சீருடையை கிழித்து மாணவன் மீது தாக்குதல்

உடலுடன் ஒட்டியவாறு பாடசாலை சீருடை அணிந்து வந்த மாணவனின் சீருடையை கத்தரிக்கோலினால் வெட்டி, மாணவனையும் அடித்து காயப்படுத்திய சம்பவம் ஒன்று மீரிகம பிரதேசத்திலுள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
 
இது குறித்து, குறித்த பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை பொலிஸார் இன்று (20) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
 
இவ்வாறு துன்புறுத்தப்பட்ட தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த பாடசாலை மாணவன், மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
 
ஆயினும் குறித்த மாணவனின் உடல்நிலைக்கு குறிப்பிடும்படியான பாதிப்பு இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
குறித்த மாணவன், நேற்றைய தினம் (19) இறுக்கமான பாடசாலை சீருடை அணிந்து வந்ததாகவும், இதனால் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அவரது காற்சட்டை மற்றும் மேற்சட்டையின் வலது பக்கத்தை கத்தரிக்கோலினால் வெட்டியதோடு, அடித்து துன்புறுத்தியதாக, அவரது தாய் அன்றைய தினம் (19) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
குறித்த மாணவன் இன்று (20) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் மாணவனின் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
தனது கழுத்தில், ஆசிரியர் அடித்தார் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
 
குறித்த மாணவனுக்கு, இவ்வாறான இறுக்கமான சீருடை அணிய வேண்டாமென பல முறை எச்சரிக்கப்பட்டதோடு, ஒழுக்கம் பேணல் புத்தகத்தில் இது குறித்து குறிப்பு எழுதப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று (20) அத்தனகல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...