Friday, May 3, 2024
Home » உறவின் பாலமாக அன்னை மரியாள்

உறவின் பாலமாக அன்னை மரியாள்

மாதா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட திருநாள் இன்று

by damith
November 21, 2023 6:00 am 0 comment

ன்னை மரியாள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருவிழாவை திருச்சபை பிரதி வருடமும் நவம்பர் 21ஆம் திகதி கொண்டாடுகிறது.

எருசலேமில் கி.பி.543 ல் நவம்பர் 21 ம் நாள் மரியாள் நோவா ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டது. அந்த திருவிழா தான் அன்னை மரியாள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ஆதாரமாக உள்ளது.

காணிக்கை அன்னை என்ற பெயரில் அழைக்கப்படும் அன்னை மரியாளின் பெயர் இந்த திருவிழாவில் பெறப்பட்டதுதான். இதற்கு விவிலிய ஆதாரங்களோ இறையியலோ கிடையாது.இது மரபின் அடிப்படையில் கொண்டாடப்பட்ட திருவிழாவாகும்.

இம்மரபின்படி அன்னை மரியாள் அவரது மூன்றாம் வயதில் தன்னுடைய பெற்றோரால் ஆலயத்தில் இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப் பட்டார்.

அன்றிலிருந்துஆலயத்தில் தங்கி ஆண்டவரின் பணியைச்செய்வதற்கு உதவி செய்தாள் என்றும் இந்த பாரம்பரியம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த விழா கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.மரபின் அடிப்படையில் என்பதால் திருத்தந்தையர்கள் இந்த திருவிழாவை அதிகாரபூர்வமாக்கத் தயங்கினார்கள். ஆயினும், திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இவ்விழாவினை வழிபாட்டு நாட்குறிப்பேட்டில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான சங்கம் புனைக்கதைகளை ஒட்டி கொண்டாடப்படும் பல திருவிழாக்களை திருவழிபாட்டிலிருந்து நீக்கியது. ஆனால், இந்த திருவிழாவை அது நீக்கவில்லை.

அன்னை மரியாள் சிறுவயதிலேயே தன்னுடைய வாழ்வை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறார். சிறு வயதிலிருந்தே, ஆலயப்பணிகளில் தன்னை இணைத்துக்கொள்கிறார். ஆண்டவரின் அடிமை என்று சொன்ன அவருடைய வார்த்தைகள் அந்த நேரத்தில் வந்தது அல்ல. அது தான் அவளது ஆன்மீகமாகவே இருந்தது. அந்த ஆன்மீகத்திற்கான அடித்தளம் இந்த விழாவிலிருந்துதான் பிறக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் உறவுகளுக்குள் இடர்கள் ஏராளம். பெற்ற தாயை, தந்தையை, உடன்பிறப்புகளை, உறவுகளை, நட்பை உதறித்தள்ளி ஊதாரியாய் அலைகின்றவர்கள் ஏராளம்.அலையவைப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

இச் சூழலில் நம் இறைவன் இயேசு உறவின் உச்ச நிலையை நமக்குஅன்னை மரியாளை வைத்து அறிமுகம் செய்கிறார்.

அன்னை மரியாளின் குழந்தைப் பருவம் தொடர்பான விடயங்கள் யாக்கோபின் நற்செய்தியில் காணக் கிடைக்கின்றன.

மரியாளின் பெற்றோர்களாகிய சுவக்கீன் மற்றும் அன்னா இருவரும் முதிர்ந்த வயது அடையும் வரை குழந்தை இல்லாமல் இருந்தார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தார்கள். இறைவனின் வாக்கு இவர்களுக்கு அருளப்பட்டது. அதன்படி மரியாள் பிறந்தார்.

குழந்தை பிறந்ததற்கு நன்றியாக தங்கள் மகளை கூட்டிக்கொண்டு எருசலேம் ஆலயத்திற்கு அவர்கள் சென்றார்கள் ஆண்டவருக்கு அவரை காணிக்கையாக்கினார்கள். அதன் பிறகு அவர் இளம் பெண் ஆவது வரை ஆலயத்தில் இருந்தார் என்று அதில் யாக்கோபு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று புனித மத்தேயு நற்செய்தியிலும் அது தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது. மரியாளுக்கு மூன்று வயது ஆன போது அவரது பெற்றோர் தங்களது நேர்த்தியை நிறைவேற்றுவதற்காக ஆலயத்திற்கு தங்கள் மகள் மகளை அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றார். இறைவனின் அன்னையாகவும் தூய்மையாக தயாரிக்கப்பட்டார் என்று அந்த நற்செய்தி குறிப்பிடுகின்றது.

கிறிஸ்துவின் வேறு பலன்களை முன்னிட்டு பிறப்பதற்கு முன்பே பாவத்திலிருந்து காக்கப்பட்ட அன்னை மரியாள் உலகத்தின் மீட்பராம் இயேசுவை கருத்தாங்கி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு தூயவராக விளங்கினார் என்பதற்கு இந்த விழா சிறந்த சான்றாகும்.

இறை வார்த்தையில் தந்தை இறைவனின் திருவுளத்தை கண்டு கடைப்பிடித்து வாழ்வதில் உருவாகும் ஆன்மீக உறவே உயரந்தது. அங்கே மனித மாண்பும் மதிப்புறும். இறை அருளும் பெருகும். இத்தகைய இறை உணர்வில் உருவாகும் உறவு மனிதனின் வாழ்வில் வசந்தத்தை எப்போதும் வீசச்செய்யும்.

அதற்காகத்தான் அன்னை மரியாளை உறவின் பாலமாக நமக்குத் தாரை வார்த்துத் தருகிறார் இறைவன். இன்று கொண்டாடப்படும் இந்த விழா அன்னை மரியாளைப் போல் விசுவாசத்தில் உறுதியானவர்களாக நம்மை வளர்த்துக் கொள்ள வழி வகுக்கப்படும்.

எல். செல்வா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT