Monday, April 29, 2024
Home » “யோகியின் சுயசரிதை” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு கொழும்பில் வெளியீடு

“யோகியின் சுயசரிதை” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு கொழும்பில் வெளியீடு

- ஆன்மீக இலக்கிய உலகின் பொக்கிஷம்

by Rizwan Segu Mohideen
January 29, 2024 7:38 pm 0 comment

புகழ்பெற்ற ஆன்மீக இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படும் “யோகியின் சுயசரிதை” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பின் வெளியீட்டு நிகழ்வு, கொழும்பில் அமைந்துள்ள பௌத்த கலாசார மையத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஆன்மீக இலக்கிய உலகில் பொக்கிஷமாகக் கருதப்படும் “யோகியின் சுயசரிதை” யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வை ஸ்தாபித்தவரும், மெய்ப்பொருளை தேடுகின்ற உலகத்தவருக்கு யோக- தியானத்தை அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த மகான்களில் ஒருவருமான பரமஹம்ச யோகானந்தா எழுதிய நூலாகும்.

மேற்படி நூல் வெளியீட்டு விழாவின் பிரதான பேச்சாளராக யோகதா சத்சங்க சொஸைடியின் பவித்ரானந்த கிரி கலந்து கொண்டார். மேலும், நிகழ்வின் பிரதம அதிதியாக ஒலந்த ஆனந்த தேரர் கலந்து சிறப்பித்திருந்தார்.

வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும் இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது.

இந்த நூலானது 1893-ல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தா, அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் மற்றும் அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக முக்கியத்துவம் பெறுகிறது.

அனைவருக்கும் பொதுவான அவரது கிரியா யோக போதனைகள், ஆன்மீகரீதியாக இணக்கமான வாழ்க்கையை தமக்கு உருவாக்கிக் கொள்ளவும், அத்துடன் அதிக கருணையும் அமைதியும் கொண்ட ஓர் உலகிற்கு தமது பங்கினை அளிக்கவும் அனைவருக்கும் வல்லமை அளிக்கிறது. அவரது பணி மற்றும் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

பரமஹம்ஸர், 1920-ல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் நடந்த சர்வதேச சமய மிதவாதிகளின் மகாசபைக்கு இந்தியப் பிரதிநிதியாக தனது குருவால் அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டன. அவர் பரவலாகப் பிரயாணம் செய்து தியான விஞ்ஞானம் மற்றும் சரிசம நிலையான ஆன்மீக வாழ்க்கை பற்றிய சொற்பொழிவுகள் ஆற்றி, வகுப்புகள் நடத்தினார். அவர், 1925-ல் லொஸ் ஏஞ்ஜலிஸ்-ல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் (SRF) தலைமையகத்தை ஸ்தாபித்தார்.

பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மீக மரபுச் செல்வம், அவரால் ஸ்தாபிக்கப்பட்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வால் (YSS) தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா என்பது அனைத்து இன, மத, கலாச்சார மற்றும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கும் திறந்த, ஆன்மீக மற்றும் தர்ம ஸ்தாபனமாகும். பரமஹம்ச யோகானந்தாஜி அவர்களின் போதனைகளை உண்மையான தேடலுடைய அனைவருக்கும் வழங்க முயற்சிப்பது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அனைத்து உண்மையான மதங்களின் முழுமையான ஒற்றுமை, அடிப்படை ஒற்றுமை மற்றும் பொதுவான அடித்தளங்களை வெளிப்படுத்துவதே யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் முக்கிய இலட்சியங்களில் ஒன்று.

மனிதனை உடல் நோய், மனக் குழப்பம் மற்றும் ஆன்மீக அறியாமை ஆகிய மூன்றிலிருந்து விடுவிப்பதன் மூலம் மனிதகுலத்தை மகிழ்விப்பதும் YSSஇன் இலட்சியங்களில் ஒன்றாகும். பரமஹம்ச யோகானந்தாஜி உருவாக்கிய உற்சாகப்படுத்தும் பயிற்சிகள், செறிவு மற்றும் தியான முறைகள் போன்ற அறிவியல் யோகா நுட்பங்கள் மூலம் இறைவனை நேரடியாக அனுபவிக்க வழிவகுக்கும். இந்நுட்பங்களில் மிக உயர்ந்தது கிரியா யோகா, இதன் மூலம் உணர்வு உயர்ந்த நிலைக்கு இழுக்கப்பட்டு படிப்படியாக உள்நிலை விழிப்புணர்வு ஏற்படுகிறது.

இதேவேளை, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்துள்ள ’கிரியா யோகா’ தொடர்பான ஆன்மீக சொற்பொழிவொன்று எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 11.30 வரை, எஸ்பிலடேட் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண கலாசார மையத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT