பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்

மாற்று எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பிற்கும் குழப்பத்துக்கும் அஞ்சாத அரசாங்கம் பெரும் அமளி துமளிக்கும் மத்தியில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தினால் அதிகரிக்கும் சட்டமூலத்தை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

மாற்று எதிர்க்கட்சியினர் சபை நடுவில் திரண்டு மோசமாக குழப்பிய போதும் அதனை பொருட்படுத்தாமல் விவாதம் இடம்பெற்றதோடு அரை மணித்தியாலத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது. தினப்பணிகளைத் தொடர்ந்து மாற்று எதிர்க்கட்சியை அங்கீகரிப்பது தொடர்பான சர்ச்சை இடம்பெற்றது.

இது தொடர்பில் சபாநாயகர் தனது முடிவை அறிவித்ததோடு அதனை ஏற்காத மாற்று எதிர்க்கட்சியினர் சபைக்கு நடுவிலும் வந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்த்தரப்பின் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

இந்த சமயத்தில் மாற்று எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ, ஹெகலிய ரம்புக்வெல, பவித்திரா வன்னியாராச்சி உட்பட 40ற்கும் அதிகமான ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலுக்கு முன்பாக குழு கோசம் எழுப்பினர்.

இந்த சமயத்தில் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான கயந்த கருணாதில, ஹரீன் பெர்னான்டோ உட்பட 20ற்கும் அதிகமான ஆளும்தரப்பு எம்பிக்கள் பிரதமரின் ஆசனத்துக்கு முன்பாக காவல் அரண்போல் நின்று அவரைக்கு உரையாற்ற பாதுகாப்பு வழங்கியவாறு நின்றனர். மற்றொரு குழுவினர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போட்டியாக தாமும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

எதிர்த்தரப்பின் கூச்சல், கூக்குரல், இடையூ என்பவற்றுக்கு மத்தியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய பிரதமர் அதனை எதிர்த்தரப்பில் ஒரு உறுப்பினர் எதிர்ப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

பெண்களுக்கு அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் வழங்குவதை விரும்பாத எதிர்த்தரப்பினர் அதற்கு எதிராக குழப்பம் விளைவிக்கின்றனர். நாம் அதற்கான இடத்தை வழங்க முன்வந்தாலும் குழப்புவது யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைக்கு தனியான குழுவொன்றை அமைத்து தீர்க்கவேண்டியதில்லை. பாராளுமன்றத்திலேயே பேசித் தீர்க்க முடியும். இதனாலேயே பெண்களின் பிரதிநிதித்துவத்தை நூறுக்கு 25 ஆக அதிகரிக்கும் பிரேரணையை முன்வைத்திருப்பதாகக் கூறினார்.

பிரதமரின் உரையைத் தொடர்ந்து மகளிர் விவகார அமைச்சர் சந்ரானி பண்டார, பிரதி அமைச்சர் அநோமா கமகே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி மாவை சேனாதிராஜா, அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கபண்டார ஆகியோரும் உரையாற்றினர்.

சபை நடுவில் தொடர்ந்து நின்றிருந்த எதிர்த்தரப்பில் அங்கம் வகிக்கும் ஐ.ம.சு.முவினர் "எமது உரிமையை எமக்கு தா" என்று கோசம் எழுப்பியதையடுத்து, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அடங்கலான குழுவினர் "தா.." "தா.." "எமக்குத் தா" இரு கடவுச் சீட்டுக்கள் எமக்குத் தா என்று விமல் வீரவன்ச எம்பியை கேலிசெய்யும் வகையில் பதிலுக்கு கோசம் எழுப்பினார்கள்.

இந்த அமளி துமளியின்போது ஐ.தே.க அமைச்சர்கள் சிலரும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்தவாறு நடுவில் நடைபெற்ற குழப்பங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்தவாறு குழப்பங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆளும் தரப்பு உறுப்பினர்களின் உரை முடிவில் ஆளுத் தரப்பு எம்பிக்கள் கரகோசம் எழுப்பியதோடு மாற்று எதிர்க்கட்சியினர் 'ஹூ...' சத்தம் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உரையின்போது சபை நடுவிலிருந்த எதிர்தரப்பினர் முன்னரைவிட சத்தமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமைச்சர் பைசர் முஸ்தபா உரையாற்றுவதற்கு எதிர்தரப்பு இடையூறு செய்யாதிருக்க ஐந்தாறு ஆளும் தரப்பி எம்பிக்கள் காவல் அரண் போன்று அவரை சுற்றி நின்று கொண்டிருந்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் இந்த சட்டமூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். பெண்களுக்கு கௌரவமான இடத்தை பெற்றுக்கொடுக்கும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்த்தரப்பில் சிலர் எதிர்ப்பு வெளியிடுவது அகௌரவமானது என்று குறிப்பிட்ட அவர் அரசியலில் பெண்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

அரசியலில் தீர்மானத்தை எடுக்கும் சக்திகளாக பெண்கள் மாறும்நிலை உருவாக வேண்டும். முதல் பெண் பிரதமர் இலங்கையில் இருந்து தெரிவானபோதும் பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கீதா குமாரசிங்க போன்றோர் பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்குமாறு கோரிவிட்டு இன்று அதனை எதிர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பெரும் அமளிதுமளிக்கிடையில் விவாதம் நீடித்ததோடு மாற்று எதிர்த்தரப்பினரும் ஆளும் தரப்பில் ஒரு குழுவினரும் தொடர்ந்து சபை நடுவில் திரண்டிருந்தனர்.

எங்களை வெளியில் போட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இல்லாவிட்டால் சபை நடவடிக்கைகளை தொட இடமளியோம் என வாசு தேவநாணயக்கார சபாநாயகரை நோக்கி சத்தமாகக் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றினால் நீதிமன்றத்துக்கு போவதாக சத்தமாகத் தெரிவித்த தினேஷ் குணவர்த்தன எம்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசனங்களில் இல்லாத நிலையில் இதனை நிறைவேற்ற முடியாது என்றார். தொடர்ந்தும் சபையில் அமர்ந்திருந்து அமளி துமளிகளை பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதி அமைச்சர் அநோமா கமகே உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறினார்.

நகைப்புக்கிடமாகாமல் தமது அறைக்குச் செல்லுமாறு தினேஷ் குணவர்த்தன எம்பி சபாநாயகரிடம் கோரியபோதும் அவர் சபை நடவடிக்கை முடிவடையும்வரை சபையில் இருந்து விவாதத்தை வழிநடத்தினார்.

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் நேற்று மாலை 6.30 மணிவரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் உரையாற்ற இருந்தனர்.

ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்டாரவும் இவ்விவாத்தில் உரையாற்றினார். ஆனால் அவர் பேச்சை ஆரம்பிப்பதோடு எழுந்து நின்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார். இதன்போது ஆளும் தரப்பில் இருந்தவர்களும் சபை நடுவில் இருந்த ஆளும் தரப்பு எம்பிக்களும் இரு கரங்களையும் தூக்கி அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டமூலத்திற்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருத்தங்களும் மேற்படி சட்டமூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

2.30 மணிக்கு ஆரம்பமான விவாதம் 3 மணிக்கு நிறைவடைந்தது. இதயைடுத்து பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை நடுவில் இருந்த ஆளும்தரப்பு எதிர்த்தரப்பு எம்பிக்கள் சபையை விட்டு கலைந்து சென்றார்கள்.

மாற்று எதிர்க்கட்சியினர் அங்கீகரிக்குமாறு கோரி நேற்று முறையற்ற விதத்தில் ஒழுங்கீனமாக போராட்டம் நடத்துவதாக கூட்டு எதிர்க்டக்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் மாற்று எதிர்க்கட்சியின் திட்டத்திற்கு அசராது முகங்கொடுத் பிரதமர், தலைமையிலான ஆளும் தரப்பினர் சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்தி தேர்தல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...