விமான நிலைய Duty-Free வர்த்தக நிலையங்கள் திறப்பு

விமான நிலைய Duty-Free வர்த்தக நிலையங்கள் திறப்பு-Duty Free Shops in BIA Open From Today

கடவுச்சீட்டு, தனிமைப்படுத்தல் ஆவணங்களுடன் வரவும்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பிய இலங்கையர்கள் விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையின்றி பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, கடந்த மார்ச் 09 முதல் மே 31 வரையான காலப் பகுதியில் நாடு திரும்பிய பயணிகளுக்கு மாத்திரம் குறித்த சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டை கொண்டு வருவதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களில் வழங்கப்பட்ட சான்றிதழின் மூலப் பிரதியையும், தாம் சுய தனிமைப்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் பிரதேசய பொதுச் சுகாதார உத்தியோகத்தரின் தனிமைப்படுத்ல் சான்றிதழையும் கட்டாயம் விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையத்தில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான வசதிகள் இல்லை என்பதால், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, உரிய  டொலர் பெறுமானத்தை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறில்லையெனின் கடனட்டைகள் மூலம் தமது கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 09 ஆம் திகதி, விமான நிலைய சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் சிக்கியிருந்த, சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...