Monday, April 29, 2024
Home » பாதுகாப்பான, வளமான இந்துசமுத்திரத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைவோம்!

பாதுகாப்பான, வளமான இந்துசமுத்திரத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைவோம்!

by damith
February 12, 2024 6:00 am 0 comment

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆம் ஆண்டளவில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை ‘நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ள பேர்த் நகருக்கு வருகை தர கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எங்கள் அனைவருக்கும் வழங்கிய விருந்தோம்பலுக்கு அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த இந்திய மன்றத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் கடல் ஆகிய இரு கடல் எல்லைகளிலும் அவுஸ்திரேலியக் கண்டம் அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது. மேலும், இலங்கை – அவுஸ்திரேலிய உறவுகளின் வரலாற்றில் பேர்த் நகரம் முக்கிய பங்கை வகித்துள்ளது.

காலனித்துவத்திலிருந்து ஆசியா விடுவிக்கப்பட்ட நேரத்தில், ஆசியாவின் புதிதாக சுதந்திர நாடுகளான இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, பர்மா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை காலனித்துவத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்கும் நோக்கத்துடன் 1955 இல் பெண்டுங் மாநாட்டைக் கூட்டின. பெரும் வல்லரசுகளின் போட்டியை எதிர்க்கும் இந்த மாநாட்டின் பிரகடனத்தைத் தொடர்ந்து அணிசேரா இயக்கம் உருவானது.

உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மேற்குலகத் தடைகள் காரணமாக சீனா மற்றும் மேற்கு இந்து சமுத்திரத்தின் வளம் நிறைந்த பொருளாதாரங்களில் புதிய சந்தைகளைக் கண்டறிய வழிவகுத்தன. உதாரணமாக, வளைகுடா பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் ரஷ்ய மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. லண்டனுக்கு பதிலாக, துபாய் ஆதிக்கவாதிகளின் நிதி மையமாக மாறியுள்ளது.

ரஷ்யாவுடன் ஈரான் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டுள்ளதுடன், அது ட்ரோன் விமானங்களுக்கான முக்கிய விநியோக ஆதாரமாக உள்ளது. ரஷ்யா, மியான்மார் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளுடன் கடற்படை பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பிளவைக் போக்குவதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. ஈரானும் அதன் நட்பு நாடுகளும் மேற்கு ஆசியாவில் முக்கியமான செயற்பாட்டுடைய நாடுகளாக மாறிவிட்டன.

ஷெங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவை உறுப்பினர்களாக இருப்பதால், அதன் வெளிப்புற எல்லையாக மேற்கு இந்து சமுத்திரம் உள்ளது.

காஸா போரை ஆதரிப்பதில் அமெரிக்காவின் எச்சரிக்கையான தீர்ப்பு அதன் செல்வாக்கைக் குறைக்கிறது. இந்து சமுத்திரத்தில் இஸ்லாமிய வளைவை தோற்றுவித்த நாடுகளுக்கு இடையிலான பகைமை, அமெரிக்காவிற்கும் நட்பு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய உறவுகள் ஏற்படுவதை குறுகிய காலத்திற்குத் தடுக்கும்.

ரஷ்ய, சீன மற்றும் ஈரானிய உத்திகள் அமெரிக்க மேலாதிக்கத்தை வெற்றிகரமாக தாக்கிக்கொண்டிருப்பதோடு, அதன் மூலம் அமெரிக்காவை மேலும் பலவீனப்படுத்துகின்றது.

எனவே, இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்கு, 05 ஆண்டுகளுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுதல் மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற நடவடிக்கைகளின் மூலம் காஸா போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமாகும்.

மூன்றாவதாக, யெமனைத் தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் ‘கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு’ சவாலாக உள்ளன. சுயஸ் கால்வாய், செங்கடல், பப்-எல்-மெண்டெப் மற்றும் ஏடன் வளைகுடாவுக்கான பிரவேசித்தல் மற்றும் அதன்னூடான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாம் மீண்டும் ஒரு முறை சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றோம்.

கடலுக்கு கீழ் உள்ள கேபிள்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்து சமுத்திரத்தின் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மனிதக் கடத்தல் அதிகரித்துள்ளன. சட்டவிரோதமான, அறியப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தல் இன்னும் நிகழ்கிறது, இந்த அச்சுறுத்தல்கள் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.

இந்து சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் குறித்து நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதோடு, இந்து சமுத்திரத்தில் உள்ள நாடுகளின் சுதந்திரம் குறித்த கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை முன்வரும்.

நான்காவது விடயம், தொடர்பை விரிவாக்குவது. 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள வேறு சில நாடுகளிலும் இதே வளர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கூடுதல் துறைமுக வசதிகள் மற்றும் புதிய போக்குவரத்து வழிகள் தேவைப்படுகின்றன.சுயஸ் கால்வாய் போதுமானதாக இருக்காது. இதனால் இந்தியாவில் இரண்டு புதிய இணைப்பு முயற்சிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். வெப்பமயமாதல் அளவு பசுபிக் பெருங்கடலை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்து சமுத்திரம் பகுதி முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகள் தொடர்ந்து கடல் மட்டத்தில் உயர்ந்து கடுமையான கரையோர அரிப்பை எதிர்கொள்கின்றது.

இந்து சமுத்திரம் ஆண்டுக்கு 3.7 மி.மீ என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதுடன், மேலும் தீவிர கடல் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவையாகிவிடும். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகள் பாதிக்கப்படக்கூடியவை. எனவே காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்க போதுமான வளங்கள் அந்நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். கடலில் ஏற்படும் மாற்றங்கள் பருவமழை சுழற்சி முறைகளையும் பாதிப்பதோடு, இந்து சமுத்திரத்தில் உள்ள விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கும்.

இன்று நாம் அனைவரும் நிச்சயமற்ற காலங்களில் வாழ்கிறோம்.இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போரின் முடிவில் இருந்து நாம் அடைந்த ஸ்திரத்தன்மை சிதைந்து வருகிறது. உலகமயமாக்கல் மற்றும் பன்முகத்தன்மை சவால் செய்யப்பட்டுள்ளது.

காலநிலை நெருக்கடி உலகளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பாதிக்கிறது, உணவு பாதுகாப்பு, வாழ்வாதாரம், விநியோகச் சங்கிலிகள், உயிர்பல்வகைமை மற்றும் கடல் போக்குவரத்து ஆகியவற்றை பாதிக்கிறது. நமது தலைவிதியை உலக சக்திகள் தீர்மானிக்கும் வரை நாம் காத்திருக்கலாம் அல்லது நமது போக்கை நாமே உருவாக்கலாம்.

அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தினை உறுதி செய்வது, கடலோர மற்றும் கரையோர நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக நலன்களுக்காக கடல்களின் நிலையான பயன்பாட்டை எளிதாக்குகிறது. இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைக் கையாள ஒரு விரிவான திட்டம் தேவை.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்(1982) மற்றும் தேசிய நீதிமன்ற வரம்பிற்கு அப்பாற்பட்ட அல்லது திறந்த கடல் ஒப்பந்தத்திற்கு வெளியே கடலின் உயிர் பல்வகைமையைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான 2023 இல் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் (BBNJ) அத்தகைய கட்டமைப்பை உருவாக்க தேவையான அடித்தளம் ஏற்கனவே உள்ளது.

கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதிக்காத வர்த்தக நடவடிக்கை குறித்த நடத்தை விதிகள் மற்றும் காலநிலை நெருக்கடி மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு ஆகியவற்றைக் கையாள்வதற்கான சமமான வழிகாட்டும் கொள்கைகள் தேவை.

இந்த நடவடிக்கைகள், இந்து சமுத்திரப் பகுதிக்கான விரிவான பிராந்தியத் திட்டத்தை உருவாக்குவதற்கு மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதல் இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) தலைவர்களுக்கு நிறைவேற்ற முடியுமாக உள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT