Monday, April 29, 2024
Home » உலகின் ஆயிரம் முஸ்லிம்கள் 2024 இல் உம்ராவை இலவசமாக நிறைவேற்ற வசதி

உலகின் ஆயிரம் முஸ்லிம்கள் 2024 இல் உம்ராவை இலவசமாக நிறைவேற்ற வசதி

சவுதி அரேபிய மன்னர் அறிவிப்பு

by Gayan Abeykoon
January 5, 2024 10:00 am 0 comment

இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் உலகெங்கிலுமுள்ள ஆயிரம் முஸ்லிம்கள் 2024 இல் இலவச உம்ரா கிரியை நிறைவேற்ற வசதியளிப்பதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார்.

மன்னரின் இவ்வறிவிப்பின் பிரகாரம் அவரது சொந்த செலவில் உலகின் பல பிரதேசங்களையும் சேர்ந்த ஆயிரம் பேர் உம்ரா கிரியையை முற்றிலும் இலவசமாக செய்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள இருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவர்கள் புனித மக்காவுக்கு வருகை தந்து உம்ரா கிரியை நிறைவேற்றவும் மதீனா மற்றும் புனிதஸ்தலங்களுக்கு விஜயம் செய்யவும் சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

அதேநேரம் மன்னர் சல்மானின் ஏற்பாட்டில் உலகின் பல பாகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ், உம்ரா கடமைகளை இலவசமாக நிறைவேற்றவும் விஷேட விருந்தினர் திட்டத்தின் கீழ் வருடாவருடம் வசதி அளிக்கப்படுகின்றனர்.

சவுதி அரேபியாவின் ஆட்சியாளர்கள் அன்று தொட்டு இன்று வரையும் உலகின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ் உம்ரா கடமைகளை இலவசமாக நிறைவேற்ற வருடாந்தம் வசதி அளிப்பது வழமையாகும். அந்தடிப்படையில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் உலகின் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றவென தன்னுடைய சொந்த செலவில் வழங்கி மன்னரது விஷேட விருந்தினராக மக்காவுக்கு அழைத்து அக்கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து வசதிகளையும் அளிக்கின்றார். இதன் நிமித்தம் இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய கலாசார அமைச்சர் அஷ்ஷைக் அப்துல் லதீப் ஆல் ஷைக்கும் துணையாக நிற்கின்றனர்.

உலக முஸ்லிம்களுக்கென இவ்வாறு வசதி அளிக்கின்ற மன்னர் சல்மான் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களிலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் பேர் ஹஜ், உம்ரா கடமைகளை இலவசமாக நிறைவேற்ற விஷேட கவனம் செலுத்தி வசதி அளிக்கின்றார்.

இந்த இலவச உம்ரா திட்டத்தின் கீழ் நிச்சயம் இலங்கை முஸ்லிம்களும் நிச்சயம் உள்வாங்கப்படுவர் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறான வாய்ப்புக்களை வருடா வருடம் வழங்கும் மன்னர் சல்மானுக்கும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் அஷ்ஷைக் அப்துல் லதீப் ஆல் ஷைக்குக்கும் சவுதி அரசுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் உலக முஸ்லிம்கள் சார்பாகவும் இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறது.

அஷ்ஷைக் எம்.எச்.
ஷைஹுத்தீன் மதனி  பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT