சர்வதேச விசாரணை வேண்டும: அனந்தி, சிவாஜி ஜெனீவா பயணம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதால் அதற்கு முன்னராக குழுவொன்று ஜெனீவா செல்லவிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தானும், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தம்முடன் இணையவிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துவதில் தமக்கு நம்பிக்கையில்லையென்பதையும், சர்வதேச விசாரணையொன்றே நடத்தப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்த தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், ஜெனீவாவில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை வலியுறுத்த விருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என வடமாகாணசபை அண்மையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்த நிலையில் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவா செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், உள்ளக விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவாக பிரேரணையொன்றை நிறைவேற்றவிருப்ப தாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...