Monday, April 29, 2024
Home » அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாக்க வேண்டியது அவசியம்

அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாக்க வேண்டியது அவசியம்

அரசின் நிலைப்பாடும் இதுவே என்கிறார் பிரதமர்

by damith
February 19, 2024 10:15 am 0 comment

அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும். இல்லையெனில், நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்குமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் (16) அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தொழிற்சங்கங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கொண்டுநடத்தல் தொடர்பான பல விடயங்களை இதன்போது அவர்கள் முன்வைத்தனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- “இந்த அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நிலைப்பாட்டிலே நாங்கள் உள்ளோம். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும்.இல்லையென்றால், நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் ஓரளவு மீண்டிருப்பதால், முக்கியமான வங்கிகளை எப்படியேனும் பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இன்னும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். பல பாரிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்தான், பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு கடன் கொடுத்ததாலேயே, வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது, அதை தனியார் நிறுவனத்துக்கு விற்பதுதான் ஒரே வழி என்பவையெல்லாம் புனையப்பட்ட கதைகள். இதுபோன்ற கதைகளில் நாம் ஏமாறாமல், இந்த மூன்று வங்கிகளிலும் சிறப்பான முறையில் தலையிட வேண்டும். பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

3,500 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் எந்த விதத்திலும் புதிய வீடுகள் கட்டப்படமாட்டாது. இது அரசின் முடிவு. அந்தப் பகுதிகள் படிப்படியாக வனப் பாதுகாப்பிற்கு விடுவிக்கப்படும். தற்போது நாம் இணங்கியுள்ள சர்வதேச காலநிலை மாற்ற உடன்படிக்கையின் படி, மூவாயிரம் அடிக்கு மேல் உள்ள தோட்டங்களை குடியிருப்பாளர்கள் இன்றியே வைத்திருக்க முடியும்.

இதுபோன்ற உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு என்ன செய்வது என்று இந்நாட்களில் கலந்துரையாடப்படுகிறது. பெருந்தோட்டங்களில் 1,43,000 வீட்டு உரிமையாளர்களே உள்ளனர். ஏனையவர்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை.”

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT