Sunday, April 28, 2024
Home » ரபா நகர் மீதான தரைவழி தாக்குதலுக்கு ரமழான் மாதம் வரையில் இஸ்ரேல் கெடு

ரபா நகர் மீதான தரைவழி தாக்குதலுக்கு ரமழான் மாதம் வரையில் இஸ்ரேல் கெடு

by sachintha
February 20, 2024 8:35 am 0 comment

காசாவில் உயிரிழப்பு 29 ஆயிரத்தைத் தாண்டியது

காசாவில் தொடர்ந்து எஞ்சியுள்ள பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்காத பட்சத்தில் எதிர்வரும் ரமழான் மாத ஆரம்பத்தில் தெற்கு காசாவில் 1.5 மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீது படை நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இந்த நகரில் இருக்கும் பலஸ்தீனர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழலிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஏனைய சர்வதேச அரசுகள் அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை, ரபா மீதான தாக்குதல் திட்டத்தை கைவிடும்படி இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எனினும் எகிப்து எல்லையை ஒட்டிய இந்த நகர் ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என்று இஸ்ரேல் அரசு கூறுகிறது.

இங்கு காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு இவர்கள் மோதுமான உணவு, நீர் மற்றும் மருந்து வசதிகள் இன்றி சிறு கூடாரங்களில் தங்கி உள்ளனர்.

“ரமழானுக்குள் எமது பணயக்கைதிகள் வீடு திரும்பாவிட்டால் ரபா பகுதி உட்பட போர் அனைத்து இடங்களிலும் தொடரும் என்பதை உலகமும் ஹமாஸ் தலைவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஜெரூசலத்தில் அமெரிக்க யூதத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய ஓய்வுபெற்ற இஸ்ரேலிய இராணுவத் தளபதியும் போர் அமைச்சரவை உறுப்பினருமான பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

“ஹமாஸுக்கு ஒரு தேர்வு தான் உள்ளது. அவர்கள் சரணடைந்து, பணயக்கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில் காசாவில் உள்ள பொதுமக்கள் ரமழான் நோன்பை அனுஷ்டிக்க முடியும்” என்று கான்ட்ஸ் கூறினார்.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் உயிரிழப்புகளை முடியுமான வரை மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் எகிப்து கூட்டாளிகளுடன் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கான்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரினால் அந்த குறுகிய நிலத்தின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டு பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில் அங்குள்ள பலஸ்தீனர்கள் எங்கு செல்வது என்ற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் இல்லாமல் உள்ளது.

“இங்கே பாதுகாப்பான இடமில்லை. மருத்துவமனைகள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ரபா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு வந்த அஹமது முஹமது அப்துர்ரிஸ்க் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இதில் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்த உடல் ஒன்றை காண்பித்து, “இது எனது மைத்துனர். பாதுகாப்பு பகுதியான அல் மவாசியில் வைத்து அவர் உயிர்த்தியாகம் செய்தார். அதற்கு முந்தைய தினத்தில் எனது தாயும் உயிர்த்தியாகம் செய்தார்” என்று அப்துர்ரிஸ்க் கூறினார்.

பட்டினியால் அவதி

பலஸ்தீன போராளிகளின் பிடியில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவித்து போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகரில் முன்னெடுக்கப்பட்டபோதும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான சாத்தியத்தை குறைத்து மதிப்பிட்டு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸின் நிபந்தனைகள் ‘மாயை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உடன்பாடு ஒன்று எட்டப்பட்டாலும் கூட, ரபாவை சுத்தப்படுத்தாத வரை காசாவில் இருந்து ஹமாஸை ஒழிக்கும் நடவடிக்கை பூர்த்தியாகாது என்று குறிப்பிட்டுள்ளார். “உடன்பாடு எட்டப்பட்டாலும் எட்டப்படாவிட்டாலும் நாம் முழு வெற்றியை பெற்று வேலையை பூர்த்தி செய்வோம்” என்று ஜெரூசலத்தில் செய்தியாளர் சந்திப்பில் நெதன்யாகு கூறினார்.

ரபா தவிர காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. காசா நகரின் செய்தூன் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றுக் காலை குறைந்து மூன்று வீடுகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மறுபுறம் மத்திய காசாவில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அங்கு நகரும் அனைத்தின் மீதும் இஸ்ரேலிய படை சூடு நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த மருத்துவ வளாகத்தில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என 120க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிக்கியுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் மின்சார துண்டிப்பு மற்றும் வென்டிலேட்டர் கருவிகளின் செயலிழப்பினால் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனை தொடர்ந்தும் இயங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 29,000 தாண்டி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் எகிப்துடனான நிட்சானா எல்லைக்கடவை வழியாக பலஸ்தீனர்களுக்குச் செல்லும் உதவி லொறிகளை இஸ்ரேலியர்கள் கடந்த ஞாயிறன்று தடுத்து நிறுத்தியதாக ஏ.எப்.பி. மற்றும் பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளன.

கடும் பட்டினியால் விலங்குணவை மாவுடன் அறைத்து பயன்படுத்துவதாக காசா மக்கள் குறிப்பிட்டுள்ளனர். “எனது குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள், பசியால் அழுகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து நான் உணவை பெறுவது” என்று வடக்கு காசாவில் இருக்கும் பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

காசா நகரில் உதவி லொறிகளை மக்கள் சூழ்வதும் அதன் மீது இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதை அடுத்து மக்கள் அங்கிருந்து தப்பி ஒடுவதையும் காட்டும் வீடியோ காட்சியை அல் ஜசீரா தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.

காசா போர் பிராந்தியம் எங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் அதென் வளைகுடாவில் பிரேசில் கொடியுடனான சரக்குக் கப்பல் ஒன்றின் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட லெபனானில் இயங்கும் அந்தக் கப்பல் மூழ்கும் நிலையில் இருப்பதாக அந்தக் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் யஹ்யா சாரீ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் காரணமாக வடக்கு காசாவின் மேல் கலிலியோ பகுதியை சூழ நேற்று சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் படை மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT