Saturday, May 11, 2024
Home » தாதியர்களின் அலட்சியபோக்கு; பிறந்த சிசு தரையில் விழுந்து உயிரிழப்பு

தாதியர்களின் அலட்சியபோக்கு; பிறந்த சிசு தரையில் விழுந்து உயிரிழப்பு

by Prashahini
August 14, 2023 3:24 pm 0 comment

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிரசவத்தின் போது குழந்தை ஒன்று தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிசு நேற்று (13) காலை உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம், ரம்பேவ, கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். எனினும் அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன்போது, துரதிஸ்டவசமாக பிரவசத்தின் போது சிசு நழுவி தரையில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து குறித்த சிசு உடனடியாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தது.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் பிரசவ நேரத்தில், தாதியர்களின் அலட்சியம் காரணமாகவே தங்களின் குழந்தை தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதவாறு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து தலை பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும், குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும், இதயக் கோளாறு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும் இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அவசர அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT