Sunday, April 28, 2024
Home » இளைஞர், யுவதிகளுக்கு பொருத்தமான சூழல்
போட்டித் தன்மைமிக்க உலகச் சந்தையை வெற்றிகொள்ள

இளைஞர், யுவதிகளுக்கு பொருத்தமான சூழல்

உருவாக்கிக் கொடுக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

by Gayan Abeykoon
February 23, 2024 11:59 am 0 comment
இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிறுவன மாணவர்களுடன் ஜனாதிபதி

வீன உலகுக்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, நாட்டின் இளைஞர், யுவதிகள் போட்டித் தன்மையுள்ள உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்கு, உகந்த சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.  

இதற்கமைய நாட்டின்  சகல தொழில் பயிற்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு, புதிய விடயப்பரப்புக்களை உள்ளடக்கிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில்பயிற்சி நிலையத்திற்கு நேற்று (22) காலை மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

லலித் அத்துலத்முதலியின் நினைவாக   பிள்ளைகளின் நல்வாழ்வைக் கருத்திற் கொண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தற்போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கி வருகிறது.  மோட்டார் இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பம், முப்பரிமாண வடிவமைப்பு 3D,பாலர் பாடசாலை ஆசிரியர் பாடநெறி, நவீன தொழில்நுட்பப் பாடநெறி, அழகுக்கலை நிபுணர் பாடநெறி, மொழிப் பாடநெறிகள் உள்ளிட்ட,  நவீன உலகிற்கு தேவையான பல்வேறு பாடநெறிகள் இங்கு நடத்தப்படுகின்றன.

பாடநெறிகள் நடத்தப்படும் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களின் நலன்புரி மற்றும் பிற நலன் தொடர்பிலான விடயங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சிநேகபூர்வமாகவும் கலந்துரையாடினார்.மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக இலங்கையின் இளைஞர் யுவதிகள் முன்னோக்கிச் செல்லக் காணப்படும் வாய்ப்புகள் குறித்து இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தற்போது டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதன்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.  நாளாந்தம் மாற்றமடையும் தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

முன்பள்ளி கற்கைநெறியை மேற்கொண்டு சொந்தமாக முன்பள்ளியொன்றை நடாத்த எதிர்பார்ப்பதாகவும் அதற்கு ஒழுங்கான முறைமையொன்றை உருவாக்கித் தருமாறும் முன்பள்ளி கற்கைநெறியை கற்கும் மாணவியொருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதி, முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்துடன் இணைந்ததாக இந்தக் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அதனையடுத்து தொழில் பயிற்சி நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான பதிவேட்டில் குறிப்பை பதிவு செய்த   ஜனாதிபதி, மாணவர்களுடன் குழுப் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

பின்னர் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன்,   மாணவர்களின் செல்பி புகைப்படங்களிலும் இணைந்துகொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மஹேஷன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரும் பணிப்பாளருமான பசிந்து குணவர்தன,இளைஞர் மற்றும் நிலைபெறு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர, லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில்  இணைந்திருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT