Monday, May 20, 2024
Home » நற்செயல்கள் வழியாக தீமையை வெல்வோம்

நற்செயல்கள் வழியாக தீமையை வெல்வோம்

by sachintha
July 25, 2023 12:19 pm 0 comment

பொதுக்காலத்தின் 1ஆம் ஞாயிறாக இந்த ஞாயிறு சிறப்பிக்கப்பட்டது. ஞாயிறு வாசகங்கள் நற்செயல்கள் வழியாக தீமையைவென்று இறையாட்சியை விதைப்போம் என்ற சீரிய சிந்தனையை நம் உள்ளத்தில் விதைக்கின்றன

துறவு மடம் ஒன்றில் குரு அமர்ந்து தனது சீடர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அன்அவருடய போதனை நன்மை தீமைக் குறித்து அமைந்திருந்தது.

அப்போது அவர் தனது சீடர்களைப் பார்த்து, “ஒவ்வொரு மனிதருடைய உள்ளத்திலும் நன்மை தீமை என்ற இரண்டுவிதமான ஓநாய்கள் வாழ்கின்றன. அவைகள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன” என்றார்.

உடனே எழுந்த சீடர் ஒருவர், “அப்படியென்றால், அந்தச் சண்டையில் இறுதியில் எந்த ஓநாய் வெற்றிபெறும் என்றும் ஆவலாய்க் கேட்டார். “நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவூட்டி வளர்க்கிறாயோ அந்த ஓநாய்தான் இறுதியில் வெற்றிபெறும்” என்றார்

குரு. அதற்கு அச்சீடர், சற்று புரியும்படி கூறுங்கள் குருவே” என்றார்.

“நீ நன்மை என்ற ஓநாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ற காரியங்களைச் செய்தால், நலமான காரியங்கள் உன் வாழ்வில் நிகழும். அதற்குப் பதிலாக, நீ தீமையென்ற ஓநாய்க்கு முக்கியத்துவம் கொடுத்தால், தீமையான காரியங்களைத்தான் நீ அறுவடை செய்வாய்” என்றார். குருவின் இந்த விளக்கத்தை அனைவருமே புரிந்துகொண்டனர்.

பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறாக இந்த ஞாயிறு சிறப்பிக்கப்பட்டது. ஞாயிறு வாசகங்கள் நற்செயல்கள் வழியாக தீமையைவென்று இறையாட்சியை விதைப்போம் என்ற சீரிய சிந்தனையை நம் உள்ளத்தில் விதைக்கின்றன.

முதல் வாசகம் என்றுமுள்ள இறைவனின் நீதித் தீர்ப்பையும் அவரது வலிமையையும் ஆற்றலையும் எடுத்துரைக்கின்றது. குறிப்பாக, ‘அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது’ என்ற இறைவார்த்தைகள் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும், ‘வயலில் தோன்றிய களைகள்’ பற்றிய உவமையில் வரும்,

அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்ற இறைவார்த்தைகளுடன் ஒத்துப்போகின்றன.

கடந்த வார ஞாயிறன்று, ‘விதைப்பவர் உவமை’ பற்றி கூறி அதற்கு விளக்கமளித்த ஆண்டவர் இயேசு, இவ்வாரம் அதனைத் தொடர்ந்து, ‘வயலில் தோன்றிய களைகள்’, ‘கடுகு விதை’, ‘புளிப்பு மாவு’ என மூன்று உவமைகள் வழியாக இறையாட்சிப் பற்றியும் இவ்வுலகின் முடிவில் நிகழவிருக்கும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

அவை ஒவ்வொன்றையும் நாம் சிந்திப்போமானால்,

வயலில் தோன்றிய களைகள் உவமை

உண்மையில் மானிடரின் வாழ்வு வியப்புகள் நிறைந்த ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்படுகின்றனர். அப்படியென்றால், இயல்பில் எல்லோருமே நல்லவர்களாகப் பிறக்கின்றோம்.

அப்படி கடவுளுக்குரிய நன்மைத்தனங்களுடன் பிறக்கும் நாம், வளர வளர சாத்தானுக்குரிய தீமைகளின் இயல்புகளும் நம்முடன் சேர்ந்து வளரத் தொடங்குகின்றன. இவற்றைக் கொணர்வது சாத்தான்தான்.

எனவேதான், இவ்வுலகில் 80 விழுக்காடு தீமை நிறைந்த மனிதர்களையும், வெறும் 20 விழுக்காடு மட்டுமே நன்மைத்தனம் கொண்ட நல்ல மனிதர்களைப் பார்க்கின்றோம். அதாவது பாவத்தின் செயல்பாடுகள் நன்மையின் செயல்பாடுகளைவிட அதிகம் இருக்கின்றன.

அப்படியென்றால் தீமையானவர்களோடு இணைந்து நல்லவர்களும் வாழவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். “ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன” என்ற இயேசுவின் வார்த்தைகள் இதனை உறுதிசெய்கின்றன.

ஆக, நாம் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்களாக வாழ முற்படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தீமையின் ஆதிக்கத்தோடுப் போராடவேண்டியிருக்கும் என்பதை இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

அதேவேளையில், தீமைகளே அல்லது தீமையாளர்களே இல்லாமல் வாழமுடியாது என்றால் அதற்குச் சாத்தியமில்லை என்றுதான் கூறவேண்டும். மேலும் நமது வேண்டுகோளுக்கிணங்க தீமைகளையோ அல்லது தீமையாளர்களையோ கடவுள் அழிக்க முற்படும்போது அது ஒருவேளை நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

“ஆண்டவரே, இப்படி அநியாயமும் அக்கிரமும் செய்கிறவர்களோடு என்னையும் சேர்ந்து வாழ வச்சுட்டீங்களே” என்று நாம் பலநேரங்களில் புலம்பித் தவிக்கின்றோம். தீமையாளர்களின் கொடுஞ்செயல்களைக் கடவுள் ஒருபோதும் மறந்துவிடுவதில்லை என்பதையும், அவர்கள் இறுதிநாளில் பழிதீர்க்கப்படுவர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

நமது கிராமங்களில், “, கடவுளின் செயல்களிலிருந்து நீ எப்பவும் தப்பவே முடியாது, அவரது கணக்கு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்” என்று கூறுவதுண்டு. இதனை நாம் எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். அதேநேரம், நாம் தீமையாளர்களுடன் ஒன்றாக வாழ நேர்ந்தாலும், நமது நன்மைத்தனங்களிலுருந்து ஒருபோதும் தடம்புரண்டு விடாமலும் பாதை மாறிப் பயணிக்காமல் இருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உயரிய பாடத்தை இயேசு இவ்வுவமையின் வழிநின்று நமக்குக் கற்றுத்தருகின்றார். இப்போது நற்செய்தி கூறும் அப்பகுதியை வாசித்தால் நமக்கு புரியும். நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவார்.

நன்மை தீயை மூட்டுவோம்

உலகம் முழுவதும் தீமைக்கு எதிராக நன்மை தீயை மூட்ட நாம் அழைக்கப்படுகிறோம். இதன் காரணமாகவே, “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்” (லூக் 12:49-50) என்கின்றார் இயேசு.

இங்கே இயேசு மண்ணுலகைத் தீயினால் அழிக்க வந்ததாக நாம் தவறான பொருள்கொள்ள கூடாது. மாறாக களைகளாக முளைத்து இவ்வுலகைத் தீமையால் அழிக்கத் துடிக்கும் சாத்தானின் செயல்களுக்கும், கொள்கைகளுக்கும் எதிராகத் தீமூட்ட வந்ததாகக் கூறுவதாகவே நாம் உண்மைப் பொருள் கொள்ளவேண்டும்.

சாத்தானின் தீயசெயல்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் இயேசுவுக்குத் துணைநின்ற தூய ஆவியார் நமக்கும் துணையாக இருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாகவே, “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.

நம்மைக் காக்க ஆண்டவராம் இயேசு நம்முடன் பயணிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வோம். இயேசுவின் வழியில் நற்கோதுமை பயிர்களாய், கடுகு விதைகளாய், புளிப்பு மாவாய் புவியில் வாழ்ந்து இறையாட்சியை எட்டுத்திக்கும் பரவிடச் செய்வோம்.

அருட்பணி

செல்வராஜ் சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT