Saturday, July 13, 2024
Home » குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கைகோர்த்த சமூக மருத்துவர்கள் கல்லூரி மற்றும் பேபி செரமி

குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கைகோர்த்த சமூக மருத்துவர்கள் கல்லூரி மற்றும் பேபி செரமி

by Rizwan Segu Mohideen
October 5, 2023 4:47 pm 0 comment

குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை தடுக்க முடியுமாக இருந்த போதிலும், இலங்கையில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை காயம் காரணமாக மரணிப்பதோடு, தடுக்கக்கூடிய விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் 50 குழந்தைகள் வீதமும், மாதத்திற்கு 215 குழந்தைகளும் இவ்வாறு மரணிக்கின்றனர். தொடரான புத்தாக்கமான செயற்பாடுகள் மூலம் சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துகளை தடுக்கக்கூடிய விதத்தை, இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (College of Community Physicians) மற்றும் பேபி செரமி (Baby Cheramy) இணைந்து மேற்கோண்டுள்ளன. இந்த கூட்டாண்மையானது, அதிகரித்து வரும் விபத்துகளை குறைக்கும் முயற்சியின் அடிப்படையில், குழந்தைகளுக்கு சூழலில் ஒழிந்துள்ள ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கையின் சமூக மருத்துவர்களின் கல்லூரியானது, சமூக மருத்துவத் துறையில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த பிரதான அமைப்பாகும் என்பதோடு, உயர்தர பராமரிப்பு மற்றும் பொதுச் சுகாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் மூலம் இலங்கை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அது பணியாற்றி வருகிறது. அதே சமயம் இலங்கையில் முன்னணி வகிக்கின்ற, அனைவராலும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமியானது, குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட 60 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இலங்கையில், குழந்தைகளின் இறப்புக்கான காரணங்களுக்கான ஐந்து முக்கிய விடயங்களில் காயங்களும் உள்ளடங்குகின்றது. போக்குவரத்து விபத்துகள், நீரில் மூழ்குதல், வீழ்தல், தீக்காயம் ஏற்படுதல், விஷம் போன்றவை இவ்வாறனவற்றில் முக்கிய காரணங்களாகும்.

வெளிப்புற காயங்கள், நாய் கடித்தல், எலும்பு முறிவுகள், என்புகள் விலகுதல் உள்ளிட்ட காயங்களின் தன்மையானது பல்வேறு வகையில் மாறுபடுகின்றன. 2022 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளால் 2,713 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான நோயைத் தவிர, காயமடைந்த குழந்தைகள் நீண்ட கால இயலாமை மற்றும் நாட்பட்ட வலியால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் வாழ்நாளில் வயதுக்கு ஏற்ற அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், இதன் காரணமாக அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக வருடாந்தம் ரூ. 1,100 மில்லியன் அரச நிதி செலவிடப்படுகிறது. குழந்தைகளிடையே ஏற்படும் விபத்துகளில், 10-14 வயதுப் பிரிவு சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துகளின் விகிதம் 47% ஆகவும், அதைத் தொடர்ந்து 5-9 வயதுடைய சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துகள் 19% ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த கூட்டாண்மை நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஷிரோமி மடுவகே, “இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியானது பேபி செரமியுடன் இணைந்து, குழந்தைகளிடையே காயம் ஏற்படுவதை தடுப்பதன் முக்கியத்துவத்தின் மூலம் அங்கவீனமுறுதல் உள்ளிட்ட குறைபாடுகள் மற்றும் இறப்புகளை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்தக் கூட்டாண்மை தொடர்பான அறிவிப்பின் மூலம், குழந்தைகளை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்த தகவல்களை அனைவருக்கும் பரப்பும் வகையில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, தொடரான செயற்பாடுகளை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். எமது முதன்மை நோக்கமானது, உயர்தர பராமரிப்பு மற்றும் பொதுச் சுகாதார முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம், குழந்தைகளின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வதற்கான வழிகளைப் பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பல முக்கியமான திட்டங்களை நாம் வெளியிடவுள்ளோம்.” என்றார்.

இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர், வைத்தியர் கபில ஜயரத்ன இங்கு உரையாற்றுகையில், “ஒவ்வொரு வருடமும் 16 வயதுக்குட்பட்ட பிரிவினரில் 260,000 இற்கும் அதிகமானோர் காயங்கள் தொடர்பில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மத்தியில், காயம் தொடர்பான இறப்புகளில் பெரும்பாலானவை மருத்துவமனைகளுக்கு வெளியே நிகழ்கின்றன. சாத்தியமான அபாயங்கள் குறித்து, அனைத்து நேரங்களிலும் சிறுவர்களை கவனிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது. நாம் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், குழந்தைகள் ஆக்கபூர்வமாகவும், விளையாட்டில் ஈடுபடவும், அவர்களது சூழலை அவர்கள் ஆராயவும் வாய்ப்பை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளிடையே ஏற்படும் காயங்களைத் தடுப்பதற்கான அவசரத் தேவையை உணர்த்தும் வகையில், பேபி செரமியின் ஆதரவுடன் எமது அமைப்பின் தலைமையிலான இந்த முயற்சியானது காலத்தின் தேவையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களைத் தடுப்பதற்கு எளிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். மிகவும் அவதானமாகவும், தொடர்ச்சியாகவும் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் காயங்களைத் தவிர்க்கலாம். எம்மால் முன்னெடுக்கப்படும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை இந்த திட்டத்தின் ஊடாக பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்கே உள்ளதால், குழந்தைகளிடையே ஏற்படும் காயங்களைத் தடுப்பது குறித்த எமது விழிப்புணர்வுச் செய்தி நாடு முழுவதும் அவர்கள் கொண்டு சேர்ப்பார்கள் என நாம் நம்புகிறோம் ” என்றார்.

Hemas Consumer Brands இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர தெரிவிக்கையில், “விழிப்புணர்வு இன்மை மற்றும் அலட்சியத்தால் சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துக்களின் அதிகரிக்கும் போக்கு காணப்படுகின்றது. எனவே, விபத்துகளில் இருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கத் தேவையான அத்தியாவசிய அறிவை வழங்கி, அதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் ஏனைய பொறுப்பாளிகளுக்கு, குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பேபி செரமி தனது வர்த்தகநாம நோக்கத்தை செயற்படுத்தி வருகிறது. வீட்டிலும் வெளியிலும் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, அவர்களை பராமரிப்பவர்களுக்கு, முக்கியமான மற்றும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை வழங்கும் இலங்கையின் சமூக மருத்துவர்களின் கல்லூரியுடன் இணைந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் காயங்களுக்கான காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், காயத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பிலுமான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதை அடைவதற்காக, வீடுகளில் ஏற்படும் விபத்து தடுப்பு வழிகாட்டி கையேடுகளை தயாரித்தல் மற்றும் அவற்றை விநியோகம் செய்தல், பாதுகாப்பு குறிப்புகள், சுவரொட்டி பிரசாரங்கள், குழந்தைகளிடையேயான விபத்து தடுப்பு தொடர்பான டிஜிட்டல் பிரசாரங்கள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை பேபி செரமி முன்னெடுக்கும்.” என்றார்.

அனைவராலும் மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமியானது, அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண்டுள்ளதோடு, வளங்களை பேணுதல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியானது, நீண்ட கால புள்ளிவிபர கண்காணிப்பையும், விபத்துகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் வெற்றி தொடர்பான மதிப்பீடுகளையும் மேற்கொள்ளும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதில் பேபி செரமியின் அர்ப்பணிப்பானது, அதன் கடந்தகால திட்டங்களில் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் தந்தையர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வுத் திட்டங்கள், உள்ளீர்க்கப்பட்ட பெற்றோருக்கு அவசியமான அறிவு, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி தொடர்பான அக்கறை, பெற்றோர் தகவல் வழிகாட்டி கையேடுகளை தயாரித்தல் மற்றும் விநியோகித்தல், டிஜிட்டல் ஊடகத் தளங்கள் மூலம் நிபுணர்கள் மூலமான அறிவூட்டும் கேள்வி பதில் அமர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் இதில் அடங்குகின்றன. தங்கொட்டுவையில் அமைந்துள்ள Baby Cheramy Safety Institute நிறுவகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 8 படிகளைக் கொண்ட பாதுகாப்புச் செயன்முறையின் மூலம், இலங்கையின் குழந்தைப் பராமரிப்பு தொழில்துறை தயாரிப்புகளில் பாதுகாப்புத் தரங்களை நிறுவுவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பான தயாரிப்புகளைப் பெறுவதை உறுதி செய்யவும் இவ்வர்த்தகநாமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்கான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த பன்முக முயற்சிகள் கோடிட்டுக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT