Wednesday, May 15, 2024
Home » வரங்களின் களஞ்சியம் திருச் செபமாலை

வரங்களின் களஞ்சியம் திருச் செபமாலை

by damith
October 24, 2023 6:00 am 0 comment

அக்டோபர் மாதத்தை செபமாலை மாதமாக திருச்சபை சிறப்பிக்கின்றது. செபமாலையின் மகத்துவத்தை நமக்கு நாமே நினைவுபடுத்தி அதிக விசுவாசத்துடன் செபமாலையை குடும்ப வெற்றிமாலையாகக் கருதி செபிக்க இந்த மாதம் நம் அனைவரையும் திருச்சபை அழைக்கிறது.

வீட்டில் குடும்ப செபமாலை சொல்வதுண்டா என்ற கேள்வி அவ்வப்போது, மறையுரை வேளையில் குருக்களால் கேட்கப்படுகின்றன. இதற்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இல்லை என்பதே! ஏன் செபமாலை சொல்வதில்லை என்பதற்கும் நம்மிடம் ஏராளமான பதில்கள் இருக்கின்றன.

-* நேரமில்லை சோம்பேறித்தனம்

-* குடும்பத்தார் ஒத்துழைப்பதில்லை

-* இளையோர் ஆர்வம் காட்டுவதில்லை

-* வேலைப்பளு என சாக்குப் போக்குகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது..

“செபமாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். அதை நம்பிக்கையுடன் பயன்படுத்தினால் ஆச்சரியத்தக்க பலன்களைப் பெற முடியும்”

புனித ஜோஸ் மரிய எஸ்க்ரிவா “

செபமாலை கடவுள் நமக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத புதையல்”- எனகின்றார். புனித லூயிஸ் தெ மோண்டபோர்ட்.

“செபமாலை செபிக்கும் ஒரு இராணுவத்தை என்னிடத்தில் கொடுங்கள். உலகத்தை நான் ஜெயித்துக் காட்டுவேன்” – புனித 9ஆம் பத்திநாதர்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள புனிதர்களின் வார்த்தைகள் அவர்களின் விசுவாசத்தில் ஊற்றெடுத்தவை. இது அவர்களின் வாழ்வின் அனுபவம். இதே வாழ்வு அனுபவத்தை மரியாயின் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம்.

இந்த விசுவாச அனுபவத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுவோம். குறிப்பாக நமது குடும்பத்தாருக்கு இந்த இறை அனுபவத்தை வழங்குவது அவசியம்.

ஏராளமான வரங்களின் களஞ்சியமாக செபமாலை திகழ்கிறது. செபமாலை செபித்து உடல் உள நலன்கள் பெற்றவர்கள் ஏராளம்.

வாழ்வின் குழப்பங்கள் தீர்ந்து தெளிவடைந்தவர்கள் ஏராளம். குழந்தை வரம் பெற்றவர்கள், திருமண வரம் பெற்றவர்கள் என செபமாலை செபித்து நலன்களால் நிரப்பப்பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

நாமும் பல வரங்களை செபமாலையின் வழியாக தாராளமாகவே பெற்றிருக்கிறோம். நாம் பெற்ற வரங்கள் நமது நம்பிக்கையை ஆழப்படுத்தட்டும். மற்றவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவி செய்யட்டும். “ மாலுமிகள் கரைசேருவதற்கு விடிவெள்ளி வழிகாட்டுவது போல கிறிஸ்தவர்கள் விண்ணகம் செல்வதற்கு மரியாள் வழிகாட்டுகிறார்” என புனித தோமஸ் அக்குவினாஸ் குறிப்பிடுகிறார்.

ஓவ்வொரு மறைபொருளையும் நம் வாழ்வோடு பொருத்திப் பார்த்து தியானிக்கின்ற போது நம் வாழ்வு செல்லும் பாதை நமக்கு வெட்ட வெளிச்சமாய் நம் கண்களுக்குத் தெரிய வருகின்றது. மேலும் எந்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்ற தெளிவும் நமக்கு கிடைக்கின்றது.

ஒவ்வொரு நாளும் செபமாலையை அன்புடனும், விசுவாசத்துடனும் செபித்தால் மரியாள் நம்மை அவருடைய மகனின் பாதையில் வழிநடத்திச் செல்வார் என்பது ஜோஸ் மரியா எஸ்க்ரிவா என்ற புனிதையின் கூற்று.

இத்தகைய மேலான வல்லமை மிக்க செபமாலையை குடும்பமாக நாம் செபிக்க, மற்றவர்களை செபிக்க வைக்க உறுதி ஏற்போம். ஒரு நாளைக்கு ஒரு செபமாலை சொன்னவர்கள் அதை இரண்டாகவும், இரண்டு சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அதை மூன்றாகவும், மூன்று வேளை சொல்பவர்கள் அதை நான்கு வேளையாக மாற்றி அளப்பரிய ஆற்றலை நாம் பெற்று நம்மைச் சார்ந்த நம் குடும்பத்தார், நாம் சந்திக்கும் குடும்பங்கள் நமது சமூகம் மற்றும் நாடும் பெற்றிட செபமாலை அன்னையை மன்றாடுவோம்.

அருட்பணி பென்சிகர் லூசன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT