ஆசியாவிலிருந்து உருவான சீன ஆதிக்க முயற்சிக்கும் இடையேயான பிரச்சினையில் லடாக் சிக்கிக் கொண்டது.

இந்தியா எதிர்நோக்கி வருகின்ற எல்லைப் பிரச்சினையில் லடாக் பிரதேசம் பரபரப்பு நிறைந்ததாக இருந்து வருகின்றது. அப்பிரதேசத்தில் சீனா மற்றும் இந்தியப் படையினருக்கிடையிலான எல்லை மோதல்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT