தியாகிகளின் அர்ப்பணிப்பினால் வென்றெடுத்த இந்திய சுதந்திரம்

இந்தியாவின் 74 -வது ஆண்டு சுதந்திர தினம் ஓகஸ்ட் 15-ம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கொடியேற்றி, மறைந்த சுதந்திர வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. தலைநகர் டில்லியில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினரின் அணிவகுப்பும் நடைபெறுகின்றன.

1947 ஓகஸ்ட் 15இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடாகியதைக் குறிக்கும் இந்த நாள் இந்தியாவில் அரசாங்க விடுமுறையாகும். இன்றைய நாளில் இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றுகிறார். இவ்விழாவில் முப்படை அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்படுகிறது.

இதேவேளை இந்திய மாநிலங்களின் தலைநகரங்களிலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பாடசாலை, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முதன்முதல் காரணம் தேசியத் தலைவர்களும், போராட்ட வீரர்களுமேயாவர். அந்நியர்களுக்கு எதிராக துணிச்சலுடன் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரை பலர் இழந்துள்ளனர். அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை இந்திய மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

‘1947, ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் நினைவில் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அன்றைய தினமே பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற தினமாகும்.

ஆங்கிலேயர்கள் தமது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், இந்தியர்கள் பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அதன் பயனாகவே சுதந்திரத்தை வென்றெடுக்க முடிந்தது.

மகாத்மா காந்தி சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கி அஹிம்சை ரீதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி அடித்தளம் இட்டார். காந்தியின் நாமம் இந்தியாவில் என்றும் நிலைத்திருக்கும்.‘அமைதியால் மட்டும்தான் சுதந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார் காந்தி. அப்போதுதான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி_-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940இல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டன. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய இராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜப்பான் உதவியுடனுடனும் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946இல் ‘ஆர்.ஐ.என் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.

சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பிய தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன், ஜூன் 3 ஆம் திகதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லிம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவித்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஓகஸ்டு 14 ஆம் திகதி பாகிஸ்தான் தனிதேசமாக பிரிந்து சென்றது. மேலும் இந்தியா 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நள்ளிரவில் சுதந்திர தேசமானது.

சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் பட்டேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.


Add new comment

Or log in with...