இலங்கை - நியூஸிலாந்து சபாநாயகர்கள் இடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கை - நியூஸிலாந்து சபாநாயகர்கள் இடையில் விசேட கலந்துரையாடல்-Discussion Between the Speakers of Sri Lanka and New Zealand

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான  விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) முற்பகல் வீடியோ தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது.

இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தை அண்மையில் திறந்தமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கிடையில் 65 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் இருதரப்பு உறவுகள் இதன்மூலம் மேலும் விரிவடைவதாகச் சுட்டிக்காட்டினார்.

நியூஸிலாந்து சபாநாயகரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினரான வனுஷி வோல்டர்ஸ் மற்றும் இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபல்டன் ஆகியோர் வீடியோ தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்டனர்.

கொவிட் சவால்கள், தேர்தல் முறைமை, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம், பொருளாதார சவால்கள், மதத் தீவிரவாதம் மற்றும் விளையாட்டுத்துறை என்பன தொடர்பில் இரு நாடுகளினதும் அனுபவங்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எதிர்காலத்தில் இலங்கை - நியூஸிலாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், அதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நியூஸிலாந்து பாராளுமன்ற தூதுக்குழுவினரை இலங்கைக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்ளுமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது அழைப்பு விடுத்தார்.

இலங்கையில் பிறந்து தற்பொழுது நியூசிலாந்தில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் வனுஷி வோல்டர்ஸ் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிடுவதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.