Monday, April 29, 2024
Home » நற்பலன்களை வாழ்வில் தருவது நவராத்திரி விரதம்

நற்பலன்களை வாழ்வில் தருவது நவராத்திரி விரதம்

by damith
October 16, 2023 6:13 am 0 comment

நவராத்திரி விரதம் அன்னை சக்திக்குரிய விரதங்களில் ஒன்றாகும். புரட்டாதி மாதம் வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரையுள்ள ஒன்பது நாட்களும் தேவியை நோக்கி இந்துக்கள் வீரம், செல்வம். கல்வி ஆகியவற்றை வேண்டி விரதம் அனுட்டித்து வழிபடுதல் மரபு.

இந்த நவ இரவுகளில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை நல்கும் துர்க்காதேவியையும், தொடரும் மூன்று நாட்களும் செல்வத்தை நல்கும் இலக்குமி தேவியையும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை நல்கும் கலைமகளாகிய சரஸ்வதி தேவியையும் விரதமிருந்து வழிபாடு செய்தல் இந்துக்களது வழக்கமாகும். பத்தாம் நாள் விஜயதசமி என்றழைக்கப்படும் வெற்றித்திருநாளாகும். அன்னை சக்தி கொடியவனான மகிமாசுரனை கொன்றொழித்த வெற்றித் திருநாளுமாகும். மகிடம் என்பது தாமச குணத்தைக் குறிக்கும். எனவே விஜயதசமித் திருநாள் தாமச குணத்தைப் போக்கி, சாத்வீக குணத்தை நல்கிய திருநாளாகும்.

அற்றையதினம் சகல ஆயுதங்களுக்கும் ஓய்வு கொடுத்து ஆயுதபூசை செய்யும், அமைதியை நாடும் உன்னத நாள் ஆகும். சிறார்களுக்கு கல்வி ஆரம்பிக்கும் சிறந்த நாள். இந்நாட்களில் கலையழகு நிரம்பும் பொம்மைகளை கொலுவில் வைத்து சக்தியின் கலைப்படைப்பை போற்றி வழிபடும் வழக்கம் எம்மவரிடையே உள்ளது.

இந்த ஒன்பது இரவுகளும் யாவருக்கும் வேண்டிய வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றை தேவி வழிபாட்டின் மூலம் பெறலாம் என்பது நம்பிக்கை. விஜயதசமி தினத்தை வெற்றித் திருநாளாகக் கொண்டாடுவதுடன் இத்தினத்திலே கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுவதுண்டு.

நவராத்திரியில் இடம்பெறும் அஷ்டமி மகா அஷ்டமி என்றும், நவமி மகாநவமி என்றும்அழக்கப்படும். இச்சந்தர்ப்பத்தில் இவ்விழாவின் பின்னணியிலுள்ள. புராண வரலாறொன்றை நோக்குவோம்.

முன்னொரு கால் மகிடாசுரன் என்னும் ஓர் அசுரன், தேவர்களையெல்லாம் கொடுமைப்படுத்தவே அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய விஷ்ணு இவ்வசுரனுக்கு மரணம் ஆண்மகனால் நிகழாது என்று விடைபகர்ந்தார். இதனைச் செவிமடுத்த தேவர்கள் அன்னை மகாசக்தியிடம் தஞ்சமடைந்தனர்.

இதன் விளைவாக அன்னை சக்தி மகிடாசுரனைக் கொன்று, தேவர்களைக் காத்தருளப் புறப்பட்டாள். போர்க்களத்தில் மகிடாசுரன் மீது பாசத்தை ஏவினாள். தொடந்து போரிட்ட அசுரனை, தேவி கொன்றொழித்தாள். இதன் காரணமாக அன்னை மகிடாசுரமர்த்தனி என்றழைக்கப் பெற்றாள். பத்தாம் நாளான விஜயதசமியன்றே, அன்னை போரின் வெற்றியையீட்டினாள். இந்நிகழ்வையே ஆலங்களில் நவராத்திரி காலத்தில் கன்னி வாழை வெட்டும் நிகழ்வு உணர்த்தி நிற்கிறது.

கிருது யுகத்திலே சுகேதன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் ஓர் சிறந்த பக்திமான். சந்தர்ப்பவசத்தால் அவன் பகைவர்களிடம் தனது இராச்சியத்தை இழந்து வனத்தில் வாசம் செய்யும் நிலைமை ஏற்பட்டது. அந்நேரத்தில் அவனைச் சந்தித்த ஆங்கிரசர் என்னும் முனிவர், அவனுக்கு நவராத்திரி பூசையின் மகிமையையும், பயனையும் உணர்த்தி,அவனை நவராத்திரி விரதத்தை முறைப்படி அனுட்டிக்குமாறு அறிவுரை கூறவே, அவனும் முறைப்படி இவ்விரத்தை அனுட்டித்து, அதன் பலனாக இழ்ந்த தனது இராச்சியத்தை மீண்டும் பெற்றுக் கொண்டான்.

சக்தியால் உலகம் இயங்குகின்றது. உலக மக்களாகிய நாம் நலமாக, வளமாக வாழ வேண்டுமாயின் அன்னை சக்தியை முறைப்படி வழிபட்டாக வேண்டும். இதற்கு உகந்த காலம் இந்த நவராத்திரி விரத காலமாகும். சக்தியை வேண்டினால் சக்தி பெறலாம்.

புரட்டாதி மாதத்தில் பூர்வபக்க பிரதமை முதல் நவமி வரை இடம்பெறும் ஒன்பது நாட்களின் இரவுகளே ‘நவராத்திரி’எனப்படும். இந்த ஒன்பது நாட்களின் முதல் நாளே இல்லம் பெருக்கி, சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு கும்பம் வைத்தாக வேண்டும். தொடர்ந்து நவதானியங்களை ஒரு மண்பாத்திரத்தில் மண்ணிட்டு, நீர்விட்டு விதைக்க வேண்டும். தேவியை கும்பத்தில் எழுந்தருளப்படுத்தி முதல் மூன்று நாட்களும் துர்க்காதேவியையும், நடு மூன்று நாட்களும் இலக்குமிதேவியையும், கடைசிமூன்று நாட்களும் கலைமகளாகிய சரஸ்வதி தேவியையும் மலர்களால் அர்ச்சித்து நிவேத்தித்து வணங்க வேண்டும்.

பூசையின் போது நிவேதிக்க முறையான பண்டங்கள் ஆவன: பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், கடலை, அவல், கற்கண்டு, பழம் பாக்கு வெற்றிலை, பயறு, வடை, பாயசம், அப்பம் முதலியன.

மகாநவமியன்று புத்தகங்கள், ஆயதங்கள், எழுதுகோல்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை தேவிபூசையில் வைத்து பூசித்து, விஜயதசமி அன்று காலை தேவிபூசையின் பின்னர் எடுத்து உபயோகிக்க வேண்டும். இவ்வண்ணம் பயபக்தியோடு வணங்கி வரம் பெறல் வேண்டும்.

நவராத்திரி பூசையின் போது துர்க்காதேவிக்கு குங்குமம், செந்நிற மலர்கள் ஆகியவற்றால் பூசை செய்தல் உத்தமமாகும். இலக்குமிதேவிக்கு செந்தாமரை, வில்வம் ஆகியவற்றால் பூசை செய்தல் உகந்ததாகும். சரஸ்வதி தேவிக்கு வெண்டாமரை, மகிழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்தல் சிறந்ததாகும்.

இந்தவகையில் தேவியை முதன்மையாக கொண்ட நவராத்திரி விழாவைக் கொண்டாடுவோம். நற்பலன்களைப் பெறுவோம்.

‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் நின்தன் செயல்களன் நியில்க’

திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT