Monday, April 29, 2024
Home » தனது சமூகப்பணிகளால் ஏழை, எளிய மக்களின் உள்ளங்களில் வாழ்பவர் ‘தொழிலதிபர் முத்தையா’

தனது சமூகப்பணிகளால் ஏழை, எளிய மக்களின் உள்ளங்களில் வாழ்பவர் ‘தொழிலதிபர் முத்தையா’

by damith
January 30, 2024 1:33 pm 0 comment

தொழிலதிபர் எஸ் முத்தையா. மனித நேயமும் சிறந்த வியாபார ஆற்றலும் சமூக செயற்பாடும் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் அன்புத் தந்தையான இவர், தன் சமூகப்பணிகளால் ஏழை எளிய மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர். ஒரு பிரபலமான வர்த்தகர் மட்டுமல்ல, ஒரு இலக்கியப் புரவலர், சமூகப் பணியாளர் மற்றும் இந்து சமய அறங்காவலர் என அவருக்கு பல சிறப்பு முகங்கள். சமூக இலக்கிய பணிகளுக்காக மத்திய மாகாண சாஹித்திய விழாவிலும் கல்வி அமைச்சினால் மாத்தளையில் நடத்தப்பட்ட அகில இலங்கை தமிழ் தின விழாவிலும் மற்றும் ஏனைய பெரு விழாக்களிலும் அதிகளவு பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்ட பெருமைக்குரியவர். வலது கையால் கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்து அடுத்தவர்களை வாழ வைப்பவர். அவர் ஆற்றிய சாதனைகள் பல. 2017 இல் அவருடைய 75ஆவது பவள விழா. அவர் அறங்காவலராக உள்ள முருகமலை கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தகைய பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற பெரியார், புரவலர், தொழிலதிபர் எஸ் முத்தையா குறித்து மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

சர்வதேச புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனின் தந்தை தொழிலதிபர் எஸ். முத்தையா பற்றிய உங்கள் கருத்து என்ன?

நம்மிடையே சமூகப் பற்றுறுதி கொண்டு செயற்படுகின்ற சமூகப் பணியாளர் மிக்க சிலரே இருக்கின்றனர். அவர்களை இனங்கண்டு கௌவரப்படுத்துவது மட்டுமல்ல அவர்களுடைய பணிகளைப் பதிவாகக் கொண்டுவருதல் வேண்டும்.

சமூகத் தொண்டுப் பணியில் பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமைமிக்க ஒரு சமூகச் செயற்பாட்டாளர்தான் தொழிலதிபர் எஸ். முத்தையா. இவரைப் பற்றி இன்றைய தலைமுறையினர்கள் அறிந்திருந்தாலும் நாளைய தலைமுறையினர்கள் அறிந்து கொள்ளக் கூடிய நல்ல உயர் பண்புகள் சிறப்பாகக் காணப்படுகின்றன. அவ்வாறாயின் அவரிடம் என்ன விசேட நல்ல உயர் பண்புகள் உள்ளன என்ற விடயத்தை தேடிப் படிக்க வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது.

‘சன்ரயிஸ்’ பிஸ்கட் கம்பனியின் ஸ்தாபகரான தொழிலதிபர் எஸ். முத்தையா தன் வாழ்விடமாக குன்டசாலை நத்தரம்பொத்தையைக் கொண்டிருந்தாலும் இவரது சமூகப் பங்களிப்பை நாடளாவிய ரீதியில் செய்து வருவதை நாம் அறிந்து கொள்ளலாம். இவர் அடுத்தவர்களுக்கு தெரியாமல் மறைமுகமான முறையில் பங்களிப்புச்செய்பவர் என்றே கூற வேண்டும்.

நான் சிறுவர் பராயம் முதல் தொழிலதிபர் எஸ். முத்தையா அவர்களை நன்கறிவேன். அவரது தொடர்பு எனது இளமைக் காலம் முதல் சமூகப் பணிகளின் ஊடாகவே ஏற்பட்டது. அவர் தொடர்பு கொண்டுள்ள சமூகப் பணியாளர்களுடன் எனக்கும் தொடர்பு இருந்தது. சமூகப் பணிகளில் ஆர்வமிக்க என் போன்ற இளைய தலைமுறையினர்களுக்கு ஒளிவிளக்காக திகழ்ந்து வந்துள்ளார்.

முத்தையா அவர்கள் வாக்குறுதிகள் மீறாதவர். எந்தவொரு கடின கால கட்டத்திலும் நேர்மை தவறாதவர். நேரம் தவறாதவர். தன் கடமைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பவர். அதிகம் பேச மாட்டார். எந்தவொரு காரியமாக இருந்தாலும் அவற்றை செய்து முடித்து விட்டுத்தான் மூச்சு விடுவார். நிறைய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். வர்த்தகத் துறையில் திறன்மிக்கவர். துணிவு மிக்கவர். இவர் சமூகப் பணிகளிலும் தனது நாமத்தை பதிவு செய்துள்ளார். அதுவே அவரது தனிச் சிறப்பாகும்.

அவர் வர்த்தகத் துறைக்கு வந்ததற்கும் பிரபல வர்த்தகராவதற்கும் காரணமான பின்புலத்தை சொல்ல முடியுமா?

அவர் தோட்டப் பிரதேசத்தில் மஸ்கெலியாவிலுள்ள ப்ளுபீல்ட் தோட்டத்தில் பிறந்தவர். கடும் பனியிலும் கடும் குளிரிலும் துயரின் சுகத்திலும் வாழ்ந்தவர். தம் தாய் தந்தையரின் இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் ஒட்டி வாழ்ந்தவர். அப்பா பெயர் சின்னச்சாமி கவுந்தர். அம்மா சின்னச்சாமி அங்கம்மாள். இந்த இருவரையும் தம் வீட்டிலே ஒரு சுமையெனப் பாராமல் முறையே 95, 105 வயதில் மரணம் அடையும் வரையிலும் அவர்களுடைய மனம் நோகாமல் பராமரித்து வந்தார். அன்று வாழ்ந்த கட்டத்தை இப்போது நினைத்துப் பார்க்கும்போது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

1956 களில் கல்வியின் பால் நாட்டம் கொண்டு கல்வி கற்பதற்காக கண்டி வந்தார். கண்டி கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பாரத மாதா என அழைக்கப்படும் இன்றைய விவேகானாந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். அவர் சிறிய பையன். அப்பொழுது அவர் கேசர் வீதியில் தங்கியிருந்தார். 1958களில் சிங்கள தமிழ் மக்களுக்கிடையிலான ‘ஸ்ரீ’ பிரச்சினை எழுந்தது. அதன் போது கண்டி நகரில் பல தமிழ் கடைகள் தாக்குதலுக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டன. தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனை அவர் தங்கியிருந்த இடத்தின் மேல்மாடியிலிருந்து அச்சத்துடன் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. எனினும் தொடர்ந்து அப்பாடசாலையிலேயே எஸ். எஸ் சி வரையிலும் படித்தார். 1964 களில் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வியாபாரத்துறைக்குச் சென்றார்.

அவர் சிறிய வயதில் 50 ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு சென்றவர். இதன் மூலம் குடும்ப பாரத்தையோ பொருளாதார நெருக்கடியினையோ சமாளிக்க முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் தொடர்ந்து இருந்து வந்தது என்றே கூற வேண்டும். பின்னர் தம்மோடு ஒன்றித்து வாழ்ந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் தம் குறைந்த வருமானத்தில் படும் அவஸ்தையை நேரடியாக கண்டு துயருற்றார். தன்னுடைய வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப முடியாமல் அல்லல்படுவதை அவர் சின்ன வயதில் இருந்து அவதானித்து வந்தார். இப்படிப்பட்ட இந்த பொருளாதா நெருக்கடி நிலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஓர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியமும் வர்த்தகத் துறையில் முன்னேற வேண்டும் என்ற ஈடுபாடும் அவருக்கு இருந்தது.

இந்த எண்ணங்கள் அவரின் உள்ளத்தில் திரும்பத் திரும்ப மீட்டிக் கொண்டே இருந்தது. அதன் பின்னர் 1964 களில் தனது அண்ணன் சின்னச்சாமி ராமசாமியுடன் நத்தரம்பொத்தவில் அமைந்துள்ள லக்கிலேண்ட் பிஸ்கட் கம்பனியில் இணைந்து கொண்டார். ஒரு சாதாரண குடிசைக் கைத்தொழில் துறையின் மூலம் வர்த்தகத்திற்குள் நுழைந்தார். அன்றிலிருந்து இன்று வரையிலும் 60 வருடங்கள் அயராது பாடுபட்டுழைத்து வந்துள்ளார்.

அதனை உயர் தர பிஸ்கட் கம்பனியாக வளர்ச்சி பெற்று பெரும் சாதனைகளுடன் உயரமான இடத்திற்கு கொண்டு வந்தார்.

இன்று அது உயர்ந்த நிறுவனமாகும். அதிநவீன தொழில்நுட்ப மின் இயந்திர உபகரணங்களுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி இது செயற்பட்டு வருகின்றது. அக்கால கட்டத்தில் ஒரு இறாத்தல் பிஸ்கட் 50 சதத்திற்கு விற்பனை செய்திருக்கின்றார். அப்பொழுது நவீன தொழில்நுட்ப கருவிகள் இல்லை. எல்லா வேலைகளும் கைகளால் தான் செய்யப்படும். இப்பொழுது தனியாக ‘சன்ரயிஸ்’ பிஸ்கட் கம்பனி ஸ்தாபித்து சிறந்த முறையில் நடத்தி வருகின்றார்.

அவரின் குடும்ப வாழ்வு பற்றி?

அவர் குடும்ப வாழ்வியலும் இப்படித்தான் ஆரம்பமாயிற்று. 1971 ல் அவர் நல்லதொரு குடுபத் தலைவனாக வருவதற்கு அவர் மனைவி லக்ஷ்மியினை கைப்பிடித்துக் கொண்டார். லக்ஷ்மி நாவலப்பிட்டிவைச் சேர்ந்தவர். ‘ லக்ஷ்மி செல்வத்தின் செல்வம் ‘ என்ற சொல்லுக்கு ஏற்றவாறு அதிஷ்டமிக்கவராகவும் அவருடைய வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாகவும் இருந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள முரளிதனை பெற்ற செல்வமும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அவரது மகன் பிரபாகரனை மற்றும் இரு புதல்வர்களான ஸ்ரீதரன், சசிதரன் ஆகிய நான்கு புதல்வர்களையும் மண்ணுக் கொண்டு வந்ததும் மனிதனாக்கியதும் அவர் கைப்பிடித்த அன்பு மனைவியே. அவரது வெற்றிக்கும் அவர் மனைவிதான் காரணம் ஆகும்.

வியாபாரப் பயணத்தில் தடைகள் எதையும் அவர் எதிர்நோக்க வில்லையா?

என்னதான் காலத்துடன் போட்டி போட்டு பயணித்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலைக் கைதியாய்தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அது அவருக்கும் ஏற்பட்டது. அதை நினைத்தால் மனசு அதிகமாய் கவலை கொள்ளத் தொடங்குகிறது. 1977 இல் இடம்பெற்ற சிங்கள தமிழ் இனக் கலவரத்தில் அவர் உயிர் தப்பிப் பிழைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்தக் கலவர தினம் தொழிற்சாலையில் அவர் மனைவி பிள்ளைகள் மட்டும்தான் இருந்தனர். தொழிற்சாலையில் வேலை செய்த பிள்ளைகள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். இரவில் பெரும் கூட்டத்தினர் அவரிடத்தை நோக்கி திரண்டு வந்தனர். அவர்கள் கேட்டை உடைத்து உள்நுழைந்தார்கள். அவர் தனியாக நின்று இருந்தார். அவரைத் தாக்கி விட்டு முதுகில் வாளால் வெட்டினார்கள். கையிலும் சிறு காயம். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதுகில் எட்டுத் தையல்கள் போடப்பட்டிருந்தன. இதில் இப்படி பாதிக்கப்பட்டாலும் மீண்டும் மீட்சி பெற்று நீளும் பயணத்தின் எதிர்பார்ப்புக்களை வெற்றிக் கொள்வதற்கு உறுதியோடு உழைத்தார்.

நாட்டின் நடைமுறைக் கோணல்தான் காரணம் என உணர்ந்து சற்று கூர்மையாக சிந்தித்து சுற்று வட்டாரத்திலுள்ள பெரும்பான்மை சகோதர மக்களுடன் நெருக்கமான சிநேகத்துடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் 1983 ஜுலைக் கலவரம் இடம்பெற்றது. அதன் போது சுற்று வட்டாரத்திலுள்ள மக்களே திரண்டு வந்து பாதுகாப்பு வழங்கினார்கள். தொழிற்சாலை தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஒரு கேந்திர நிலையமாக விளங்கியது. அக்கம் பக்கத்திலுள்ள தமிழ் மக்களுக்கு இங்குதான் அடைக்கலம் கொடுத்திருந்தார். பின்னர் பொலிஸார் இங்கு வந்து அவர்களை அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். இது தான் உண்மை.

மலையகச் சூழலில் தமிழ் கலை இலக்கியத் துறையை ஊக்குவிப்பதற்கென அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு சாட்சியாகவுள்ளது. வறிய நிலையிலுள்ள படைப்பாளிகளுக்கு அவர் விளம்பரம் இல்லாமல் கையைவிரித்து நிறைய கைகொடுத்து உதவியுள்ளார்கள். ஒரு கையால் கொடுப்பது மறுகைக்கு தெரியக் கூடாது என்ற பண்பு அவரிடம் நிறையக் காணலாம்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மலையக எழுத்தாளர்களைப் பொறுத்தவரையிலும் ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் ஒரு தனித்துவப் பிரிவாக வளர்ந்திருக்கிறது. மலையகத் தோட்டங்களில் தமது இரத்தத்தை சொறிந்து இலங்கையின் வணிகத்தை மேம்பாட்டுக்காக இந்தியவம்சாவளித் தமிழர்கள் படும் அவஸ்தையைப் பற்றி இந்த இலக்கியம் வெளிப்படுத்துகின்றது. தானும் ஒரு இந்திய வம்சாவளித் தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் யதார்த்தபூர்வமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலக்கியம் படைக்கின்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் அவருக்கு இயல்பாகவே உள்ளன.

அந்த அடிப்படையில் அதிகம் பேர் ஆக்கங்களை எழுதினாலும் அதனை நூலாகப் பதிப்பித்து வெளியிட முடியாத பொருளாதார நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் உள்ளனர். சிலர் நூல்களை மிக கஷ்டப்பட்டு பதிப்பித்து வெளிர்க்கொணர்ந்தாலும் அந்நூல்களை விநியோகம் செய்து போட்ட முதலைப் பெற்றுக் கொள்ள முடியாத போக்கையே காணக் கூடியதாக இருக்கிறது என்றால் அது ஒரு கவலையான செய்தியாகும். அவர், கண்டியில் இடம்பெறும் எந்தவொரு நூல் வெளியிட்டு விழாவாக இருந்தாலும் யார் அழைத்தாலும் தவறாமல் கலந்து கொள்வார். நூலின் முதல் பிரதிகளையும் பெற்றுக் கொள்வார். இன்னும் மலையகத்தில் இலைமறை காய்களாக எழுதி வரும் பல எழுத்தாளர்களுடைய நூல்களைப் பதிப்பிப்பதற்காக வேண்டி மறைமுகமான ரீதியில் பண உதவிகள் எவ்வளவோ செய்துள்ளார். அதனை அவர் மலையக தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத்தான் செய்தார். இதனையே அவர் பிரதான சமூகப் பணியாகவும் கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

கண்டியில் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு மறுமலர்ச்சிக் காலம் இருந்தது. அக்கால கட்டத்தில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், கண்டி தமிழ் சங்கம், மலையக கலை இலக்கியப் பேரவை போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கியத் துறையில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறும். இதன் போது பல நூற்றுக் கணக்கான எழுத்தாளர்களின் நூல்களின் முதல் பிரதியினைப் பெற்று அந்நூல் வெளியிட்டு விழாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். பெறுமதி மிக்கப்படைப்பாளிகளின் திறமைக்கு ஊக்கமளிப்பதும், அதற்கு புத்துயிர் அளிப்பதும் தமது கடமையாகும். இது ஒவ்வொரு தமிழ் வர்த்தகப் பிரமுகர்களும் தமிழ் இலக்கியத்தின் மீது மேலான கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அவரின் கருத்து. இல்லையேல் எம்மால் முன்னோக்கி நகர முடியாமற் போய் விடும் என்கின்ற முக்கியமான செய்தியாகவும் அவர் சொல்லிக் கொள்ள விரும்புகின்றார்.

அவர் மகன் முரளீதரன் பற்றி

கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் அவர் மகன் முரளிதரனைப் பற்றி உலகில் அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது எனக் கருதுகின்றேன். சூழல் பந்து வீச்சில் உலகிலே பேசப்பட்ட சிறந்த வீரர். பந்து வீச்சில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவர் ஒரு நாள் போட்டில் 500 விக்கட்டுக்களையும், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகளையும் வீழ்த்தி சாதனை நிலைநாட்டியவர். ‘தூஸ்ரா ‘ பாணியிலான பந்து வீச்சில் புதுமைபடைத்தவர். இதுவரையிலும் அதில் எந்தவீரரும் தேர்ச்சி பெறவில்லை. அவரது ஆளுமையையும் சிறப்பம்சங்களையும் நான் விலாவாரியாக விளக்கத் தேவையில்லை. அது உலகம் அறிந்து தரிசித்து வைத்துள்ள விடயம். மிக அமைதியானவர். கடின உழைப்பாளி. தன்னலம் பாராது சேவையாற்றக் கூடியவர். அவர் பற்றிய சினிமாத் திரைப்படமும் வெளி வந்துள்ளது.

கண்டி மெதமஹாநுவர முருகமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் அறங்காவலராக பணியாற்றி வருகின்றார்.

அவர் இந்து சமய மேம்பாட்டுக்காக ஆற்றி வரும் பங்களிப்பு என்ன?

இயல்பாகவே சமய பக்தி வழிபாடுகளில் அதீத ஈடுபாடு அவருக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல கோயில் நிர்மாணப் பணிகளுக்காக இல்லை எனச் சொல்லாமல் மனமுவந்து உதவி செய்வார். யார் கேட்டாலும் அவற்றை சரியாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் வழங்கி வருபவர். உழைப்பானது தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கு கொடுத்து உதவியினால் மட்டும் தான் தொழிலின் விருத்தி அதிகரிக்கும். அதற்குப் பாதுகாப்பாகவும் அமையும். மற்றவர்களுக்கு கொடுத்துதவும் மனிதர்கள் ஒரு நாளும் தோல்வி அடையப் போவதில்லை. இதற்கு அவர் தொழில் நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.

மெதமஹாநுவர ஸ்ரீ முருகமலைக் கோயிலின் அறங்காவலாளராக கடந்த 20 வருடங்களாக சமயப் பணிகள் ஆற்றி வருகின்றார். ஆரம்பத்தில் தொழில் ரீதியாக சிரமங்கள் இருந்தன. ஆனாலும் சமயக் கடமை என்ற காரணத்தினால் முழுமையான பொறுப்பையும் ஏற்று சேவை புரிகின்றார்.

அவருடைய பவள விழாவும் அவரின் மனைவி பெயரில் கோயிலின் வருமானத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட லக்ஷ்மி கல்யாண மண்டப திறப்பு விழாவும் அங்கு தான் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் உயர்கல்வி, பெருந்தெருக்கள் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுக்குமார். லக்கி ஜயவர்தன மற்றும் இந்திய உதவித் தூதுவர் செல்வி இராதா வெங்கட்ராமன் உட்பட பெருந்தொகையிலான தமிழ், முஸ்லிம், சிங்கள பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் இரா. அ. இராமனினால் தொகுக்கப்பட்ட பவள விழா சிறப்பு மலர் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இக்கோயிலில் பொது நூலகம் ஒன்றும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை எவ்வேளையிலும் எப்பொழுது உற்ற நண்பனாக இருப்பவர் ரஞ்ஜிதா முதலாளி பெருமாள் பி. பழனியப்பன் அவர்கள்தான். புத்தாண்டுப் பண்டிகை வந்தால் அவர் கடைக்குச் சென்று எப்பொழுதும் கைமுழுத்தம் கொடுத்து முதல் பொருட்கள் வாங்குவார். அவருக்கு அவர் மீது அதிக பிரியம். அது மட்டுமல்ல அவருடனே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார். இத்தனை காலமும் அவருடன் மிக நெருக்கமான சிநேகிதராக பழகிவருகின்றார். இருவரும் இணை பிரியாத நண்பர்கள் ஆவர்.

மலையக வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அதிகம் பங்களிப்புச் செய்துள்ளார் என குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

இத்தகைய பெரியாருடைய அரும்பணிகளுக்கென பல்வேறு பட்ட கௌவரங்கள் பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன அது குறித்து பல்வேறு பிரபல்யமான அமைப்புக்களினாலும் அரசாங்கத்தினாலும் பல தரப்பட்ட கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவித்துள்ளனர். தேசமானிய, ஜனசேவா சிரோன்மணி, இரத்தின தீபம்,அன்புமணி, சேவா ஜோதி, சமூக ஜோதி, சமூகச் சுடர் எனப் பல குறிப்பிடலாம்.

நேர்காணல் இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT