Sunday, April 28, 2024
Home » அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம்

அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம்

by gayan
December 6, 2023 6:15 am 0 comment

தமிழ்மொழியை அறபு எழுத்து வடிவில் உச்சரிக்க முற்பட்ட எழுத்து வடிவமே அறபுத்தமிழாகும். அறபு மொழியிலுள்ள அதிகப்படியான சொல் மற்றும் ஒலிப்பு முறைகள் தமிழில் ஊடுருவியமையால் இம்மொழி உருவாகியது.

தமிழ்நாட்டில் குடியேறிய அறபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன், அதனை அறபியில் எழுதினர். இவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இம்மொழி இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம்களிடமும் வழக்கில் இருந்துள்ளது.

முஸ்லிம்களிடமிருந்து வழக்கொழிந்து விட்ட அறபுத் தமிழ் மூதாதையர்களின் கல்வி, கலாசார, பண்பாட்டியல்களை வெளிக்காட்டும் ஓர் கூறாகும். இது இளம்தலைமுறையினர் அறியாததொன்றாக மாறிவிட்டது. அறபுத் தமிழில் வெளிவந்த இலக்கியங்களும் ஆவணங்களும் இலங்கை முஸ்லிம்களின் மிகப் பெறுமதி வாய்ந்த, தனித்துவமான முதுசங்கள் என்பதை மீளமைக்க வேண்டிய கடமைப்பாடு துறைசார்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கிய பணியாகும்.

இலங்கையின் வரலாற்றோடு கலந்துள்ள முஸ்லிம்களின் பாரம்பரியங்களையும், முதுசங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காத்திரமான பங்களிப்புக்கள் பலவற்றினை மேற்கொண்டு வருகின்றது. இதில் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் அரும்பொருட் காட்சியகம் மற்றும் பல்கலைக்கழக நூலகம் முதலியவற்றினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் முக்கியமானவை.

இவ்வகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அறபுத் தமிழைக் காப்பகப்படுத்தும் முயற்சியினை முன்னெடுத்து வருகின்றது. 90 அறபுத் தமிழ் நூல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவை அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்றவைகளாகும். இவற்றினை எண்ணியமப்படுத்தி (Digitized) ஒரு மின்னியல் நூலகமாக (e-library) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை http://www.ar.lib.seu.ac.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடவும் பதிவிறக்கம் (download) செய்து பயன்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அறபுத் தமிழைப் பாதுகாக்கும நோக்கில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழிப் பீடம், பல்கலைக்கழக நூலகத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் அறபுத்தமிழ் மொழியில் அமைந்துள்ள நூல்கள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், காணி உறுதிகள், விளம்பரங்கள், திருமணப் பதிவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கும் ஒரு திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இத்துறை சார்ந்த விடயங்கள் இருப்பின் பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்குமாறு அறபு, இஸ்லாமிய கற்கைகள் பீடம் கோரியுள்ளது.

நூல்களை ஆவணப்படுத்துவதோடு மின்னியல் நூலகத்திலும் உரியவர்களின் பெயரில் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆவணங்களை ஒப்படைக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.மஸ்ஹிர்([email protected]), காப்பாக சேகரிப்பு பகுதிக்கான சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம்.சஜீர்([email protected]) ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

–ஜெஸ்மி எம்.மூஸா…? (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT