Monday, April 29, 2024
Home » கிழக்கை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்

கிழக்கை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்

- மகாவலி திட்டத்தில் விடுபட்ட மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
October 8, 2023 7:14 pm 0 comment

– நிலாவெளியில் இருந்து பாணம‌ வரை விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டம்

திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நிலாவெளி முதல் பானம வரையிலான விரிவான சுற்றுலாத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (08) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

மட்டக்களப்பு ஒரு அதிர்ஷ்டமான மாவட்டம். சுமார் 150 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இரண்டு பாடசாலைகள் இங்குள்ளன. நான் நேற்று புனித மைக்கல் கல்லூரியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். இன்று செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்துள்ளேன்.

மறைந்த அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகன் இந்தப் பாடசாலையில் கற்றவர். ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அமைச்சரவையில் நான் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இப்பாடசாலையில் செங்கலடி, கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உயர்தரக் கல்வியைப் பெற முடிந்தது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது அதனைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், சில மாணவர்கள் கணக்கியல் உள்ளிட்ட ஏனைய பாடநெறிகளை படிக்கின்றனர்.

மேலும், இந்த மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்தப் பாடசாலையில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வகம் இல்லை. எனவே, இப்பாடசாலைக்கு உயர்மட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். இந்த பாடசாலை முன்னேற்ற வேண்டும். இங்கு மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி நடனத்திலும் சிறந்து விளங்குகின்றனர்.

இன்று செங்கலடி பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது. இப்பகுதிகள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவான அமைச்சர்களான .தேவநாயகன் மற்றும் ராஜதுரை ஆகியோரின் விருப்பமும் அதுவே. அந்த ஆசையை நிறைவேற்றுவோம்
.
மட்டக்களப்பு மாவட்டம் கல்வியினால் அபிவிருத்தியடைந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் இன்னும் வலுவாக இல்லை. அடுத்த 10 வருட திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பொருளாதார ரீதியாக பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மகாவலி திட்டத்தின் ஊடாக இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன திட்டமிட்டிருந்தார். ஆனால் யுத்தம் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. தற்போது திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுடன் இணைந்து பாரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பியகமவில் 400 ஏக்கர் முதலீட்டு வலயம் உள்ளது. ஆனால் திருகோணமலை 1000 ஏக்கர் முதலீட்டு வலயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகம் முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கான திட்டத்தை சுபானா ஜூரான் சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்துள்ளது. அதனை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அப்போது திருகோணமலை பாரிய நகரமாக உருவாகும். மேலும் இது பொருளாதார ரீதியாக வலுவான மையமாக மாறும். மறுபுறம், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.

மகாவலி திட்டத்தில் விடுபட்ட மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் நவீன விவசாயத் துறையை உருவாக்க உத்தேசித்துள்ளோம். இந்த மாகாணம் தற்போது அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது.புதிய பயிர்களை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பிக்காக புதிய கால்நடைகளை வழங்குவதன் மூலம் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இலங்கையில் உள்ள அம்பேவெல போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் ஆதரவையும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவையும் பெற எதிர்பார்க்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. காடு மற்றும் ஏரி பகுதிகள் சுற்றுலாத்துறைக்காக மேம்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 10 வருடங்களில் திருகோணமலை நகரின் அபிவிருத்தி, மகாவலி ஏ மற்றும் பீ பிரிவுகளின் அபிவிருத்தி மற்றும் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இந்த மாகாணங்களில் புதிய பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது. தற்போதைய பிரச்சினையான பால் பண்ணையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்..

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாளேந்திரன், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் தேவதாசன் குகதாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT