Monday, April 29, 2024
Home » தமிழில் முதலாவது ஹைக்கூ நூலை வெளியிட்ட அமுதபாரதிக்கு பாராட்டு

தமிழில் முதலாவது ஹைக்கூ நூலை வெளியிட்ட அமுதபாரதிக்கு பாராட்டு

by sachintha
January 12, 2024 8:29 am 0 comment

மகாகவி பாரதி 1916 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியான ‘சுதேசமித்திரன்’ இதழில் ஜப்பானிய வடிவமான ஹைக்கூ கவிதைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி, தமிழில் ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்தினார். ஆனால், அப்போது அதற்கு சரியான வரவேற்புக் கிடைக்கவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘கணையாழி’ இதழில் எழுத்தாளார் சுஜாதா சில ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1968-இல் ‘நடை’ என்ற சிற்றிதழில் சி.மணி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து சில ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டார்.

1974 ஆம் ஆண்டு கவிஞர் அப்துல் ரகுமான் தனது ‘பால் விதி’ எனும் சர்ரியலிஸ கவிதைத் தொகுப்பில் ஆறு ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டார். இவையே தமிழில் நேரடியாக முதலில் வெளிவந்த ஹைக்கூ கவிதைகளாகும்.

1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ‘ஓவியக்கவிஞர்’ என்று போற்றப்படும் அமுதபாரதி ‘புள்ளிப்பூக்கள்’ என்ற பெயரில் தமிழில் முதல் ஹைக்கூ நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் நவம்பர் மாதம் ‘புல்லின் நுனியில் பனித்துளி’ என்ற ஹைக்கூ நூலை கவிஞர் அறிவுமதி வெளியிட்டார்

தமிழ் ஹைக்கூ கவிதைகள் நூற்றாண்டைக் கடந்து தற்போது ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்துவிட்டன. இன்னும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

தமிழில் முதல் ஹைக்கூ நூலை வெளியிட்ட ஓவியக் கவிஞர் அமுதபாரதியின் கவிதைப்பணியைப் பாராட்டி 150 ஆண்டுகள் பழைமையான திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடைபெற்ற படைப்பிலக்கியப் பயிலரங்கில் கல்லூரி அதிபர் அருள் முனைவர் புவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் அமுதபாரதிக்கு சிறப்பு விருதும் ரூ 50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டன.

விருது பெற்ற அமுதபாரதியின் கவிதைப்பணியைப் பாராட்டி கல்லூரி செயலர் அருள் முனைவர் கு.அமல், கல்லூரி முதல்வர் ம. ஆரோக்கியசாமி சேவியர், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் ஜெயபாஸ்கரன். பயிலரங்கைத் தொடங்கிவைத்து ‘இலக்கும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி மாணவர்களுக்கான படைப்பிலக்கிய பயிற்சியில் ‘இனிய நந்தவனம்’ சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் கலந்துகொண்டு தற்கால படைப்பிலக்கியம் குறித்தும் கவிதை, சிறுகதை, எழுதுவதற்கான பயிற்சி குறித்தும் உரையாற்றினார்.

எழுத்தாளனாக எவ்வாறு பயணிப்பது என்பது பற்றி எடுத்துக் கூறிய அவர், மாணவர்கள் வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக வளரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

விழாவை முனைவர் ஜா. சலேத் ஒருங்கிணைக்க முனைவர் அ.ஜோசப் சகாயராஜ் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக முனைவர் ஆ.இராஜாத்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT