Sunday, April 28, 2024
Home » மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

- ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பு

by Rizwan Segu Mohideen
October 7, 2023 10:18 am 0 comment

– நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

பொலன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜெண்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில், கவனத்தை செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,

“கடமை செய்யும் தமது பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் விடுதியில் வைத்து இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது, நீதியினை நிலைநாட்டும் பொலிஸாருக்கே இந்த நிலையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலையில், காவல்துறையினர் மீது பொதுமக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு மத்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் சிறுபான்மை காவல்துறை அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடூரங்கள் நிறுத்தப்படல் வேண்டும் என்பது மட்டுமல்லாது, இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்பவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகிய தங்களது கடமையாகும்.”

அதேவேளை, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணம் தொடர்பில் கொடுத்துள்ள அறிக்கையானது, கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டுள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி என்றும் ஊழல், மோசடிகளை வன்மையாக எதிர்க்கும் மனப்பக்குவத்தை கொண்ட ஒருவராகவும் காணப்பட்டதாக பிரதேச மக்கள் சான்றுபகர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்பூல் ஹனீபா பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு பிரிவான 119க்கு பொறுப்பாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் இதனை கவனத்தில்கொள்ளுமாறும் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூரங்கள், இனியும் இடம்பெறாதவாறு சட்ட நடவடிக்கையெடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பநிலையினை கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான நீதியினை உறுதிப்படுத்துமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் ஹனீபாவின் மரணம் தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

பொலிஸ் சார்ஜன்ட் ஹனீபாவின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பொலிஸ் மாஅதிப‌ர், பாதுகாப்பு அமைச்ச‌ர் ஆகியோரிட‌ம் கோரிக்கை வைத்துள்ள‌து.

மேற்படி விடயமாக, மேல் பெயர் குறிப்பிடப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் பொலிஸ் விடுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டதாக அவரது மரணம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் நீதியான விசாரணை செய்யப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவை வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஆக கடமையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த மக்பூல் முஹம்மது ஹனீபா (வயது 52) என்பவரின் சடலம் பொலிஸ் விடுதியிலிருந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்தவாறு கடந்த சனிக்கிழமை (30) மீட்கப்பட்டிருந்தது.

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் செவ்வாய்க்கிழமை 03.10.2023 சட்ட வைத்திய நிபுணரினால் உடற்கூராய்வு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் இரவு ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சடலம் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்ததை வைத்தும் சடலத்தில் காயம் இருந்ததனாலும் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் இரத்தப் போக்கு இடம்பெற்று மரணம் சம்பவித்திருப்பதாக பொலநறுவை சட்ட வைத்திய நிபுணர் யூ.எல்.எம்.எஸ்.பெரேராவின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுநேர பொலிஸ் பாதுகாப்பிலுள்ள வெலிக்கந்தைப் பொலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள பொலிஸார் தங்கும் விடுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கரிசனை எடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத்
கேட்டுக் கொண்டுள்ளார்.

இது விடையாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான S.S.M. சுபைர் B.A இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் உடன் பேசியள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிய‌ வ‌ருகிற‌து.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT