கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட கடந்த ஞாயிறன்று தாய் திருச்சபை எமக்கு அழைப்பு விடுத்தது. இவ்விழா உருவாக, முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது. இவ்விழாவைக் குறித்தும் உண்மையான தலைவர்களிடையே நிலவ வேண்டிய பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு இந்த விழா வாய்ப்பளிக்கின்றது.
முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, “பயனற்றப் படுகொலை” (useless massacre) என்றும், “கலாசாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை” (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.
முதல் உலகப்போர் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கடந்து 1922ஆம் ஆண்டு திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் அரசர்கள் மற்றும் அரச தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்திருந்தார்.
இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை அனைத்துலக அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசர் தன்மையையும் அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு மக்கள் குறிப்பாக அரச தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.
கிறிஸ்து அரசர் திருநாளைப் பற்றி குறிப்பிடும்போது ஆயன், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்த்து மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது மனதில் சங்கடங்கள் உருவாகின்றன.
அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள் மனத்திரையில் தோன்றும் காட்சிகள் தான் இந்தச் சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?… ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம… என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்.
அரசர் என்றதும் குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும் இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை இதுதான். அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால் இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால் மற்றொரு கோணத்தில் இயேசுவும் ஓர் அரசர்தான்.
ஓர் அரசை நிறுவியவர். அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது. நிலம் இல்லை என்றால் போர் இல்லை. போட்டிகள் இல்லை. அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை.படைபலம் தேவையில்லை எதுவுமே தேவையற்றது.
இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் உள்ளது. எதுவுமே தேவையில்லாமல் இறைவன் ஒருவரே தேவை. அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும்.
யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில் எல்லாருக்கும் அரியணை உண்டு. எல்லாரும் இங்கு அரசர்கள்! இந்த அரசர்கள் மத்தியில் இயேசு ஓர் உயர்ந்த நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால் ஏமாந்துபோவோம். காரணம்?… அவர் நமக்குமுன் மண்டியிட்டு நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார்.
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி அதன் விளைவாக அம் மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின் வேறுபட்ட அரச தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.
உண்மைக்காக வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்பவர்கள் அலங்கார அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர் சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.
உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாமும் நம்பிக்கையுடன் அணுகிச் செல்வோம்.
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், “குடிகள் எவ்வழி அரசன் அவ்வழி” என்றும் சொல்லத் தோன்றுகிறது.
குடிமக்கள் அடிமைகளாக வாழ தீர்மானித்துவிட்டால் அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை. கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவில் அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு தலைவர்களை துதிபாடி வாழும் மக்கள் தங்கள் தவறுகளிலிருந்து விழித்தெழ வேண்டும் . உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தலைமைப் பொறுப்புகளை வழங்கி அவர்களுடன் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் அனைத்துலக அரசர் கிறிஸ்துவிடம் மன்றாடுவோம்.
ஜெரோம் லூயிஸ்