குவைத்திலிருந்து 90 பணிப்பெண்கள் திரும்பினர்

குவைத்திற்கு பணிப்பெண்களாகச் சென்று, அங்கு கைவிடப்பட்ட நிலையிலிருந்த 90 பணிப்பெண்கள் இன்று (13) அதிகாலை நாடு திரும்பினர்.
 
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் இலங்கை வந்த குறித்த பெண்கள் குழுவில், கடும் நோய்க்குள்ளான 2 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
தான் இருந்த வீட்டின் உரிமையாளரின் மாமாவின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த புத்தளத்தைச் சேர்ந்த மியூரின் விஜேசிங்க, போதைப் பொருள் பயன்படுத்தும் அவர், தான் சென்ற நாளிலிருந்து தன்னைத் துன்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
 
அத்துடன், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், அவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது, அவரைத் தாக்கி அறை ஒன்றினுள் வைத்து மூடிவிட்டு அவ்வீட்டிலிருந்து தப்பி தூதரகம் வந்ததாகத் தெரிவித்தார்.
 
விசா காலம் முடிவடைந்தமை, வேலை செய்யும் வீடுகளில் பல வித இன்னல்களுக்குள்ளானமை ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழில் கிடைக்காமை போன்ற பிரச்சினைகளைக் கொண்ட அப்பெண்களில் சிலர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வேலைக்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
 
இவ்வாறு நாடு திரும்பிய பெண்களுக்கு, தங்களது வீடுகளுக்குச் செல்வதற்கான பஸ் பயணச் செலவை கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியதாக அவர்களில் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
 
(படங்கள்: குமாரசிறி பிரசாத்)

Add new comment

Or log in with...