Sunday, April 28, 2024
Home » சரியான தலைமைத்துவம் வழங்கக்கூடியோர் மாணவர் பாராளுமன்றத்தில் உருவாகி வருகின்றனர்

சரியான தலைமைத்துவம் வழங்கக்கூடியோர் மாணவர் பாராளுமன்றத்தில் உருவாகி வருகின்றனர்

by Rizwan Segu Mohideen
January 30, 2024 8:44 pm 0 comment

எதிர்காலத்தில் நாட்டுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

குருணாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

குருணாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று (30) பழைய பாராளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர் பாராளுமன்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,

மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வை பழைய பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை பல பாடசாலைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று பிரதமர் பதவியிலுள்ள மாணவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் தான் அன்று பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்க அமர்ந்திருந்தார். 1982 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு பாராளுமன்றம் மாற்றப்படும் வரை நீங்கள் இருக்கும் இந்த இடத்தில் தான் பாராளுமன்றம் கூடியது. காலி பாராளுமன்ற உறுப்பினர் விஜயானந்த தஹநாயக்க இந்த இடத்தில் தான் ஒன்றரை அல்லது இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உரை நிகழ்த்தினார்.

குருணாகல் மாவட்டம் என்பது அபிவிருத்தியிலும் கல்வியிலும் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும் மாவட்டம் என்றே கூற வேண்டும். அந்த மாவட்டத்தின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதற்கும் அதற்குத் தலைமை தாங்கவும் அதற்காக அமைச்சர் பதவிகளை வகிக்கவும் ஒரு குழு தயாராகி வருவதை உங்கள் மூலம் நான் காண்கிறேன். எதிர்காலத்தில் குருணாகல் மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று நாட்டை வழிநடத்த உங்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.

குருணாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தில் பிரதான உரை நிகழ்த்திய பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை உருவாக்க பெரும் வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன உரையாற்றுகையில், பழைய பாராளுமன்றக் கட்டிடத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் இலங்கையின் அரசியல் போக்கு குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

குருணாகல் மலியதேவ வித்தியாலய அதிபர் டபிள்யூ. எம். சி. கே மஹமிதவ உரையாற்றுகையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த விவாதத்தை நடத்துவதற்கு தமது பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை பெறுமதியான சந்தர்ப்பம் என தெரிவித்தார்.இதன் மூலம் பெறப்படும் அறிவு மற்றும் அனுபவத்தின் ஊடாக குருணாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் இந்நாட்டின் திறமையான தலைவர்களாக உருவாக வாய்ப்பளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததோடு பாராளுமன்றம் தொடர்பில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களுடன் கருத்துப் பரிமாறிக்கொண்டார்.

குருணாகல் மலியதேவ வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு பிரதம அதிதிகளுக்கு மலியதேவ வித்தியாலயத்தினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுச் சேவை முகாமையாளர் புத்தினி ராமநாயக்க, தொடர்பாடல் திணைக்களத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி துமிந்த விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல மற்றும் குருணாகல் மலியதேவ வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT