Monday, April 29, 2024
Home » ஐந்தாறு வருடங்களில் 67 பில். டொலர் முதலீடுகள் எதிர்பார்ப்பு

ஐந்தாறு வருடங்களில் 67 பில். டொலர் முதலீடுகள் எதிர்பார்ப்பு

- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

by Rizwan Segu Mohideen
February 13, 2024 11:26 am 0 comment

சுற்றுச்சூழல் நேய எரிசக்தி மூலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் இந்தியா அடுத்துவரும் ஐந்தாறு வருடங்களில் 67 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாக எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய எரிசக்தி வாரத்தின் பிரதான வைபவத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கோவாவில் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தியாவின் ஆற்றல் வளங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு இம்மாநாடும் கண்காட்சியும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மற்றும் உலகளாவிய பிரதிநிதிகள் பங்குபற்றிய இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவின் அபிவிருத்தியில் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. 2045க்குள் இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதனைக் கருத்தில் கொண்டு மலிவாகவும் நிலைபேறானதாகவும் எரிசக்தி வளங்களைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அதன் பயனாக உலகில் பெற்றோல் விலை குறைவாகக் காணப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்குகிறது. கோடிக்கணக்கான வீடுகளின் மின்சாரத் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா முன்னொரு போதும் இல்லாத வகையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இதன் நிமித்தம் 11 இலட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பகுதி எரிசக்தி துறைக்கு செலவிடப்படும்.

உலகில் உயிரியல் எரிசக்தி பாவனையை ஊக்குவிக்க 22 நாடுகளும் 12 சர்வதேச நிறுவனங்களும் முன்வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT