Home » ரூ. 15 இலட்சம் கப்பம் கோரி தொலைபேசியில் மிரட்டல்; சந்தேகநபர் கைது

ரூ. 15 இலட்சம் கப்பம் கோரி தொலைபேசியில் மிரட்டல்; சந்தேகநபர் கைது

- 70 வயது நபர் மினுவாங்கொடை பகுதியில் கைது

by Rizwan Segu Mohideen
January 9, 2024 1:19 pm 0 comment

– பாதாள குழு தலைவராக அடையாளப்படுத்தி பல மிரட்டல் அழைப்பு

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து ரூ. 15 இலட்சம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) பிற்பகல் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபோதல எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த குறித்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ரூ. 5 இலட்சம் பணத்தை பெற்றிருந்தாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 70 வயதுடைய மினுவாங்கொடை, மாபோதல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைப் புரியும் கும்பலின் தலைவரான மாணிக்குகே தினேஷ் சில்வா என அழைக்கப்படும் ஹீனட்டியன மகேஷ் எனும் பெயரில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மினுவாங்கொடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT