Sunday, May 12, 2024
Home » அதிக உஷ்ண காலநிலையில் அவதானம் பேணுவது அவசியம்

அதிக உஷ்ண காலநிலையில் அவதானம் பேணுவது அவசியம்

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

நாட்டின் காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வழமையாக ஏற்படக்கூடிய மாற்றமாகும். சுமார் நான்கைந்து மாதங்களாக நீடித்த கடும் மழைகாலநிலையைத் தொடர்ந்து வரட்சியுடன் கூடிய காலநிலை தற்போது ஆரம்பமாகி உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இவ்வரட்சிக் காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்க முடியும். அதேநேரம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் ஆரம்பப் பகுதி முதல் சில தினங்களுக்கு இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும். இவ்வாறு சூரியன் உச்சம் கொடுப்பது வழமையாகும்.

இந்நிலையில் எதிர்வரும் சில மாதங்களுக்கு நாட்டில் அதிக உஷ்ணமும் வரட்சியுடன் கூடிய காலநிலையும் நீடிக்கும். அதனால் வரட்சி மற்றும் அதிக உஷ்ணம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியம். இதனை தம் பொறுப்பாக ஒவ்வொரு குடிமகனும் கருதி  செயற்பாடுகளை அமைத்துக்கொள் வேண்டும்.

ஏனெனில் கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் நாடு கடும் வரட்சிக்கு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாட்டின சில பிரதேசங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. அதேநேரம் இவ்வரட்சி காரணமாக உணவு உற்பத்தி பயிர்ச்செய்கை உள்ளிட்ட பலவிதமான பயிர்களும் அழிவுற்றதோடு, வனவிலங்குகள் அடங்கலான உயிரினங்களும் கூட தண்ணீர் தேடி அலையும் நிலைக்கு உள்ளாகின. வனாந்தரங்களிலுள்ள நீர்த்தடாகங்களும் குளங்களும் வற்றி வரண்டமையே இதற்கான காரணமாகும்.

அதனால் தற்போதைய வரட்சி அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்காத வகையில் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த நான்கைந்து மாதங்களில் போதியளவிலான மழைநீரை இந்நாடு பெற்றுக்கொண்டது. ஆனால் அந்த மழைநீரில் பெரும்பகுதி சேமிக்கப்படவோ பயன்படுத்தப்படவோ இல்லை. அவை பயன்படுத்தப்படாத நிலையில் கடலில் கலந்தது. கடும் வரட்சிக்கு முகம்கொடுத்த போது தண்ணீரின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவ்வாறான வரட்சியைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற மழைநீரின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாதும் சேமிக்கப்படாதும் கடலில் கலக்கப்படுவதைத் கண்டு பலரும் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இந்நாட்டை ஆட்சி செய்த மன்னரான பராக்கிரமபாகு, ‘ஆகாயத்தில் இருந்து கிடைக்கப்பெறும் ஒரு துளி நீரையும் பயன்படுத்தாது கடலில் கலக்க விட மாட்டேன்’ என்று பகிரங்கமாகவே ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். இந்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தைப் பெரிதும் ஊக்குவித்த மன்னராக விளங்கும் பராக்கிரமபாகு இந்நாட்டு வரலாற்றில் தனி இடத்தைப் பெற்ற ஒருவராவார். அவரது காலத்திலேயே தண்ணீரின் முக்கியத்துவம் உணரப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இது.

அதேநேரம் இவ்வருடம் தற்போதுதான் அதிக உஷ்ணத்துடன் கூடிய வரட்சிக் காலநிலை ஆரம்பித்திருக்கிறது. சில பிரதேசங்களில் இப்போதே குடிநீருக்கு பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் அதிக உஷ்ணத்துடன் கூடிய இவ்வரட்சி காலநிலையின் விளைவாக உடல் ஆரோக்கிய ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அச்சுற்றுத்தல்கள் நிலவுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோயியல் மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேராவின் கருத்துப்படி, நாட்டில் நிலவும் அதிக வெப்ப வானிலையினால் உடலில் நீரிழப்பு ஏற்படலாம். அதன் விளைவாக களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் வெளிப்படாலாம். அதனால் ஒவ்வொருவரும் தினமும் போதியளவில் நீரை பருகி நீரிழப்பைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில் இது காலத்திற்கு அவசியமான அறிவுறுத்தலாகும். அதிக உஷ்ணம் நிலவும் போது நீரிழப்புக்கு முகம்கொடுக்க நேரிடும். இப்பிரச்சினைக்கு சிறுவர்கள் உள்ளிட்ட எல்லா வயது மட்டத்தினரும் உள்ளாகலாம். குறிப்பாக வயல் உள்ளிட்ட திறந்தவெளி இடங்களில் வேலை செய்பவர்கள் இப்பிரச்சினைக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் மிக அதிகமாகும். அதனால் அடிக்கடி நீரை அருந்திக் கொள்ள வேண்டும்.

உடலில் நீரிழப்பு ஏற்படுவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தத் தவறும் பட்சத்தில் உயிரிழப்புக்குக் கூட முகம்கொடுக்க நேரிடலாம். இவ்வாறான உயிரிழப்புக்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பதிவாவது வழமையாகும்.

அதனால் வரட்சிக் காலத்தில் முகம்கொடுக்கக்கூடிய நீரிழப்பு தொடர்பில் கவனயீனமாகவோ அசிரத்தையாகவோ நடந்து கொள்ளக்கூடாது. அத்தோடு தண்ணீர் வீண்விரயம் செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும். இவற்றின் ஊடாக அதிக உஷ்ணத்துடன் கூடிய வரட்சிக் காலநிலையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT