கத்தோலிக்கத் திருச்சபை கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி லூர்து அன்னை திருவிழாவை சிறப்பித்தது.
உலகெங்கிலும் உள்ள மாதாவின் ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் திருவிழாக்கள் இடம் பெற்றதுடன் ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாக் காலங்களில் அற்புதங்கள் நடைபெற்றும் வருகின்றன
மாதாவின் பரிந்துரை அவரை அண்டி வந்தோர் அனைவருக்கும் அருட் கடாட்சமாக பொழியப்பட்டு வருகின்றது.
1858 பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் 1858 ஜூலை 16 வரை அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் பெர்னதத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு தொடர்ச்சியாக காட்சியளித்தார்.
பெப்பிரவரி 25 ஆம் திகதி காட்சியில் மரியன்னையின் கட்டளைப்படி பெர்னதெத் ஒரு இடத்தில் மண்ணில் தோண்ட அங்கு நீரூற்று பீறிட்டெழுகின்றது. அதுவே பின்நாளில் ஓடையாக மாறி இன்றும் திருப்பயணிகளின் நோய் நீக்கும் அற்புத சுகமளிக்கும் இடமாக அந்த நீரூற்று திகழ்கிறது.
இன்றும் எண்ணற்ற நோயாளிகள் லூர்து நகருக்கு யாத்திரையாக சென்று அங அற்புத சுகம் பெற்று செல்கின்றனர். லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்படும் பெப்ரவரி 11 ஆம் நாளை திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் உலக நோயாளர்கள் தினமாகத் தேர்ந்தெடுத்து 1992 ஆம் ஆண்டிலிருந்து நாம் அதனைக் கொண்டாட வழிவகுத்திருக்கின்றார். அந்த வகையில் இந்த ஆண்டு நாம் உலக நோயாளர்கள் தினத்தின் வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடுகின்றோம்.
திருத்தந்தைக்கு பார்கின்சன் நோய் இருந்ததென்று 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயோடுதான் 14 ஆண்டுகள் அவர் போராடி வாழ்ந்து திருச்சபையில் தனது பணிகளைச் செய்தார். இந்த நோயில் அவர் அடியெடுத்து வைத்ததும் உலகில் பல்வேறு நோய்களால் துன்புறும் மக்களோடு தன்னையே இணைத்துக் கொண்டார்.
இந்த உலகில் நோயினால் அவதியுறும் ஒவ்வொருவருடனும் நாம் இணைக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வானது நாம் நோயுற்றிருக்கும் வேளையில் நமக்குள் எழ வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல நோயுற்றோர் மீது இயேசு கொண்டுள்ள மனநிலையை நாமும் பின்பற்றுவோம். இயேசு ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டி, அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் இதயங்களை நம்பிக்கை வாழ்வுக்கு திறந்தார்.இந்த மனநிலையோடு நோயாளர்களின் சேவை இல்லச் சந்திப்புகள் அமையட்டும்.
இன்று நம் குடும்பங்களில் நோயுற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருடன் நேரம் செலவழிக்கத் தயங்குகிறோம். ஆனால் நோயுற்ற நம் சகோதர சகோதரிகளுடன் உடனிருப்பது, அவர்களுடன் நாம் நேரம் செலவிடுவது மிக மிகப் புனிதமானது என்கிறார் நம் திருத்தந்தை.
இந்த இணைப்பால் நாம் பெற்ற அனுபவத்தை நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். சுயநலத்தால் நோயுற்றோரை விட்டு விலகிச் செல்லும் நம்மவர்களை நோயுற்றோரின் படுக்கையின் அருகில் கொண்டுவந்து அவர்களுடன் உடனிருக்க வைப்போம். அவர்களுக்கு நாம் காட்டும் அக்கறைதான் இயேசுவின் எனக்கே செய்தீர்கள் என்ற பாராட்டை நமக்குப் பெற்றுத் தரும் என்பதை உணர்வோம்.
உலக நோயாளர்கள் தினத்தின் 25 ஆம் ஆண்டை கொண்டாடும் இவ்வேளையில் ‘வல்லவராம் கடவுள் எனக்கு மாபெரும் செயல்கள் பல புரிந்துள்ளார்’ (லூக்கா 1:49) என்ற மரியன்னையின் வார்த்தைகளையே திருத்தந்தை மையச் சிந்தனையாகத் தந்துள்ளார்.லூர்து அன்னையின் பரிந்துரையில் நம்பிக்கை வைத்து நோயுற்ற நம் சகோதர சகோதரிகளுக்காக செபமாலை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
- அருட்பணி. பென்சிகர் லூசன்