Thursday, May 16, 2024
Home » அன்னை புவனேஸ்வரி இல்லம் ஊடாக 9 ஆவது ஆண்டாக தொடரும் பணிகள்

அன்னை புவனேஸ்வரி இல்லம் ஊடாக 9 ஆவது ஆண்டாக தொடரும் பணிகள்

by damith
February 19, 2024 10:20 am 0 comment

இவ்வுலகில் இருந்து நீங்கிய நிலையிலும், புகழுடன் திகழ்பவர்களின் நினைவாக இடம்பெறுகின்ற சமூகசேவைகள் முக்கியமானவை. இத்தகைய பேறு எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அவர்களில் ஒருவர்தான் அமரர் புவனேஸ்வரி அவர்கள்.

உயிருடன் வாழ்ந்தபோது குடும்பத்தின் மீது அதிகப் பற்றுடையவராக அன்புமழை பொழிந்தது மட்டுமல்லாமல் அயலவர்கள் மீதும் சமூகத்தின் மீதும் அளவற்ற பாசம் கொண்டு செயற்பட்டதனால் ‘புவனேஸ்வரி அக்கா’ என்று பலராலும் அன்னை புவனேஸ்வரி அவர்கள் அழைக்கப்பட்டார்.

லண்டனில் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்த நிலையில் அவரது உயிர் பிரிந்த போதிலும், அவருடைய உள்ளம் என்னவோ அவர் வாழ்ந்த வவுனியா குடியிருப்பு கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த பகுதிகளிலுமே நாடியிருந்தது. இந்த சமூகப் பற்றின் காரணமாகவே அவரது புகழுடல் அவரது குடும்ப வாரிசுகளினால் குடியிருப்பு இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன.

வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதிலும் பிறந்த மண்ணையும் கூடி வாழ்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அந்த சமூகத்துடன் ஒன்றித்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட அன்னை புவனேஸ்வரி அவர்களின் பிள்ளைகள் அவருடைய பூதவுடலை பூந்தோட்டம் மயானத்தில் எளிமையான முறையில் தகனக்கிரியை செய்தனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் அன்னை புவனேஸ்வரிக்கென ஓர் இல்லத்தை அவரது பிள்ளைகள் அமைத்தனர். அதற்கு ‘அன்னை புவனேஸ்வரி’ இல்லம்’ எனப் பெயர் சூட்டி, பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அன்னை புவனேஸ்வரி இல்லம் தற்போது கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றது. பௌதிக ரீதியாக மட்டுமன்றி கல்வி, மருத்துவம், சமூகநலன் எனப் பல்வேறு வழிகளில் ஆண்டுதோறும் அவருடைய வருடாந்த நினைவுதினத்தன்று சமூகப் பணிகளை ஆற்றி பாதிக்கப்பட்டவர்களையும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களையும் அன்புடன் அரவணைத்து அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை அந்த இல்லத்தின் ஊடாக அவரது பிள்ளைகள் வழங்கி வருகின்றனர்.

அன்னை புவனேஸ்வரியின் பெயரிலான அறப்பணிகள் ஆண்டுதோறும் அவரது நினைவு தினத்தன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய வசதிகள் குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல், வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம் ஊடாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கல், பாடசாலைக்குச் செல்வதற்கு வசதியின்றித் தவிக்கும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கல், உயர்கல்வி வாய்ப்பைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குச் சென்று கல்வி பயில வசதியற்ற மாணவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்கல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அன்னை புவனேஸ்வரி ஞாபகார்த்த உயர்கல்வி உதவி நிதியின் மூலம் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அரச துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் நல்ல நிலையிலான பதவிகளை வகித்து வருகின்றனர். வசதியற்ற மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்விக்கான நிதியுதவி தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான அன்னை புவனேஸ்வரியின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக நேற்று (18.02.2024) அவர் பெயரிலான அறப்பணிகள் வவுனியா பூந்தோட்டம் நினைவாலயத்தின் இடம்பெற்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT