Sunday, April 28, 2024
Home » வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு; உறவுகள் கடும் கண்டனம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு; உறவுகள் கடும் கண்டனம்

- சர்வதேச விசாரணையே தேவை தவிர நிதி இல்லை

by Prashahini
November 14, 2023 4:35 pm 0 comment

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும், நிதி கோரி நாம் போராடவில்லை எனவும், நிதி எமக்கு தேவையில்லை எனவும், நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும், இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம். இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம் எனவும், எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை எனவும், நிதி தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT