Thursday, May 2, 2024
Home » ஆசிரியர்கள் மனசாட்சியின் வழியில் பணியாற்றி மாணவர்களை நற்பிரஜைகளாக மாற்ற வேண்டும்

ஆசிரியர்கள் மனசாட்சியின் வழியில் பணியாற்றி மாணவர்களை நற்பிரஜைகளாக மாற்ற வேண்டும்

by sachintha
October 6, 2023 2:37 pm 0 comment

பணிகளில் மிக மேலானது ஆசிரியர் பணியாகும். உலகில் எத்தனை தான் தொழில்கள் இருப்பினும் அவை அனைத்துக்கும் மேலாக ஓர் உயர்ந்த இடத்தை வகிப்பது ஆசிரியர் பணியாகும். ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 06ஆம் திகதி இலங்கையில் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு பிள்ளையின் மறைந்து கிடக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணர்வதற்கு ஆசிரியர்பணி வழிகாட்டுகிறது. இன்றைய உலகம் கல்விச் சுடரினால் பிரகாசிப்பதற்கு ஆசிரியர்களே காரணம். சிறந்ததொரு மாணவர் சமூகம் உருவாகுவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.

இன்றைய சிறுவர்கள்தான் நாளை எமது வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளாக வர இருப்பவர்கள். இதனால் ஆசிரியர்கள் தமது பணியை திருப்பணியாகக் கொண்டு ஆற்றுவது அவசியம். கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் மாணவர்கள் முன்னோக்கிச் செல்ல ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் .

பெற்றோர் தங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்லவர்களாக வரவேண்டும் என்ற மேலான நோக்கத்துடன் அவர்களை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இதே நோக்கத்தை ஆசிரியர்கள் மறந்து விடலாகாது.

ஆசிரியர்கள் எப்போதும் கற்பித்தலில் திறமை கொண்டவர்களாக விளங்கவேண்டும். மாணவர்களிடத்தே கற்கும் திறமைகளையும் கற்பதற்கான ஆர்வத்தையும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பணியை திருப்தியாக நடத்துவதற்கான வழிமுறைகளை அறிய வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் விஷயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் மனம் அறிந்து, குணம் அறிந்து கற்பிக்க வேண்டும். தாங்கள் செய்யும் பணி மகத்தானது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தாங்கள் எப்போதும் ஆசிரியர்கள் என்ற கௌரவத்துடன் செயல்பட வேண்டும். ஆசிரியர்களிடம் நல்ல பழக்கவழக்கங்கள் காணப்பட வேண்டும், ஆசிரியர்கள் நிறைந்த அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களின் அறிவுமட்ட வளர்ச்சியிலேயே மாணவர்களின் அறிவு வளர்ச்சியும் தங்கியுள்ளது. ஆசியர்கள் எப்போதும் கற்பிப்பவர்களாக மட்டுமல்லாது கற்பவர்களாகவும் இருக்க வேண்டும். பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் இவற்றையெல்லாம் நிறைய வாசிக்க வேண்டும். இவற்றோடு தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். தாங்கள் அறிவு நிறைந்தவர்களாக இருந்தால் மட்டுமே அது மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அறிவுத்தேடலில் ஈடுபாடு வைத்திருக்கும் ஆசிரியர்கள் இன்று மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

தாங்கள் கற்பிக்கப் போகும் பாடங்கள் தொடர்பாக தெரியாத பகுதிகள், சந்தேகமான இடங்கள் இருப்பின் அவற்றை தெரிந்தவர்களிடம் கேட்டறிந்து கற்பிக்க வேண்டும். அது மாணவர்களின் கற்றலுக்கு நல்லது. இது சிறந்த ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நற்பண்பாகும்.

தங்களிடம் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும். வகுப்பறையிலே மாணவர்கள் பலவித குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் மாணவர்களை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். சில மாணவர்கள் வகுப்பறையிலே குறும்புகள் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இதற்காக ஆசிரியர்கள் பொறுமை இழந்துவிடாமல் அவர்களுக்கு அன்பு காட்டி, ஆதரவு கொடுத்து வழிகாட்ட வேண்டும். தேவையற்ற வார்த்தைகளால் மாணவர்களை நோகடிக்கக் கூடாது. தண்டனைகள் வழங்கக் கூடாது. மனஅழுத்தங்களை ஏற்படுத்துவதும் கூடாது. ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். மாணவர்களுக்கு நல்லநல்ல வழிமுறைகளை பின்பற்றி கற்பிக்க வேண்டும். இதுவெல்லாம் நல்ல ஆசிரியர்களுக்குரிய பண்பாகும்.

பெற்றார்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி விஷயமாக ஆசிரியர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் காணப்படும் குறைகள் நடத்தைகள் பற்றியெல்லாம் ஆசிரியர்கள் பெற்றார்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மாணவர்களை கல்விமான்களாக உருவாக்கிவிடும் ஆசிரியர்களே அன்புக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள். உயர்ந்த அந்தஸ்திலே வைத்து மதிக்கக் கூடிய எமது ஆசிரியர்களில் ஒருசிலர் ஆசிரியர்பணிக்கே சேறுபூசும் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. சில ஆசிரியர்கள் குடிபோதையிலும் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் தங்களிடம் பாடம் படிக்க வரும் சிறுவர் சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.

புனிதமான ஆசிரியர் பணியை மாசுபடுத்தும் இவ்வாறானோரின் செயல்கள் குறித்து நாகரிக உலகம் வெட்கப்பட வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டிய இவர்கள் இவ்வாறாக கீழ்த்தரமாக நடந்துகொள்வது கவலைக்குரியதாகும். ஆகையால் ஆசிரியர்கள் எப்போதும் தங்களது கௌரவத்தையும் மதிப்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எம்.ஏ.அத்தாஸ்…

மாத்தறை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT