Thursday, May 2, 2024
Home » மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம், பஞ்சரத பவனி

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம், பஞ்சரத பவனி

by damith
February 19, 2024 6:05 am 0 comment

மாத்தளை நகரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம் கடந்த 02.02.24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இவ் விழாவானது பகல் இரவு திருவிழாக்களாக நடைபெற்று வருகின்றது.

24.02.24 ஆம் திகதி பஞ்ச ரத பவனி நடைபெறும். வடக்கு நோக்கி 108 அடி நவதள நவ கலசம் கொண்ட நவதள இராஜகோபுரத்தை கொண்ட வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது. இவ்வாலயம் கொழும்பிலிருந்து 144 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கின்றது.

வடக்கையும் மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகர் விளங்கி வந்திருக்கின்றது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டபோது ‘தலைமன்னார்’ :”அரிப்பு’ இறங்குதுறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர்.

ஆதியில் மன்னாரிலிருந்து காட்டு வழியாக கால் நடையாக பெரும் துன்பப்பட்டு மாத்தளையை வந்தடைந்த மக்கள் இங்கிருந்த சிறு சிறு குழுக்களாக மலையக பெருந்தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்படி பெருந்தோட்டங்களில் குடியேற்றப்பட்ட மக்களே இந்திய வம்சாவளி மக்களாவர்.

இம் மக்களின் உழைப்பாலேயே மலையகம் இன்று செழிப்பாக இருப்பதற்குக் காரணமாகும். இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர்.

எங்கும் வியாபித்த அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீ முத்துமாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்யும் ஒருவரிடத்தில் கனவில் தோன்றி தன் திருஉருவத்தை ஒரு வில்வமரத்தடியில் வெளிப்படுத்தித் தன்னை பூஜிக்கமாறு கேட்டுக் கொண்டதிற்கிணங்க அன்றிலிருந்து அவ் வில்வ மரத்தடியில் சிலை-. வைத்து வணங்கி வந்தாக ஆரம்ப கர்ண பரம்பரைக் கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றது.

இப் பூர்வீக மக்களால் ஸ்தாபிக்கப்பட்ட இவ் வாலயத்தின் ஆரம்பகாலம் சரியாக குறிப்பிட முடியாவிட்டாலும் பல்லாண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது என யூகித்தக் கொள்ளலாம்.

முன்பு கூறியது போன்று அடியார் ஒருவருக்கு அம்பிகை கனவில் காட்சி கொடுத்துத் தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவ்விடத்தில் கற்சிலை வைத்து வணங்கி வந்த சக்திவாய்ந்த அம்பிகைக்கு ஆலயம் ஒன்று அமைக்க எம்மவர்களுக்கு வாய்ப்புகிட்டியமை பெரும் பாக்கியமே. ஏழில் மிகு இயற்கை சூழலையும் பௌதீக வளங்களையும் கொண்ட பண்ணாகாமத்தில் சிறுகொட்டில் அமைத்து வழிபட்ட ஆலயம் இன்று மாடமாளிகையாக வளர்ச்சிப் பெற்று விளங்குவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இத் திருவிழா காலத்தில் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் சுவாமி உள் வீதி வெளிவீதி திருவிழாக்கள் நடைபெறும் .

23.02.24 காலை 7.00 மணிக்கு சுடுகங்கை ஸ்ரீ ஏழு முகக் காளியம்மன் கோவிலிலிருந்து காவடி ஊர்வலம் புறப்படும் காலை 10.00 மணிக்கு தீமிதிப்பும் பகல் 11.00 மணிக்கு ஸ்ரீ சிவனடியார் திருவிழாவும் வசந்தமண்டப பூசையும் பி.ப.1.00 மணிக்கு மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) அன்றிரவு திருச்சூரகத் திருவேட்டைத் திருவிழாவும் நடைபெறும்.

24.02.24 காலை 8.00 மணிக்கு இரத்தோற்சவ வசந்த மண்டப பூசை நடைபெறும். 25.02.24 மாலை 7.00 மணிக்கு கற்பூரத் திருவிழா நடைபெறும்.

26.02.24 காலை 8.00 மணிக்கு பாற்குட பவணியும் காலை 10.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் மாலை 7.00 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும்.

27.02.24 காலை 11.00 மணிக்கு ஸ்ரீ சண்டேஸ்வரி உற்சவமும் மாலை 6.00 மணிக்கு பூங்காவன உற்சவமும் நடைபெறும். இந்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன, மத, பேதமின்றி எல்லா இன மக்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

டி. வசந்தகுமார் - நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT