நேற்றையதினம் மாத்திரம் 3 துப்பாக்கிச்சூடுகள்; பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை

- சந்தேகநபர்கள் தொடர்பிலோ, காரணம் தொடர்பிலோ இதுவரை கண்டறியப்படவில்லை

நேற்றையதினம் (24) மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற 3 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் இரண்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றைய சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1ஆவது துப்பாக்கிச்சூடு
அந்த வகையில் நேற்று (24) பிற்பகல் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

2ஆவது துப்பாக்கிச்சூடு
நேற்று (24) பிற்பகல் அஹுங்கல்ல, கலவெஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் பலப்பட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3ஆவது துப்பாக்கிச்சூடு
நேற்றையதினம் (24) பிற்பகல் வேளையில் ஊரகஸ்மங்ஹந்தி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூகுடுமுல்ல சந்தியில் உள்ள முடி வெட்டும் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த நிலையத்தின் உரிமையாளர் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மரணமடைந்தவர் ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபராவார்.

இச்சம்பவங்கள் தொடர்பான சந்தேகநபர்கள் தொடர்பிலோ துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட காரணம் தொடர்பிலோ இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...