Monday, April 29, 2024
Home » பிரச்சினைக்கு மத்தியில் திருமலை இலுப்பைக்குளத்தில் புத்தர்சிலை

பிரச்சினைக்கு மத்தியில் திருமலை இலுப்பைக்குளத்தில் புத்தர்சிலை

- கடும் அதிருப்தியில் பிரதேச மக்கள்

by Prashahini
November 6, 2023 3:08 pm 0 comment

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் செப்டெம்பர் மாதம் (3) அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT