அயர்லாந்தின் பந்துவீச்சு ஆலோசகராக வாஸ் | தினகரன்

அயர்லாந்தின் பந்துவீச்சு ஆலோசகராக வாஸ்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசனை பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
எதிர்வரும் மார்ச் 08 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகும் ICC ரி20 கிண்ணத் தொடரை முன்னிட்டே, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய துணைக்கண்டத்தில் போட்டிகள் இடம்பெறுவதனால், குறித்த ஆடுகளங்கள் தொடர்பான அனுபவம் மற்றும் விளையாட்டுக்கான ஏனைய சூழல்கள் குறித்தான வாஸின் அனுபவம் மிக முக்கியமானது என அயர்லாந்து தெரிவித்துள்ளது.
 
41 வயதான, சுமார் 15 வருட அனுபவத்தைக்கொண்ட முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், தனது சிறப்பான பந்துவீச்சுப் பெறுதியாக 8 விக்கெட்டுகளுக்கு 19 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு எதிராக பெற்றுள்ளார்.
 
அடுத்த மாதம் இது குறித்தான பணிகளுக்காக அயர்லாந்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள வாஸ், அயர்லாந்து அணியில் பல திறமை மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Add new comment

Or log in with...