சிறுநீரக மோசடி; விசாரணைக்கு இந்திய உதவி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடை யில் இடம்பெறும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன. இது குறித்துக் கவனம் செலுத்திய சுகாதார அமைச்சு, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது.

இது விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு பணித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் பாலித்த மஹிபால, தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்பாளர் உட்பட மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பூரண ஒத்துழைப்பு இன்மையால் விசாரணைகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான நிலையிலேயே குறித்த விடயம் பற்றி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், விசாரணை அறிக்கையின் பிரகாரம் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களும் சிறுநீரக மாற்று சிகிச்சை மோசடிக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், மருத்துவர்கள் தவறு செய்வது நிரூபனமானால் அவர்களை மருத்துவ தொழில் வான்மையில் இருந்து நீக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் சிறுநீரக மாற்று மோசடி குறித்த வினவப்பட்டது.

6 மருத்துவர்கள் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் எமக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. சி.ஜ.டிக்கு இது தொடர்பில் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. தேவையான தகவல்களை திரட்டுமாறு சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளேன். அவயவங்களை மாற்றுவது பாரிய வியாபாரமாக மாறிவருகிறது. பணம் தருவதாக வாக்களித்து அழைத்து வந்து இங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு சத்திர சிகிச்சைக்காக 28 இலட்சம் ரூபா செலவானாலும் 44.5 இலட்சம் ரூபா அறவிடப்படுகிறது.எஞ்சிய பணத்தை தரகர்களும் வேறு தரப்பினரும் பெறுகின்றனர்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் மருத்தவர்கள் ,குறித்த நபர் விரும்பி தனது சிறுநீரகத்தை வழங்குகிறாரா இல்லையா என அறிந்திருக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வழங்குவதை தடைசெய்வதற்காக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், வெளிநாட்டில் இருந்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு வருபவர்கள் சுகாதார அமைச்சிடம் முற்கூட்டியே அனுமதி பெறவேண்டும். இருந்தபோதும் உறுப்புக்களைத் தானம் செய்பவர்கள் தொடர்பில் வழங்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...