Thursday, May 9, 2024
Home » தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீ விபத்தில் மருந்தகம் எரிந்து நாசம்

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீ விபத்தில் மருந்தகம் எரிந்து நாசம்

- நோயாளிகள் உள்ளிட்ட எவருக்கும் பாதிப்பில்லை

by Rizwan Segu Mohideen
October 1, 2023 11:28 am 0 comment

– களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் செந்தில் பணிப்புரை

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது.

வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள்,ஆய்வு கூட உபகரணங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாகி சாம்பராகியுள்ளன.

காலை 6.00 மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது

தீயை அணைப்பதற்காக திருகோணமலை தீயணைக்கும் பிரிவு மற்றும் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் உள்ளிட்டோர் சென்று தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம், தம்பலகாமம் குறூப் நிருபர் – ஏ.எச். ஹஸ்பர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT