அச்சத்துடனேயே நான் இன்னும் வாழ்கின்றேன் | தினகரன்

அச்சத்துடனேயே நான் இன்னும் வாழ்கின்றேன்

அரசியல் சார்ந்தவர்களாலேயே எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. எனது மகன் அண்மைக் காலம் வரை தனது தந்தையை ஒரு தடவையாவது  மீண்டும் காணக் கிடைக்கும் என  எதிர்பார்த்திருந்தான். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.

கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட பிரபல ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்த்யா எக்னலிகொடவுடன் சந்திப்பு

அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எங்கள் வேதனை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை

சந்த்யா எக்னலிகொட தனது வாழ்க்கையையே போராட்டமாக்கிக் கொண்டவராவார். பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான இவர், தனது கணவர் கடத்தப்பட்ட தினத்திலிருந்து தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்.

பிரகீத் எக்னலிகொட காணாமற் போனமை தொடர்பாக ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்ட மாஅதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒன்பது வருடமும் ஏழு மாதமும் கடந்துள்ள இன்றைய நிலையில் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பாக அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு அவர் எமக்கு விளக்கமாகப் பதில் அளித்தார்.

கேள்வி: ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதல்லவா?

பதில்: ஆம், பிரகீத் தொடர்பான சம்பவத்துக்கு நியாயம் நிலைநாட்டப்படுமென கூறியே 2015இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 2015இல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2016இல் அநேகமான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் 2016 பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு வந்து பெரும் போராட்டம் நடத்தியதன் காரணமாக அன்று தொடக்கம் விசாரணை மந்த கதியில் நடைபெற்றது. விசாரணைகளுக்கு பெரும் தடை ஏற்பட்டது. விசேடமாக இராணுவத்தினர் இவ்விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்கவில்லை. கொடுத்த தகவல்களும் பொய்யானவை. எவ்வாறாயினும் தொடர்ந்து மாஜிஸ்திரேட், குற்றவிசாரணை திணைக்களத்திடம் வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆவணங்களை தயாரித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு வழங்கும்படி கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு ஆவணங்களை அனுப்பினார்கள். மீண்டும் அந்த ஆவணங்கள் சட்ட மாஅதிபரால் பிரதம நீதியரசரிடம், வழக்குத் தொடுப்பதற்காக மூவரடங்கிய உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படியான வேண்டுகோளுடன் ஒப்படைக்கப்பட்டன. மீண்டும் பிரகீத் விடயம் அரங்கிற்கு வந்துள்ளது. தற்போது ஓரிரு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இதனை தேர்தலுக்கு முன்னர் முடிப்பார்களா அல்லது மீண்டும் மேலே வந்தது கீழே போய் விடுமா என்று சொல்ல முடியாது. அரசாங்கம் மாற்றமடைந்தால் நிச்சயம் பெரும் குழப்பம் ஏற்படும்.

கேள்வி: அன்று விசாரணை வேகமாக நடைபெற்றது என எவ்வாறு கூறுகின்றீர்கள்?

பதில்: நான் வழக்கு தொடுக்கும் நடவடிக்கை காரணமாக அதனை அவ்வாறு கூறுகின்றேன். ஆனால் கீழ் மட்டத்திலேயே இந்த வழக்கு தொடுக்கும் நிகழ்வு இடம்பெற இருந்தது. இதற்கு சாட்சி இல்லை என்ற அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டு இல்லாமல் இந்த குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு, இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சிறிய தண்டனை வழங்கி வழக்கை முடிக்க வழி இருந்தது. ஆனால் ஓகஸ்ட் 07ம் திகதி சட்ட மாஅதிபருக்கு நான் கடிதம் எழுதியதால்தான், இவ்வாறான யோசனை பிரதம நீதியரசரிடம் சென்றது. இந்த விரைவுபடுத்தலை இரண்டு பிரிவுகளில் காண்கின்றேன். ஒன்று ‘நாம் இதனை செய்தோம்’ என்று அதிலிருந்து விடுதலையாதல், இரண்டாவது இது உண்மையிலேயே சட்ட வரையறைக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதால், இதன் காரணமாகவே அது சட்ட மாஅதிபரால் விரைவுபடுத்தப்பட்டது.

கேள்வி: பிரகீத் கடத்தப்பட்டது 2009இல். ஆனால் அதற்கான நியாயத்தை வழங்க நீண்ட காலம் எடுக்கின்றதே?

பதில்: தெளிவாகக் கூறுகின்றேன். 2009ம் ஆண்டு சம்பவம் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது. அதனை செய்த பின்னர் அந்தச் சந்தர்ப்பத்தில் அற்கான விசாரணை நடத்தப்படவில்லை. விசாரணையை நடத்தாததோடு பொலிஸார் 2010இல் அவ்வாறான முறைப்பாடு இல்லை என்று கூறினார்கள். அதனையும் மறைக்கவே முயற்சி செய்தார்கள். சம்பவம் நடந்து 9 வருடங்களாக இதனை இந்த இடத்துக்கு, சட்டத்தின் அதிகாரத்துக்குள் கொண்டு வர பெரும் போராட்டம் நடத்தினேன். அதன் பலனாக ஏதோ ஒரு வகையில் சட்ட வரையறைக்குள், சட்ட அதிகாரத்துக்குள் இடம் கிடைக்கும் என்றால் எனக்கு நிம்மதியாகும்.அதேசமயம் மொத்தத்தில் இந்நாட்டின் குற்ற வழக்குகளுக்கான விசாரணைகளுக்கு எடுக்கும் காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் வதையாகும்.

கேள்வி: இராணுவத் தளபதியால் இதற்கு அழுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக எண்ணுகின்றீர்களா?

பதில்: இராணுவத் தளபதி அழுத்தத்தைப் பிரயோகித்தாரா என்பது அல்ல நான் கண்டது. கொள்கையளவில் இராணுவம் தகவல்களை மறைக்கின்றது என்பதாகும். எந்த இராணுவத் தளபதி வந்தாலும் அதுதான் நடக்கும். சிலவேளை இராணுவத் தளபதி அறிந்தோ அறியாமலோ இவை நடந்திருக்கலாம்.

கேள்வி: பத்து வருடங்களாக நியாயத்துக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டீர்கள்?

பதில்: நான் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. நான் எனக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் எனது போராட்டத்துக்காகவும் வாழ்வுக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். எனது போராட்டமானது பாதையில் அமர்ந்து போராடுவது, யாரையேனும் சந்திப்பது, யாருக்காவது கடிதம் எழுதுவது...இவ்வாறு எனது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்துவதாக அமைந்தது. இவை எனது போராட்டத்தின் பகுதிகளேயாகும்.

கேள்வி: சர்வதேச மனிப்புச் சபை இந்த விசாரணையை விரைவுபடுத்த எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கியது?

பதில்: சர்வதேச மன்னிப்புச் சபை

அமைப்பு 2010ம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் பல வழிகளில் உதவி செய்தது. அவர்கள் தபாலட்டை மூலம் போராட்டமொன்றை நடத்தினார்கள். அவர்கள் ஒரு வருடத்துக்குள் 5,000, 6,000 தபாலட்டைகளை எனக்கு வழங்கியுள்ளார்கள். உலகில் பல நாடுகளிலிருந்தும் என்னுடன் பலர் இணைந்து கொண்டார்கள். இணையத்தில் தொடர்ந்து பிரகீத் தொடர்பாக விடயங்களை வெளியிட்டதோடு கடிதங்களையும் எழுதினார்கள். பிள்ளைகளின் கல்விக்காகவும் அவர்கள் உதவி செய்தார்கள்.

கேள்வி: உங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் நிறைவு அடைந்துள்ளதா?

பதில்: அது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நான் அதில் குறைவு ஏற்படும் என எண்ணவில்லை. அது அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலுள்ள மோசமான நிலைமை அந்த அச்சுறுத்தல்கள் அரசியல் ரீதியாக இணைந்தவர்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. அரசியல் வட்டத்துக்குள் அவை நடைபெறுவதால் அது திடீரென ஏற்பட்ட சம்பவமல்ல. அது உயிருக்கு அச்சுறுத்தலாகும்.

கேள்வி: பிரகீத் என்னெலிகொட ஊடகவியலாளர் அல்லவென ஊடகவியலாளர்களே கூறுகின்றார்களே... இதனை நீங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றீர்கள்?

பதில்: ஊடக கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு தகவல்களைப் பெற்று வருபவர்கள் அல்லது அரசியல்வாதிகள் பற்றி தகவல் அறிவிப்பவர்களே ஊடகவியலாளர்கள் என எண்ணுகின்றார்கள். பிரகீத் அவ்வாறான ஊடகவியலாளரல்லர். அவர் அனைத்து அரசியலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக எழுதினார். மஹிந்த ராஜபக்ஷவின் குழப்பம் எவ்வாறு நாட்டுக்கு குழப்பமாகின்றது என்று எழுதினார். அதனால்தான் பிரகீத் காணாமற் போனார். அதனால்தான் அவர்களுக்கு அவரை மெளனிக்கச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சாதாரண ஊடகவியலாளராக இருந்திருந்தால் இன்றும் இருந்திருப்பார்.

கேள்வி: பிரகீத் காணாமற் போனதன் பின்னர் கடந்து போன பத்து வருடங்களில் ஒரு குடும்பத் தலைவியாக ஏற்பட்ட மனப் பாதிப்பை எவ்வாறு தாங்கிக் கொண்டீர்கள்?

பதில்: அவ்விடயம் மிகவும் பயங்கரமானது. ஏனென்றால் எமக்கு பிரகீத் வருவாரா, வரமாட்டாரா, என்ன நடந்தது,எவ்வாறு நடந்தது? எனத் தெரியாது. எமக்கு ஒவ்வொரு நாளும் அந்த குழப்பத்துக்கும் எண்ணங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்நிலைமை உலகில் யாருக்கும் ஏற்பட வேண்டாம் என்பதே எனது பிரார்த்தனையாகும். ஒரு உதாரணம் கூறுகின்றேன். எனது மகன் அண்மைக் காலம் வரை அவரின் தந்தையை ஒரு தடவையாவது காண கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தான். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அது தான் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் இயல்பு நிலைமையாகும். அந்த வேதனை, அனுபவம் ஒரு நாளும் உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது.

கேள்வி: புதிய சட்ட நடவடிக்கை காரணமாக எதிர்காலம் எவ்வாறு அமையும்?

பதில்: எவ்வாறாவது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போதுள்ள நிலைமையில் பிரச்சினையுண்டு. அதாவது அரசியல் சூழ்நிலை, அரசியல் எவ்வாறு மாற்றமடையும் என யாராலும் கூற முடியாது. கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வருவார் என தற்போது கூறுகின்றார்கள். எதிர்காலத்தில் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தாலும் நீதிமன்றத்தாலும் நீதி கிடைப்பது எவ்வாறு இருந்தாலும், எனது உயிருக்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் என்னையும் எனது பிள்ளைகளையும் எவ்வாறு நடத்துவார்கள் என்ற கேள்வியே எழுகின்றது. நிச்சயமாக அது நல்ல நிலைமையாக இருக்காது.

கேள்வி: காணாமற் போனோருக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்குவது குறித்து அரசு கொடுத்த வாக்குறுதி அவர்களுக்கான பிரச்சினைக்கு போதுமான தீர்வாகுமா?

பதில்: அந்த அத்தாட்சிப் பத்திரம் போதுமானதல்ல. ஏனென்றால் உண்மை மற்றும் நியாயமே கிடைக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு காணாமற் போனார்கள்,உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா? போன்ற சரியான தீர்வையே அரசாங்கம் வழங்க வேண்டும். காணாமற் போனோரின் அத்தாட்சிப் பத்திரம், வங்கி நடவடிக்கைகளுக்கு, காணி பிரச்சினைகளுக்கு உதவலாம். அவ்வாறில்லாமல் காணாமற் போனோரின் குடும்பங்களுக்கு அந்த அத்தாட்சிப் பத்திரம் ஒருபோதும் போதுமானதல்ல. ஏனென்றால் எமக்கு உண்மையும் நியாயமுமே தேவை. அதற்கு அத்தாட்சிப் பத்திரம் அவசியமில்லை.

கேள்வி: பிரகீத் என்பவர் உங்கள் குடும்பத் தலைவன். அவர் காணாமற் போன பின்னர் குடும்பப் பொருளாதாரம் குறித்து மற்றும் என். ஜீ. ஓக்கள் பற்றி கூறப்பட்ட வதந்திகளை பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: சில விடயங்கள் குறித்து மிகவும் கவலையாக உள்ளது. குறிப்பாக இந்த என். ஜீ. ஓ லேபல் பற்றியது. 09 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். அக்காலத்தில் நான் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர்ந்து என்னால் ஒரு வேலையையும் செய்ய முடியாதிருந்தது. ஏனென்றால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் பல வேலைகளை செய்தேன். உணவுப் பார்சல்களை விற்றேன். எனது சகோதரர்கள் உதவி செய்தார்கள். இன்றும் எனக்கு உதவுகின்றார்கள். சில நிறுவனங்களும் உதவி செய்தன. குறிப்பாக உபுல் ஜயசூரிய. அதனை நான் என்றும் மதிக்கின்றேன். நண்பர்களும், நண்பர் அல்லாதவர்களும் உதவி செய்தார்கள். சில வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் நான் வாழ்வதற்கு உதவி செய்தன. அவை இலங்கையிலுள்ள அமைப்புகளல்ல. எனக்குத் தெரியும் என்னை ‘டொலர் காகம்’ என்று கூறுகின்றார்கள். உணவு தயாரிக்கும் அலுமினியப் பாத்திரங்களை வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்வதன் மூலம் சிறிதளவாவது பணத் தேவையை நிவர்த்தி செய்து கொள்கின்றேன்.


Add new comment

Or log in with...