Friday, May 3, 2024
Home » பொருளாதார மறுசீரமைப்பில் பாராட்டத்தக்க முன்னேற்றங்கள்

பொருளாதார மறுசீரமைப்பில் பாராட்டத்தக்க முன்னேற்றங்கள்

by sachintha
September 29, 2023 6:03 am 0 comment

கடந்த வருடத்தின் ஆரம்ப கட்டத்தில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கை, குருகிய காலப்பகுதிக்குள் மீட்சி பெற்று மறுமலர்ச்சிப்பாதையில் பிரவேசித்திருக்கிறது. இதனையிட்டு உலகின் பல நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இலங்கையைப் பாராட்டியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைப் பதவியை ஏற்றது முதல் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் விரிவான அடிப்படையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அவ்வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை நாடும் மக்களும் அனுபவிக்கும் வாய்ப்பை குருகிய காலத்திற்குள் பெற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்களுக்கு அளிக்கப்படுகின்ற நிவாரணங்களும் சலுகைகளும் அவற்றின் பிரதிபலன்களே அன்றி வேறில்லை.

இலங்கை முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலான உதவி, ஒத்துழைப்புகளும் இதற்கு பெரிதும் பங்களித்துள்ளன.

குறிப்பாக வீழ்ச்சி கண்ட நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கடன் சலுகை நீடிப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அந்நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சார்த்திடப்பட்டது. அத்தோடு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்த இந்நிதியம், அக்கடன் தொகையில் முதற்கட்ட தொகை நிதியையும் மார்ச் மாதமே வழங்கியது.

இது பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உதவியதோடு சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பில் நம்பிக்கைகள் ஏற்படவும் வித்தூன்றின.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பயனாக 2022 செப்டெம்பரில் 70 சதவீதமாகப் பதிவாகிய பணவீக்கத்தை, இவ்வருடம் (2023) செப்டெம்பர் மாதம் 2 சதவீத மட்டத்திற்கு கொண்டுவர முடிந்துள்ளது. இவ்வருடம் மார்ச் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கும் அந்நியச் செலாவணியும் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருமானப் பெறுகைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேநேரம் கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகளிலும் இந்நாடு சிறப்பான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டம், ஊழல் ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான முக்கிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துதல், வெளியகக் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துதல் என்பவற்றின் மூலம் கடன் ஸ்திரத்தன்மையை மீள அடைந்து கொள்வதிலும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் அந்நியத்தின் பிரதிநிதிகள் குழு பீட்டர் பீரேவுர் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது. இக்குழுவினர் இவ்வாரம் 26 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றின் உயரதிகாரிகளுடன் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்தினர். இக்கூட்டங்களின் போது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணயப் பிரதிநிதிகள் இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அச்சமயம் பீட்டர் பீரேவுர் ‘பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மீட்சி பெற்றுவரும் இலங்கை, மக்கள் பாரிய சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பிட்டுக் கூறத்தக்கவாறான மீண்டெழும் தன்மையினை வெளிக்காட்டியுள்ளனர். மிகக் கடினமானதும், மிக அவசியமானதுமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்கக முன்னேற்றங்களை காண்பித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாடு குருகிய காலப்பகுதிக்குள் மீட்சி பெற்று வருவதை சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளின் கூற்றுக்களும் உறுதிப்படுத்தி நிற்கின்றன. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அங்கீகாரமாக இக்கூற்றுக்களை நோக்க முடியும். இது நாட்டின் தலைமைக்கும் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியாகும்.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். நாட்டின் மறுமலர்ச்சிக்கு அது இன்றியமையாததாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT