Home » புதிய முதலீட்டு வலயங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

புதிய முதலீட்டு வலயங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

by Prashahini
January 9, 2024 1:54 pm 0 comment

– டொரின்டன் ஹொக்கி மைதான அபிவிருத்தித் திட்டம்
– அரச ஊழியருக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல்

அரச – தனியார் பங்குடமை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, குறித்த முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் புதிய முதலீட்டு வலயத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
• வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் தென்மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயத்தை அமைத்தல்
• மாங்குளம், பரந்தன் இரசாயனக் கம்பனி வளாகம் மற்றும் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபன வளாகத்தில் புதிய முதலீட்டு வலயங்களை அமைத்தல்
• இரணவில மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களில் புதிய முதலீட்டு வலயங்களை அமைத்தல்
• பிங்கிரிய மற்றும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயங்களை மேலும் விரிவாக்கம் செய்தல்

உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார வலயங்களை அமைப்பதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொருத்தமான அரச – தனியார் பங்குடமை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, குறித்த முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.நிதி ஆணைக்குழு 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள விதப்புரைகள்

நாட்டில் சமநிலையை பிராந்திய அபிவிருத்தியை எய்தும் நோக்கில் மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்களை மதிப்பீடு செய்தலும், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீடுகளை மிகவும் பயனுள்ள வகையில் மாகாண சபைகளுக்கு வழங்கும் நோக்கிலும் விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அரசியலமைப்பில் 154ண உப உறுப்புரையின் கீழ் நிதி ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள கீழ்க்காணும் விதப்புரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2024 ஆம் ஆண்டுக்கான மாகாண மூலதனம் மற்றும் மீண்டெழும் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான விதப்புரைகள்
• 2024 ஆம் ஆண்டுக்கான அரச வழங்கல்களை மாகாண சபைகளுக்கு ஒதுக்கி வழங்குவதற்கான விதப்புரைகள்
• மாகாண சபைகளுக்கான மிகவும் பயனுள்ள வகையில் வளங்களை ஒதுக்கி வழங்குதல் மற்றும் குறித்த வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் தொடர்பான கொள்கை ரீதியான விதப்புரைகள்

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள குறித்த ஆணைக்குழுவின் விதப்புரைகளுடன் கூடிய அறிக்கையை அரசியலமைப்பின் 154ண(7) உப உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.அநுராதபுரம் மஹா விகாரை அபிவிருத்தித் திட்டம்

அநுராதபுரம் மஹா விகாரை இலங்கையில் சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளாகமாக அமைவதால், அநுராதபுரம் மஹா விகாரையில் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைசார்ந்த வகையில் திட்டவட்டமான கால அட்டவணைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மஹா விகாரையின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பாதுகாப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவித்தலின் பிரகாரம், தொல்லியல் துறையில் சர்வதேச அனுபவங்களைக் கொண்டுள்ள பிரபல வெளிநாட்டு நிபுணரான பேராசிரியர் றொபின் கன்னிங்கம் கருத்திட்ட அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்ட அறிக்கை மூலம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டு வரைக்குமான 06 ஆண்டுகளில் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. பேராசிரியர் றொபின் கன்னிங்கம் அவர்களின் கருத்திட்ட அறிக்கையின் பிரகாரம் மஹா விகாரையின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொல்லியல் திணைக்களத்தின் மத்திய கலாச்சார நிதியத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஜனாதிபதி செயலகமும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சும் ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்

புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப ரீதியான புத்தாக்கம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி போன்ற தீர்மானம் மிக்க துறைகளில் தலைமைத்துவம் வகிக்கக்கூடிய தொழில் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான தேவை கண்டறிப்பட்டுள்ளது. அவ்வாறான பல்கலைக்கழகத்தின் மூலம் அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவதற்கும், உலகளாவிய கற்கைகள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான அடிப்படைச் சூழலை உருவாக்குவதற்கான இயலுமை கிடைக்கும். UC Berkeley, UC Riverside, UC Davis University of Michigan போன்ற பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அடையாளங் காணப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பங்காண்மை பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்து, குறித்த பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்து அரச தனியார் பங்குடமையாக மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கசகஸ்தான் அஸ்தானாவில் இலங்கைக்கான தூதரகமொன்றை அமைத்தல்

கசகஸ்தான் மற்றும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் கசகஸ்தான் அஸ்தானாவில் இலங்கைக்கான தூதரகமொன்றை அமைப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவின் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கைகயைக் கட்டியெழுப்பும் படிமுறைகள் தொடர்பான மாநாட்டு செயலகம் (CICA) கசகஸ்தானில் அமைந்துள்ளமையும், இலங்கையானது குறித்த மாநாட்டின் உறுப்பு நாடாக இருப்பதாலும், மத்திய ஆசிய வலயத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கைக்கு சிறந்ததொரு வாய்ப்பும் உருவாகியுள்ளது.

அத்துடன், கசகஸ்தானிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து வருகின்றமையால், இலங்கைக்கான தூதரகமொன்றை அஸ்தானாவில் அமைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக ஏதுவாகவும் அமையும். அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள இலங்கைக்கான தூதரகமொன்றை கசகஸ்தான் அஸ்தானாவில் அமைப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. வெளிநாடுகளில் இலங்கைத் தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறந்து வைத்தல்

2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கீழ்க்காணும் இலங்கைக்கான தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
(i) சைப்ரஷில் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம், நிகோஷியா
(ii) ஈராக் பக்தாத்தில் இலங்கைக்கான தூதரகம்,
(iii) ஜேர்மனில் ப்ரன்பெட் இல் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம்,

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இலங்கைக்கான தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும், டெர்க்மெனிஸ்தானின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் 2023-2025 வரைக்குமான ஒத்துழைப்பு வேலைத்திட்டம்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும், டெர்க்மெனிஸ்தானின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் 2023-2025 வரைக்குமான காலப்பகுதிக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு எட்டியுள்ளனர். இரு நாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட இருதரப்பினர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவுபடுத்தல் போன்ற பரஸ்பர விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்துவதே வேலைத்திட்டத்தின் நோக்கங்களாக அமைகின்றன. அதற்கமைய. இலங்கைக்கான வெளிவிவகார அமைச்சுக்கும் டெர்க்மெனிஸ்தானின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான உத்தேச ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஜப்பான், டோக்கியோ – நரீடா விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனியின் விமானங்களுக்கான தரையிறக்க சேவைகளை வழங்குவதற்காக ஒப்பந்தத்தை வழங்கல்

ஜப்பான்,டோக்கியோ – நரீடா விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனியின் விமானங்களுக்கான தரையிறக்க சேவைகளை வழங்குவதற்குப் பொருத்தமான சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கையாண்டு விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 02 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்தபட்ச விலைமுறியை சமர்ப்பித்துள்ள International Air Cargo terminal Co. Ltd இற்கு 2024.08.01 ஆம் திகதி தொடக்கம் 2027.07.31 திகதி வரைக்கும் டோக்கியோ – நரீடா விமான நிலையத்தில் தரையிறக்க சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 100,000 கிலோமீற்றர் மாற்று வீதிகள், குறுக்கு வீதிகள், கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்தல்

100,000 கிலோமீற்றர் வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது புனரமைப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ள வீதிகளில் பாதுகாப்பான போக்குவரத்திற்குப் பொருத்தமான வகையில் 1,500 கிலோமீற்றர்களை 2024 ஆம் ஆண்டில் மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முழுமையான செலவு 20 பில்லியன் ரூபாய்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 06 மாதங்களில் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டின் முதல் ஆறு (06) மாதங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள வீதிகளைப் போக்குவரத்திற்கு ஏற்புடைய வகையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2023 ஆம் ஆண்டின் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (நீதிமன்ற காண்பி பொருட்களை கையுதிர்த்தல்) தொடர்பான ஒழுங்குவிதிகள்

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டளைச் சட்டத்தின் 77அ என்னும் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் வடிவிலான அவுடதம், பதார்த்தம், பொருள் அல்லது வேறு செயற்கையான அல்லது பகுதியளவு செயற்கையான அபாயகரமான ஒளடதங்கள் உள்ளிட்ட வழக்கு காண்பி பொருட்களைக் கையுதிர்த்தல் பொறிமுறையை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாடுகளுடன் ஒழுங்குவிதிகள் மூலமாக விதிப்பதற்காக நீதித்துறை விடயதான அமைச்சருக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கமைவாக ஒளடதம், பதார்த்தம், பொருள் அல்லது வேறு செயற்கையான அல்லது பகுதியளவு செயற்கையான அபாயகரமான அவுடதங்களை கையுதிர்த்தல் பற்றிய பொறிமுறையை விதித்து 2360/21 ஆம் இலக்க 2023.11.27 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (நீதிமன்ற காண்பி பொருட்களை கையுதிர்த்தல்) தொடர்பான ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. டொரின்ரன் ஹொக்கி மைதான அபிவிருத்தித் திட்டம்

டொரின்ரனில் அமைந்துள்ள செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஹொக்கி மைதானத்தின் நிர்மாணப் பணிகள் 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த மைதானத்தின் புற்தரை காலாவதியாகியுள்ளதுடன், காலங்கடந்த மைதானமாக பயன்பாட்டுக்குப் பொருத்தமற்ற நிலைமையை எட்டியுள்ளது. குறித்த மைதானத்திற்கான செயற்கைப் புற்தரையை இலவசமாக வழங்குவதற்கு ஆசிய ஹொக்கி சம்மேளனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, டொரின்ரன் ஹொக்கி மைதானத்திற்காக தேவையான செயற்கைப் புற்தரையை ஆசிய ஹொக்கி சம்மேளனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும், குறித்த மைதானத்தை சர்வதேச தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்வதற்காகவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. அரச ஊழியர்களுக்கு செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல்

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் அரச ஊழியர்களில் வாக்கைச் செலவுக் கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 10,000/- ரூபாவினால் அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்குவதற்கும் அரசு திட்டமிட்டிருந்தது. நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார நிலைமையால் குறித்த கொடுப்பனவின் பகுதியளவை ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வழங்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50% வீதம், அதாவது 5,000/- ரூபாவினை வழங்குவதற்கும், மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கும் ஒருசில கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT