நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் CCD 5 மணி நேர வாக்குமூலம்

நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் CCD 5 மணி நேர வாக்குமூலம்-CCD Records 5 Hr Statement From Gihan Pilapitiya

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றப் பிரிவினர் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய நீதிபதி கிஹான் பிலாபிட்டியிடமிருந்து நேற்று (19) பிற்பகல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் பிலபிட்டி மற்றும் தம்மிக ஹேமபால ஆகிய நீதிபதிகள் மூவரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறுமாறு கடந்த வியாழக்கிழமை (16) ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க மற்றும் தம்மிக ஹேமபால ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்வுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...