Monday, April 29, 2024
Home » இலங்கை முஸ்லிம் ஆய்வியல் துறையில் ஒரு அடையாளம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி

இலங்கை முஸ்லிம் ஆய்வியல் துறையில் ஒரு அடையாளம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி

by sachintha
October 3, 2023 5:23 pm 0 comment

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் பிரபல நிகழ்ச்சியாக விளங்கிய “தத்துவ வித்துக்கள்” தொடர் பேச்சின் மூலம்

பல்லாயிரம் நேயர் நெஞ்சங்களை கவர்ந்து கொண்டவர் கலாநிதி சுக்ரி. இமாம் அபூ தாலிப் அல்மக்கீ ( மரணம் 996) அவர்களின் “கூதுல் குலூப்”, இமாம் கஸ்ஸாலி (1058-1111) அவர்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” போன்ற அரபு மூலாதாரங்கள் கலாநிதி அவர்களின் இத்தொடர் பேச்சை அலங்கரிக்கக் காரணமாகின. இது அவரின் அரபு மொழித் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பேராளுமையின் சின்னம், அறிவுப் பண்பாட்டின் அடையாளம் மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புலமைத்துவ வரலாற்றில் தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். தென்னிலங்கையில் பிறந்து தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் அறிவுத் தொண்டாற்றியவர்.

தேச நலனுக்காக உழைத்த கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் (1933-/2005) அவர்களின் செல்வத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு தனது அறிவால் பெரும் பங்காற்றியவர். நான்கு தசாப்த காலம் பணிப்பாளராகப் பணியாற்றி அக்கலாநிலையத்தைச் செம்மைப்படுத்தியவர். அவர் இவ்வுலகை விட்டு மறைந்து மூன்று ஆண்டுகள் கழிந்தாலும் பலர் மனங்களில் மறையாது இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பரீட்சகர், ஆலோசகர்… என பல்பரிமாணங்களில் பரிணமித்தவர். அவர் நம்மிடையே விட்டுச்சென்ற சிந்தனைகளும் கருத்துக்களும் ஏற்றம் மிகுந்தவை, எண்ணிமாளாதவை. பல தலைப்புக்களில், கோணங்களில் ஆராயப்படத் தகுதியானவர் அவர்.

பன்மொழித் தேர்ச்சி

“தாய்ப் பால் போல தாய்மொழிக் கல்வியும், சத்துணவு போல பன்மொழி அறிவும்” என்பது அனுபவ மொழி. பன்மொழிப் புலமை ஒருவருக்கு மேன்மையாக சிந்திக்க, பல வடிவங்களில் விடயங்களை ஆராய உதவி செய்கிறது. ஒருவரின் அறிவுத் திறனை கூடிய காலம் பேண உதவுகிறது. மத, சமூக, கலாசார அடையாளங்களையும் பண்பாடுகளையும் ஆழமாக அறிந்து கொள்ள அது துணை புரிகிறது.

அந்த வகையில், மத்திய கால அறிவியல் துறையின் அபார வளர்ச்சிக்கு பணியாற்றிய முஸ்லிம் மேதைகளும் நவீன மற்றும் சமகால சிந்தனைச் சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட புத்திஜீவிகளும் தமது அறிவுசார் பங்களிப்புக்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய பின்புலமாகச் செயற்பட்டது அவர்கள் பெற்றிருந்த பன்மொழித் தேர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இந்த அறிவியல் பாரம்பரியத்தில் தன்னையும் வாரிசாக மாற்றிக்கொண்ட கலாநிதி சுக்ரி, தனது புத்திஜீவித்துவத்தை வெவ்வேறு வடிவங்களில் வெற்றிகரமாக வெளிக்காட்டினார். Islam and Education (1979), Mankind in Peril (1979) மற்றும் Muslims of Sri Lanka: Avenues to Antiquity (1986) போன்ற நூல்கள் அவரின் ஆங்கில மொழிப்புலமையின் சான்றுகள்.

செம்மொழியாம் தமிழ் மொழியில் அவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் ஏராளம். ஆத்ம ஞானிகளும் அறப்போராட்டங்களும் (1984), நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் (1993), இஸ்லாமும் மனித உரிமைகளும் (1996), இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் (1999) போன்ற நூல்களும் ஏனைய பல எழுத்தாக்கங்களும் முஸ்லிம் தமிழ் இலக்கியத்துக்கு கலாநிதி அவர்கள் ஆற்றிய பங்களிப்பின் அடையாளங்கள்.

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் பிரபல நிகழ்ச்சியாக விளங்கிய “தத்துவ வித்துக்கள்” தொடர் பேச்சின் மூலம் பல்லாயிரம் நேயர் நெஞ்சங்களை கவர்ந்து கொண்டவர் கலாநிதி சுக்ரி. இமாம் அபூ தாலிப் அல்மக்கீ ( மரணம் 996) அவர்களின் “கூதுல் குலூப்”, இமாம் கஸ்ஸாலி (1058-1111) அவர்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” போன்ற அரபு மூலாதாரங்கள் கலாநிதி அவர்களின் இத்தொடர் பேச்சை அலங்கரிக்கக் காரணமாகின. இது அவரின் அரபு மொழித் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

அத்துடன், தேசிய – பன்னாட்டு அரங்குகளில் பல மொழிகளில் அவர் வழங்கிய சொற்பொழிவுகள், மாநாட்டுப் பேருரைகள், தொடக்க உரைகள், ஆய்வுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போன்றனவும் அவரின் மொழிச் செழுமைக்கு சான்றுகளாகின்றன. தேசிய மொழி சிங்களத்திலும் பல கலந்துரையாடல்களை நடத்தி, உரைகளையும் நிகழ்த்த அவர் தவறவில்லை.

பல்கலை நிபுணத்துவம்

“நூல் பல கல், பலன் பல பெறுவாய்” எனும் முன்னோர் வாக்கிற்கு முத்தாப்புக் கொடுத்தவர் கலாநிதி சுக்ரி. விசால அறிவு மீது கொண்ட ஆர்வம், அவரின் அன்புக்குரிய பேராசான்களின் அறிவாளுமைத் தாக்கம் என்பதுடன் இடைக்கால மற்றும் நவீனத்துவ முஸ்லிம் அறிஞர்கள் பலர் பெற்றிருந்த கலைப் பன்மைத்துவ குணாதிசயங்களும் கலாநிதி அவர்களின் கல்வி ஆளுமையில் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தன.

இதன் விளைவாக, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாசிப்பு, தொடரான அறிவுத் தேடல், துறைசார் நிபுணர்களுடனான சந்திப்புகள் மூலம் பரந்த அறிவையும் விரிந்த புரிதலையும் பெற்றுக் கொண்ட கலாநிதி அவர்கள், தஸவ்வுப் எனும் தனது துறைசார் கல்விக்கு அப்பால் பல கலைகளிலும் கால் பதிக்கலானார்.

அல்குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், தமிழ் இலக்கியம், அரபு மொழி, மெய்யியல், மதங்கள், வரலாறு, சமூகவியல், ஆய்வு முறைமை போன்ற இன்னோரன்ன துறைகளில் பாண்டித்தியத்தை அவர் வெளிப்படுத்தினார்.

ஒருங்கிணைந்த அறிவு (Integrated Knowledge)

தன்மையில் முரண்பட்ட, கொள்கையில் வேறுபட்ட இரு அறிவுத் துறைகளை ஒன்றுசேர்த்து நோக்கும் ஓர் அறிவார்ந்த செயல் அல்லது முயற்சியை ஒன்றிணைந்த அறிவு எனலாம். மானுடக் கலைகளை (Human Sciences) இஸ்லாமியப் பார்வையுடன் அணுகி, அறிவுகளை நெறிப்படுத்துவதன் மூலம் சிறந்த கற்றல்- கற்பித்தல் மரபை எவ்வாறு தோற்றுவிக்க முடியும் என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதன் சாத்தியப்பாடுகளையும் நிரூபித்துள்ளனர்.

இந்த கருத்தாடல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கையில் இச்சிந்தனையை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் அறிவியல்பூர்வமாக அறிமுகம் செய்தவர் எனக் குறிப்பிட முடியும்.

“இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம்” எனும் (2016) ஆய்வுக் கட்டுரை யில் அறிவு, அதன் வகைகள், அவற்றின் ஒருங்கிணைப்பு தொடர்பாக அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் மிகப் பிரதானமானவை. “இஸ்லாமிய நோக்கில் அறிவு அல்லது கலைகள் இரண்டு வகைப்படும். ஒன்று ‘அல்-உலூமுல் நக்லிய்யா’ எனும் இறை வஹி (Revelation) வழிகாட்டல் அடிப்படையில் எழுப்பப்பட்ட கலைகள். குர்ஆன், ஹதீஸ், அகீதா, பிக்ஹு போன்ற சன்மார்க்கக் கலைகள் இவற்றுள் அடங்கும். இரண்டாவது, பகுத்தறிவின் (Reason) அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கலைகளான பொறியியல், தத்துவம், மருத்துவம், பொருளியல், வானவியல் போன்ற மானுடக் கலைகள். இவை ‘அல்-உலூமுல் அக்லிய்யா’- பகுத்தறிவு ரீதியான கலைகள்- என அழைக்கப்படும்.

கல்வி, இலக்கியம், வரலாறு, உளவியல், ஒழுக்கவியல், தொல்பொருளியல், சூழலியல், ஆய்வியல், அழகியல் என பல ஆய்வுத் தலைப்புக்களில் நூல்கள், சஞ்சிகை ஆக்கங்களை வெளியிட்டுள்ளமை கலாநிதி சுக்ரி அவர்களின் வரலாற்றுச் சாதனைக்கான சான்று. இன்னும் மேலாக, அறிவுகளுக்கிடையில் மாத்திரமல்ல, அறிஞர்களுக்கிடையிலும் ஒப்பு நோக்குதல்களை மேற்கொள்வதன் மூலம், இஸ்லாமிய சிந்தனையை மேலும் ஆழப்படுத்த முடியும் என்பதற்கு அவர் உதாரண புருஷராக விளங்கியுள்ளார்.

பாரதி, – இக்பால், இமாம் கஸ்ஸாலி, – டேகார்ட், இப்னு கல்தூன், – ஆகஸ்ட் காம்ட் போன்ற ஆளுமைகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வுகள் அவற்றுள் சில.

ஆழ்ந்த வாசிப்பு, இடைவிடாத தேடல், விசால ஆய்வுப் பார்வை,

வாசிகசாலை தரிசனம், பகுப்பாய்வுத் திறன் (Analytical Ability), நேர முகாமைத்துவம், கருத்துக்களை தொகுத்து அவற்றை அழகாக முன்வைக்கும் வல்லமை என பலவற்றைக் கூறலாம். இவை தவிர, எளிமைச் சுபாவம், நடுநிலைச் சிந்தனை, ஆரவாரமற்ற போக்கு, அறிவுசார் மாற்றுக் கருத்துக்களை மதித்தல் போன்றவை அவர்களின் பேராளுமைக் குணங்களை அலங்கரிக்கும் மேலதிக நற்பண்புகள். முடிவாக, ஆராய்ச்சி வெளியீடுகள், அறிவியல் பங்களிப்புகள் மூலம் இலங்கை முஸ்லிம் புலமைத்துவ நெறியில் வசந்தமாக காட்சியளிப்பவர் மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர் விட்டுச் சென்ற அறிவுசார் மரபு சமூகத்தில் விசாலப்படுத்தப்பட வேண்டும். அவரின் இஸ்லாமிய சிந்தனைப் பணி புதுமை வளர்க்கும் பெரு நெறி என்பதால், அவரின் கருத்துக்களும் சிந்தனைகளும் ஆழப்படுத்தப்பட வேண்டும். அவர் முன்மொழிந்துள்ள ஆராய்ச்சிப் பரிந்துரைகள் சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

களம், காலம் அறிந்து சமூகத்துக்கு அவர் சேவை ஆற்றினார் என்ற வகையில், சமூகத்தை அவர் புரிந்து கொண்டார். சமூகம் அவரை நன்கு புரிந்து கொண்டதா? எனும் வினாவுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

“வல்லோன் அல்லாஹ் அன்னாரின் நற்செயல்களையும் சமூகப் பணிகளையும் பொருந்திக் கொண்டு மேலான ​ெஜன்னத்துல் பிர்தௌஸில் அவரை நுழைவிப்பானாக”!

ஆமீன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT