Sunday, April 28, 2024
Home » மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியில் 2023 இல் இதுவரையில் 2,500 அகதிகள் பலி

மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியில் 2023 இல் இதுவரையில் 2,500 அகதிகள் பலி

by Rizwan Segu Mohideen
September 30, 2023 10:06 am 0 comment

மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் முயற்சியில் இந்த ஆண்டில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல்போயிருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் சுமார் 186,000 பேர் ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ளனர்.

அகதிகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகரகத்தின் பணிப்பாளர் ருவேன் மெனிக்திவேலா ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் பேசியபோது, 186,000 மக்கள் மத்தியதரைக் கடலை கடந்திருப்பதோடு இதில் 83 வீதமான சுமார் 130,000 பேர் இத்தாலியை அடைந்துள்ளனர் என்றார்.

மத்தியதரைக் கடலைக் கடந்து மக்கள் சென்றடைந்த மற்ற நாடுகளில் கிரேக்கம், ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் மோல்டா நாடுகளும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அபாயகரமான கடல் பயணத்தை கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல்போனவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக பாதுகாப்புச் சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செப்டெம்பர் 24 இற்குள் 2023 இல் மாத்திரம் 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணமல்போயுள்ளனர்” என்று மெனிக்திவேலா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை 2022இல் இந்தக் காலப்பகுதியில் பதிவான 1,680 உயிரிழப்பு அல்லது காணாமல்போனவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் அதிகரிப்பாகும்.

இந்த உயிரிழப்புகளில் முடிவை காணவில்லை என்றும் ஐரோப்பாவுக்காக தரைவழிப் பாதையும் இதைப்போன்றே ஆபத்து மிக்கது என்றும் மெனிக்திவேலா கூறினார்.

இதில் துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளில் இருந்து தரை வழியாகப் பயணித்து கடலை கடப்பதற்கான புறப்படும் நாடுகளான துனீஷிய மற்றும் லிபிய கடற்கரை வரையான பயணப் புள்ளிகள் தொடர்பிலும் பாதுகாப்பு சபையிடம் விபரிக்கப்பட்டது.

“மக்கள் அவதானத்தை பெறாத நிலையில் நிலங்களில் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன” என்று மெனிக்திவேலா குறிப்பிட்டார்.

துனீஷியாவில் இருந்து மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியில் 102,0000க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 260 வீதம் அதிகரிப்பாக இருப்பதோடு லிபியாவில் இருந்து 45,000க்கும் அதிகமானவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT