Wednesday, May 15, 2024
Home » விபூதிப் புதனுடன் ஆரம்பமாகும் தவக்காலம்

விபூதிப் புதனுடன் ஆரம்பமாகும் தவக்காலம்

by damith
February 13, 2024 6:00 am 0 comment

விபூதிப் புதனுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன் கிழமை இவ்வருடத்தின் தவக்காலம் ஆரம்பமாகிறது.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் வருடாந்தம் 40 நாட்கள் இந்த தவக்காலம் அனுஷ்டிக்கப்படுகின்றது. விபூதிப் புதனில் ஆரம்பமாகும் தவக்காலம் பெரிய வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்று அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தவக்காலம். இறைவேண்டல், தவமுயற்சிகள், தருமம் செய்தல், ஒறுத்தல் போன்ற நற்செயல்களை மேற்கொள்வதற்கான காலம் இந்த தவக்காலம்.

அதிலும் குறிப்பாக பிறரன்பு செயல்கள்,நோன்பு, செபம் எனும் மூன்று செயல்களை அதிகமாக வலியுறுத்தும் காலம் இது.நமக்காக துன்பங்களை அனுபவித்து பாடுபட்டு இறந்து உயிர்த்த இயேசுவிற்காக நாம் நம்மை ஒறுத்து செயற்படும் காலம் இது.

தவக்காலம் நோன்பின் காலம் அருளின் காலம் மனமாற்றத்தின் காலம். நமது பழைய பாவ இயல்பை விடுத்து புதிய இயல்பை அணிந்து கொண்டு புதுவாழ்க்கை வாழ நம்மை தூண்டும் காலம்.

கடவுள் நோவாவின் பழைய ஏற்பாட்டு காலத்தில் பாவம் செய்த மக்களை தண்டிக்க 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின் மேல் மழைபொழியச் செய்தார். இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்திற்காகவும் கடவுளின் அருளைப் பெறுவதற்காகவும் மோசே மற்றும் எலியா இருவரும் 40 நாள்கள் தங்களை வருத்தி நோன்பிருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் தங்களது பாவத்திற்குப் பரிகாரமாக 40 ஆண்டுகள் கானான் நாட்டிற்குச் செல்வதற்காக பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். இயேசு தனது பணிவாழ்விற்குள் நுழையும் முன் 40 நாட்கள் நோன்பிருந்து பாலைவனத்தில் அலகையினால் சோதிக்கப்படுகின்றார். ஆக 40 என்ற எண் முழுமையின் அடையாளமாகவும் மனமாற்றத்திற்கான காலமாகவும் கருதப்படுவதால் தவக்காலத்தையும் நாற்பது நாட்களாக சிறப்பிக்க திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இயேசுவைப் போலவே நாமும் நாற்பது நாட்கள் இறைவனைப் பற்றி சிந்திக்கவும் அவர் நம் உடன் இருக்கின்றார் என்பதை உணரவும், நமக்கான கடவுளின் திட்டம் என்னவென்று சிந்தித்து நம்மை நாமே கேள்விக்குட்படுத்தவும் அதை அமைதியுடன் வரவேற்கவும் இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம்.

கடவுள் நமக்குள் இருந்தால் நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவருடைய விருப்பத்தின்படி அவருடைய செயல்களின் வெளிப்பாடாகவே இருக்கும். தவறு செய்வது மனித இயல்பு அதிலிருந்து மீண்டு நற்செயல்களினால் நமது வாழ்வை நாம் மாற்றியமைக்க அழைக்கப்படுகின்றோம்.

அவரை நோக்கித் திரும்பி வரவும் மனம் மாறவும் அழைக்கப்படும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை சிறிதளவாவது குறைக்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுடனான நமது வாழ்க்கை எவ்வளவு உண்மையானது என்பது பற்றி சிந்தித்தால்

திருச்சபை தனது பிள்ளைகளாகிய நம் அனைவரையும் மனமாற்றத்தின் பாதையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் தவக்காலத்தை சிறப்பிக்க அழைக்கிறது.

இயேசுவின் ஆன்மிக ஞானம், உள்ளார்ந்த செபம், அமைதி, நோன்பு, ஒற்றுமை, பகிர்வு போன்ற பண்புகளில் நாம் வளரவேண்டும். நமது புலன்களை அதன் இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறைவனே எல்லாவற்றுக்கும் மேலானவர். அவர் ஒருவர் மட்டுமே நமக்குப் போதும் என்று நாம் உணரவேண்டும்.

கடவுள் நம்மை அளவுக்கதிகமாக அன்பு செய்கின்றார் என்பதை உணர்ந்து கடவுள் நம்மேல் காட்டிய இரக்கத்தையும் அன்பையும் நாம் நம் உடன் வாழ்பவர்களிடத்தில் இத் தவக் காலத்தில் பகிர முயல்வோம். கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் திறந்த இதயத்துடன் இருக்க முயற்சிப்போம்.

இயேசு தன்னுடைய எந்த செயல்களையும் தொடங்குவதற்கு முன் தனித்திருந்து செபித்தார். தன்னுடைய 12 வயதில் இறைவேண்டலையும் இறை பிரசன்னத்தையும் தேடத் தொடங்கிய அவர் இறுதி வரை தவத்தையும் தனிசெபத்தையும் ஒரு போதும் கைவிடவில்லை.

பணி தொடங்குவதற்கு செபத்தில் முன் தனித்திருந்தார். புதுமைகள் செய்ய தொடங்கும் முன்னும், செய்து முடித்த பின்னும் இறை செபத்தில் தனித்திருந்தார். தனிமையில் ஒருவருடன் பேசுவதற்கு முன்பும் கூட்டத்தினருக்கு மத்தியில் பேசும்போதும் தனித்திருந்து தன்னுடைய செப ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார்.

இயேசு தான் வாழ்ந்தது போல நம்மையும் வாழச்சொல்கின்றார். அவர் வாழ்ந்து காட்டி விட்டார். நம்மை வாழ அழைக்கின்றார். அருளை அள்ளித் தரும் இத்தவக்காலத்தில் தனிசெபத்திலும் ஒறுத்தலிலும், பிறரன்பு பணிகளிலும் நம் நேரத்தை செலவிடுவோம். தவக்காலத்தை அருள் தரும் காலமாக மாற்றுவோம்.

தானம், நோன்பு, செபம் என அனைத்தும் வலியுறுத்துவது அன்பையே. தவக்காலம் அன்பை வலியுறுத்தும் காலம். அன்பில் நிலைத்திருப்போம். அன்பால் நிலைத்திருப்போம். தவக்காலம் என்னும் வசந்த காலம் வாழ்வில் வளமையை அள்ளித்தரட்டும்.

நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம். ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன்வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில் ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும் தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம்.

இந்தத் தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும் நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர் இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக சுடர்விடும்.

கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள் இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை இரசிக்கப்படவில்லை என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும், எல்லா நேரமும் இரசிப்பதில்லை. அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம் செய்கின்ற நற்செயல்களை இரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும் இருக்கும் உலகில் தான் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து வாழ்ந்தால் நல்விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள் புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை ஒளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்ற நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப நமது ஒளி இயேசு என்பதை உணர்வோம். அவர் நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம் செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம்

மெரினா ராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT