Thursday, May 9, 2024
Home » முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள்

- பாடசாலை மாணவி ஒருவரின் தவறான முடிவு

by Prashahini
February 13, 2024 4:48 pm 0 comment

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் நேற்று (12) பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் ,உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு வந்த தாய் ,தந்தையர் மகளை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இவரது உடல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் வருகைதந்து சடலத்தினை பார்வையிட்டு மாணவி தூக்கில் தொங்கிய வீட்டையும் பார்வையிட்ட பின் தாய் தந்தையர்களிடம் விடயங்களை கேட்டறிந்து மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை காதல் செய்துவந்த குறித்த யுவதி தனது காதலனுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய காலங்களில் இளவயது மரணங்கள் தற்கொலைகள் தற்கொலை முயற்ச்சிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு சில தினங்களுக்கு முன்னரும் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு சிறுமி தற்கொலைக்கு முயற்சித்து உறவினர்களால் காப்பாற்றப்பட்டார்.

முன்னைய காலத்தில் கலாசாரம் மிக்க சமூகமாக இருந்த எமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கெட்டு சம்பவங்கள் சிறுவர்களை இளவயதினரை வெகுவாக பாதித்துள்ளது சிறுவர்களை காதல் வலையில் விழுத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திவிட்டு அவர்களை ஏமாற்றுவதும் என பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. பெற்றோர்கள் சிறுவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக சிறுமிகள் பாடசாலை சென்று வருகின்ற போதும் மேலதிக, பிரத்தியேக வகுப்புகள் சென்று வரும்போதும் விசேடமாக தொலைபேசி பாவனை என்பது தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. குறிப்பாக பிள்ளைகள் தொலைபேசி பாவிக்கும் போதும் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக எமது இளவயதினர் இவ்வாறு வீணாக உயிரை மாய்க்கின்ற சம்பவங்களை குறைக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் மிகவும் அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT